மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தைத் தொடங்கி வைக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் வருகை தந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலும், அவசர ஊர்திகள் ஸ்தம்பித்த சம்பவமும் தென் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கரூரில் நடந்த தவெக மாநாட்டின் கூட்ட நெரிசலில் உயிர்ப்பலிகள் நேரிட்டது அக்கட்சிக்கு அழிக்க முடியாத வடுவாக மாறியுள்ள நிலையில், தற்போது மதுரை அரசு மருத்துவமனை அருகிலேயே மீண்டும் ஒரு பேரவலச் சம்பவம் நேர இருந்தது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தைத் தொடங்கி வைக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் வருகை புரிந்தார்.

முதல்வரை நேரில் காண ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் காலை முதலே மருத்துவமனை வளாகத்திலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் திரண்டனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மக்கள் காத்திருக்க வைக்கப்பட்டனர். சுட்டெரிக்கும் வெயிலில் நின்ற மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கூட வழங்கப்படாமல் போனது.
குடிக்க தண்ணீர் கிடைக்காததால் அடுத்தடுத்து மயங்கிய பெண்கள், குழந்தைகள் பெண்கள், சிறுவர்கள் என 15-க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து மயங்கிச் சரிந்தனர். கூட்ட நெரிசலிலும் தள்ளுமுள்ளுவிலும் சிக்கி 50க்கும் மேற்பட்டோருக்குக் கைகால்களில் காயம் ஏற்பட்டது.
மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே இந்த அவலம் நடந்ததால், மயங்கி விழுந்தவர்களையும் அவசரப் பிரிவுக்கு வந்த பிற நோயாளிகளையும் மீட்க ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்தன. ஆனால், அங்கு நிகழ்ந்த பாதுகாப்பு குளறுபடிகள் ஒட்டுமொத்தப் போக்குவரத்தையும் முடக்கியது.
சாலையின் நடுவே கான்வாய்: முதலமைச்சரின் கான்வாய் வாகனங்களும், பாதுகாப்பு அகம்படி வாகனங்களும் சாலையின் நடுவே நிறுத்தப்பட்டதால், போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. ஆபத்தான நிலையில் இருந்த நோயாளிகளுடன் வந்த ஆம்புலன்ஸ்கள் சைரன் சத்தமிட்டும் செல்ல வழியின்றிச் சாலையிலேயே நிறுத்தப்பட்டன.
ஒரு அரசு மருத்துவமனை வளாகத்தில் அவசர சிகிச்சைப் பாதையை கூட விட்டுவைக்காமல் கான்வாய் வாகனங்களை நிறுத்தியது பொதுமக்களின் கோபத்தைக் கிளறியது.
கரூரில் தவெக நடத்திய நிகழ்வின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பொதுமக்கள் பலியானது அக்கட்சியின் வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயமாகப் பதிந்தது. அந்தச் சோகச் சுவடு மறைவதற்குள், மதுரை அரசு மருத்துவமனையிலேயே மீண்டும் அதேபோன்ற ஒரு கூட்ட நெரிசல் சீர்கேடு அரங்கேறி, நல் வாய்ப்பாக தவிர்க்கப்பட்டுள்ளது.

ஒரு அரசுத் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் மேடை, மக்களின் உயிரைப் பணயம் வைக்கும் இடமாக மாறலாமா?
பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் இடத்திற்குத் தேவையான அடிப்படை குடிநீர் மற்றும் பந்தல் வசதிகளை ஏன் செய்யவில்லை? மருத்துவமனை போன்ற முக்கியமான இடத்திற்கு முதலமைச்சர் வரும்போது, ஆம்புலன்ஸ் போக்குவரத்திற்குப் பாதகமில்லாத வகையில் ஏன் பாதுகாப்புத் திட்டமிடல் செய்யப்படவில்லை?
அரசியல் மேட்டிமைத்தனமும், கெத்துக்காட்டும் கான்வாய் கலாச்சாரமும் மக்களின் உயிரை விட மேலானதா என்ற கேள்வியை இச்சம்பவம் எழுப்பியுள்ளது. கரூரின் கசப்பான பாடத்திற்குப் பிறகும், பொதுமக்களின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டியது மீண்டும் ஒரு பெரிய அசம்பாவிதத்திற்கே வழிவகுத்திருக்கும். ‘மக்கள் நலம்’ என்று முழங்கும் எந்தவொரு தலைவரும், தன் வருகையால் சாமானிய மக்களுக்கும் நோயாளிகளுக்கும் இன்னல் ஏற்படாமல் தடுப்பதே உண்மையான மக்கள் தொண்டாகும்.
