செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் (தனி), திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாதக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுவதால் 5 முனை போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் பரந்தாமன் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு சென்றால் கவிழ்ப்பதற்கான எல்லா வேலையும் செய்வார். ஜனவரிக்குள் இந்த தவெக ஆட்சி கவிழும் என கூறி ஆர்.எஸ்.பாரதி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதேபோல் இன்னும் 4 மாத காலத்திற்குள் தவெக ஆட்சி கலைக்கப்படும் அல்லது ஆட்சி மாற்றம் ஏற்படும் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி: இன்னும் 4 மாத காலத்திற்குள் தவெக ஆட்சி கலைக்கப்படும் அல்லது ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று அண்ணன் எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்லியிருக்கிறார். மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆட்சி கட்டிலில் இபிஎஸ் அமருவார். அப்போது நமது கலசபாக்கம் தொகுதி, செங்கம் சட்டமன்ற தொகுதியை தமிழ்நாட்டிலே முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவோம் என்றார்.
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை நாட்டு மக்களுக்கு தந்தார்கள். அந்த வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்தார்கள். 34 சதவிகிதம் வாக்குகளை மட்டுமே பெற்று இன்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார். இது நீண்ட நாட்களுக்கு நீடிக்காது.
நான் ஆட்சிக்கு வந்தவுடனே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் ரூ. 2500 உதவித்தொகையாக தருவேன் என்று சொன்னார். இப்போது நான்கரை மாதக்காலம் முடிந்துள்ளது. இதுவரை அத்திட்டத்தை பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை. 6 சிலிண்டர் தருவதாக கூறிவிட்டு தற்போது 3 சிலிண்டர்களை தருவதாக பின் வாங்கியுள்ளனர். மக்கள் கொந்தளிப்பில் உள்ளார்கள். தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெகவுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள். இதன் பிறகு நடக்கும் இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும் என்றார்.
