காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, நாடு முழுவதும் மாணவர்களைச் சந்தித்து கல்வி, நீட் தேர்வு, தேர்வுத்தாள் கசிவு, கல்விக்கடன் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட இளைஞர்களின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி வருகிறார். ‘Chhatron Ki Goonj’ (மாணவர்களின் குரல்) என்ற பெயரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளில் மாணவர்கள் துணிச்சலாகக் கேள்விகளை எழுப்புவதும், அவர்களுக்குப் பதிலளிக்கும் ராகுல் காந்தியின் அணுகுமுறையும் கவனம் பெற்று வருகின்றன.
டெல்லி பல்கலைக்கழக மாணவிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, “உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்த மிக ஆபத்தான காரியம் எது?” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். அதற்கு ஒரு மாணவி, “காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததுதான்!” என்று சற்றும் தயங்காமல் பதிலளித்தார். இதைக் கேட்ட அரங்கமே சிரிப்பொலியால் நிறைந்தது. ராகுல் காந்தியும் சிரித்தபடி, “ஓகே… அது உண்மையிலேயே ஆபத்தானதுதான்!” என்று நகைச்சுவையாகப் பதிலளித்தார். இந்த உரையாடல் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
மாணவர்களுடனான மற்றொரு உரையாடலில், ஹெலிகாப்டரில் காணப்படும் வளைந்த அமைப்பு ஏன் உள்ளது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குக் காற்றில் ஏற்படும் அதிர்வுகளைக் கையாள்வது தொடர்பான தொழில்நுட்ப விளக்கத்தை ராகுல் காந்தி அளித்தார். தொடர்ந்து, நான்கு சிலிண்டர்கள் கொண்ட கார் இன்ஜின் எவ்வாறு இயங்குகிறது என்பதையும் பொறியியல் மாணவர்களுக்கு எளிமையாக விளக்கினார். இதுபோன்ற உரையாடல்கள் இளைஞர்களுடன் அவர் இயல்பாகப் பழகும் தருணங்களாகப் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற ‘மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சியிலும் ராகுல் காந்தி தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடினார். நீட் தேர்வு, கல்விக்கடன், கல்வி வாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்கள் தங்களது கேள்விகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்தனர். அப்போது, தமிழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் கல்வி மற்றும் எதிர்காலம் தொடர்பான முக்கியமான கோரிக்கையை உணர்ச்சிகரமாக எடுத்துரைத்தார். அதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, “நிச்சயமாக நான் இதைச் செய்கிறேன்” என்று உறுதியளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தருணமும் நிகழ்ச்சியில் கவனம் பெற்றது.
மாணவர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளில் அரசியல் விமர்சனங்களையும் ராகுல் காந்தி முன்வைத்து வருகிறார். மாணவர்கள் கேள்வி கேட்பதை மத்திய அரசும் பிரதமரும் விரும்புவதில்லை என்றும், நீட் தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் கசிவு மற்றும் வேலைவாய்ப்புத் தாமதங்கள் குறித்து கேள்வி எழுப்பும் மாணவர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டி வருகிறார். முன்னதாக, சிபிஎஸ்இ தேர்வுகள் தொடர்பான குளறுபடிகளை வெளிப்படுத்தியதாகக் குறிப்பிடப்படும் வேதாந்த் என்ற மாணவரைச் சந்தித்தபோது, “உன்னை இணையத்தில் பாகிஸ்தானியர் அல்லது சோரோஸ் ஏஜென்ட் என்று திட்டினார்களா?” என்று நகைச்சுவையாகக் கேட்டுச் சிரித்தார்.
சென்னை நிகழ்ச்சியின் மற்றொரு முக்கியத் தருணத்தில், “தந்தை பெரியார் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தால் என்ன சொல்லியிருப்பார்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த மாணவர், மதம், மொழி, சாதி ஆகியவற்றைக் கடந்து மனிதநேயமே உயர்ந்த கொள்கை என்பதைப் பெரியார் வலியுறுத்தியிருப்பார் என்றார். மதம், சாதி, ஆணாதிக்கம் ஆகியவற்றைக் கடந்து மனிதநேயத்தைப் பேச வேண்டும் என்பதே பெரியாரின் சிந்தனையை வெளிப்படுத்தும் கருத்து என்றும் அவர் விளக்கினார்.
தனது பெயர் இந்தியப் பிரியன் என்றும், வேளாண்மைப் படிப்பை முடித்துள்ளதாகவும் அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த மாணவர், பெரியாரைப் பற்றித் தான் அறிந்துகொண்ட அனுபவத்தைப் பகிர்ந்தார். முதலில் திருவள்ளுவரின், “மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்ற குறள் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும், அதன் பொருளைப் பெரியாரின் கருத்துகள் வழியாக ஆழமாகப் புரிந்துகொண்டதாகவும் கூறினார். “யார் சொல்லியிருந்தாலும், எங்கு சொல்லியிருந்தாலும், நானே சொல்லியிருந்தாலும், உன் புத்திக்கும் பொதுஅறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே” என்ற பெரியாரின் கருத்து தன்னை மிகவும் கவர்ந்ததாகத் தெரிவித்தார்.
எட்டாம் வகுப்பில் படித்தபோது, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் ஊர்களின் சிறப்புகளைப் பகிர்ந்துகொண்டதாக இந்தியப் பிரியன் நினைவுகூர்ந்தார். மதுரையைச் சேர்ந்த மாணவர் மல்லிகைப்பூவைப் பற்றியும், திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவர் பூட்டுகளைப் பற்றியும் பெருமையாகக் கூறியுள்ளனர். தனது ஊரில் கோவில் விழாக்களில் நடைபெறும் மஞ்சள் தண்ணீர் விளையாட்டைப் பற்றிக் கூறியபோது, மற்ற மாணவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார். இதனால், தனது ஊரின் சிறப்பு என்ன என்று தந்தையிடம் கேட்டபோது, ஈரோடு தமிழக அரசியலின் முக்கிய மையமாக விளங்கியதையும், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் பெரியாரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டதையும் அவர் விளக்கியுள்ளார். இதுவே பெரியார் குறித்த ஆர்வத்தை மாணவரிடம் ஏற்படுத்தியது.
வீட்டிலிருந்த பெரியார் புத்தகத்தைப் படித்தபோது, ஆரம்பத்தில் கடவுள் மறுப்புக் கருத்துகள் தனக்குக் கோபத்தை ஏற்படுத்தியதாகவும், தான் தீவிர இறைநம்பிக்கையாளராக இருந்ததாகவும் மாணவர் கூறினார். பின்னர் ஸ்டீபன் ஹாக்கிங்கின் அறிவியல் நூல்களைப் படித்தபோது, பெரியாரின் கருத்துகளை அறிவியல் மற்றும் பகுத்தறிவு அடிப்படையில் புரிந்துகொள்ளத் தொடங்கியதாக விளக்கினார். பெண்கள் மீதான அடக்குமுறை, சாதியப் பாகுபாடு மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்ளும் சிந்தனையாகப் பெரியாரின் கருத்துகள் தன்னை ஈர்த்ததாகவும் கூறினார்.
பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டும் பார்க்காமல், பெண்கள் விடுதலை, சமூக நீதி மற்றும் சாதிய அடுக்குகளை ஒழிப்பதற்காகப் போராடிய தலைவராகப் பார்க்க வேண்டும் என்றும், அனைவரும் பெரியாரின் கருத்துகளை வாசிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இறுதியாக, பெரியார் கூறிய அனைத்தையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டிய அவசியமில்லை என்றார். பெரியார் சொன்னாலும், அது பகுத்தறிவுக்குப் பொருந்துகிறதா என்று ஆராய்ந்த பின்னரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவரது பதிலின் சாரமாக அமைந்தது.
நகைச்சுவையான பதில்கள், தொழில்நுட்ப விளக்கங்கள், கல்வி தொடர்பான கோரிக்கைகள் மற்றும் பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள் எனப் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்ற இந்த மாணவர் சந்திப்பு, இளைஞர்களின் கேள்வி எழுப்பும் மனப்பான்மையையும் சமூகப் பிரச்சினைகள் மீதான ஈடுபாட்டையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.
