குளிர்காலத்தில் பண்டிகைக் காலத் தேவை அதிகரிப்பதால், முட்டை மற்றும் கோழி விலைகள் வரலாறு காணாத உயரத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோழி வளர்ப்புத் துறையினரின் தகவல்படி, மக்காச்சோளப் பதுக்கல், எத்தனால் உற்பத்திக்குத் தானியங்கள் திருப்பிவிடப்படுதல், மகாராஷ்டிரா, கர்நாடகாவில் பலவீனமான பருவமழை ஆகியவற்றால், கடந்த ஆண்டில் மக்காச்சோளம், உடைத்த அரிசியின் விலை இரண்டு மடங்காகியுள்ளது. அதிகரித்து வரும் உற்பத்திச் செலவு சந்தையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். டிசம்பர் மாதத்திற்குள், சில்லறை, மொத்த விற்பனைச் சந்தைகளில் முட்டை, தோலுரித்த கோழியின் விலைகளில் கடும் உயர்வு ஏற்படக்கூடும்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை நாட்களில் கோழிப் பொருட்களின் தேவை அதிகரிக்கும். ஆகையால், இந்த முறை, வாடிக்கையாளர்கள் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். மூத்த தொழில்துறை அதிகாரிகள் இதுகுறித்து, ”தற்போது ஒரு முட்டை 6-7 ரூபாய்க்கு விற்கப்படும் மொத்த முட்டைகளின் விலை, டிசம்பர் மாதத்திற்குள் ஒரு முட்டை 7-8 ரூபாயை உயரக்கூடும். இதற்கிடையில், தற்போது ஒரு கிலோ 225-250 ரூபாய்க்கு கிடைக்கும் தோல் நீக்கிய பதப்படுத்தப்பட்ட கோழிக்கறியின் விலை, ஒரு கிலோ 260-275 ரூபாயாக உயரக்கூடும். ஒட்டுமொத்தமாக, கோழிப் பொருட்களின் விலைகள் டிசம்பர் மாதத்திற்குள் 25 முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்கின்றனர்.
இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம், கோழித் தீவன மூலப்பொருட்களின் விலை உயர்வு.. கடந்த ஆண்டில் மக்காச்சோளம் மற்றும் உடை அரிசியின் விலைகள் கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்துள்ளன. கடந்த ஆண்டு ஒரு கிலோ ₹18-க்கு கிடைத்த மக்காச்சோளம், இப்போது ஒரு கிலோ ₹34-க்கு விற்கப்படுகிறது. இது டிசம்பர் மாதத்திற்குள் ஒரு கிலோ ₹40-ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், உடை அரிசியின் விலையும் ஒரு கிலோ ₹14-15-லிருந்து ₹31-32-ஆக அதிகரித்துள்ளது. சோளம், தினை, கேழ்வரகு போன்ற பிற பயிர் வகைகளைப் பயன்படுத்துவதும் கோழி வளர்ப்புத் தொழிலுக்கு மிகவும் செலவு மிக்கதாக உள்ளது.
மக்காச்சோளம், அரிசி பற்றாக்குறைக்கு பல முக்கிய காரணங்களாக உள்ளன. மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற முக்கிய காரிஃப் பயிர் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் மழைப்பொழிவு இல்லாததால், இந்த ஆண்டு காரிஃப் மக்காச்சோள உற்பத்தியில் 15-16 சதவீதம் சரிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்காச்சோளம் எத்தனால் உற்பத்திக்கு பரவலாகப் பயன்படுத்தப்படுவதால், கோழி வளர்ப்புத் தொழிலுக்கான அதன் இருப்பு குறைந்துள்ளது. விநியோகச் சங்கிலியில் இடைத்தரகர்கள் பதுக்கி வைப்பதும், வர்த்தகர்கள் கையிருப்பை வைத்திருப்பதும் தானிய விலைகள் வேகமாக உயர்வதற்குக் காரணமாகின்றன.
வெங்கடேஸ்வரா ஹேட்சரீஸின் பொது மேலாளர் கே.ஜி.ஆனந்த் கூறுகையில், ‘உற்பத்திச் செலவுகள் வேகமாக அதிகரித்திருந்தாலும், முழு சுமையையும் நுகர்வோர் மீது சுமத்த முடியாது. அதிகப்படியான செலவுகளைத் தவிர்ப்பதற்காக, விவசாயிகள் எடை குறைந்த கோழிகளை சந்தையில் விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தீவனச் செலவுகளைக் குறைப்பதே இதன் நோக்கம். இதனால், டிசம்பர், ஜனவரி மாதங்களில் மொத்த கோழி உற்பத்தி 20% க்கும் அதிகமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சந்தையில் விநியோகப் பற்றாக்குறைக்கு வழிவகுத்து, விலைகளை உயர்வாக வைத்திருக்கும்” என்கிறார்.
