Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

முதுகு சொறிவதையே ஒரு தொழிலாக மாற்றி, மாதம் சுமார் ரூ.14 லட்சம் மொத்த வருவாய் ஈட்டி வருகிறார் சீனாவைச் சேர்ந்த 32 வயது இளைஞர் ஜாங் சியாவோகியோ. ஷென்சென் நகரில் ‘சுமா’ (Suma) என்ற பெயரில் இரண்டு கிளைகளை நடத்தி வரும் இவர், ஒரு மணி நேர முதுகு சொறிதல் சேவைக்கு 300 யுவான், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.4,200 கட்டணமாக வசூலித்து வருகிறார்.

ஷென்சென் நகரைச் சேர்ந்த ஜாங் சியாவோகியோ, கடந்த ஆண்டு சமூக வலைதளத்தில் ஒரு பெண் தனது கணவருக்கு முதுகு சொறிந்து விடும் குறுகிய வீடியோவை பார்த்துள்ளார். அந்த வீடியோவின் கீழ் பதிவிடப்பட்டிருந்த கமெண்டுகளைப் பார்த்தபோது, “இது போன்ற சேவைக்கு நாங்களும் பணம் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்” என்று பலர் கருத்து தெரிவித்திருந்ததை அவர் கவனித்துள்ளார். இதையடுத்து, மக்களின் இந்த விருப்பத்தை ஒரு தொழில் வாய்ப்பாக மாற்றலாம் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, சிறுவயதில் தனது தந்தை முதுகு சொறிந்து விட்டபோது நிம்மதியாக உறங்கிய நினைவும் ஜாங்கிற்கு வந்துள்ளது. இதையடுத்து, மக்களின் எளிய தேவையை அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய தொழிலை உருவாக்க முடிவு செய்த அவர், ‘சுமா’ என்ற பிராண்ட் பெயரில் முதுகு சொறிதல் சேவைக்கான பிரத்யேக கடைகளைத் தொடங்கியுள்ளார்.

பார்ப்பதற்கு இந்தக் கடைகள் சாதாரண மசாஜ் பார்லர் போல இருந்தாலும், இங்கு வழங்கப்படும் சேவை முற்றிலும் வித்தியாசமானது. வாடிக்கையாளர்களைப் படுக்க வைத்து, பயிற்சி பெற்ற ஊழியர்கள் பிரத்யேக செயற்கை நகங்கள் மற்றும் சில கருவிகளைப் பயன்படுத்தி முதுகு உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் மென்மையாகச் சொறிந்து விடுகின்றனர்.

இதையும் படியுங்க  வெள்ளப் பேரழிவை மறைக்கும் சீனா..! வைரல் வீடியோ நீக்கம்..! வெளிநாட்டு ஊடகங்களுக்கும் தடை

மனித உடலில் அரிப்பு ஏற்படக்கூடிய முக்கியப் பகுதிகள், எந்த இடத்தில் எவ்வாறு சொறிய வேண்டும், எவ்வளவு அழுத்தத்துடன் செய்ய வேண்டும் என்பன குறித்து ஊழியர்களுக்கு ஜாங் முறையான பயிற்சியும் அளித்துள்ளார்.

இந்தச் சேவை வெறும் அரிப்பைப் போக்குவதற்காக மட்டுமல்ல என வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். நகர்ப்புற வாழ்க்கையில் அதிக வேலைப்பளு மற்றும் மன அழுத்தத்துடன் இருப்பவர்களுக்கு இந்த மென்மையான சொறிதல் முறை மன அமைதியையும், ஓய்வு உணர்வையும், நல்ல உறக்கத்தையும் தருவதாக அவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, சாதாரண மசாஜ் பார்லர்களில் வழங்கப்படும் அழுத்தமான மசாஜை விட, இந்த மென்மையான சொறிதல் தங்களுக்கு அதிக ரிலாக்ஸ் உணர்வை அளிப்பதாகவும் சில வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் சுமார் 70 சதவீதம் பேர் ஆண்கள் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, நகரங்களில் அதிக மன அழுத்தத்துடன் பணியாற்றும் ஐடி ஊழியர்கள் மற்றும் கார்ப்பரேட் பணியாளர்கள் தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ளவும், நிம்மதியான உறக்கத்தைப் பெறவும் இங்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட அரிப்புப் புள்ளிகளைக் கண்டறிந்து ஊழியர்கள் சொறியும்போது, அவர்கள் சிரிப்பில் மூழ்குவதும் உண்டாம்.

தற்போது ஷென்சென் நகரில் இரண்டு சுமா கிளைகளை ஜாங் நடத்தி வருகிறார். முதல் கிளை கடந்த மே மாத தொடக்கத்தில் பாவோன் (Baoan) மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. இதற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இரண்டாவது கிளை ஜூன் மாதத்தில் ஃபுட்டியான் (Futian) மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. இரண்டு கடைகளின் மூலமும் மாதத்திற்கு சுமார் 1,00,000 யுவான், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.14 லட்சம் வரை மொத்த வருவாய் கிடைப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  என் அமைதியை சீண்டிப் பார்க்க வேண்டாம்..! விரைவில் பங்களாதேஷ் வருவேன்..! ஷேக் ஹசீனா அதிரடி..!

எனினும், இந்த ரூ.14 லட்சம் என்பது ஜாங்கின் லாபம் அல்ல. இது இரண்டு கடைகளின் ஒட்டுமொத்த மொத்த வருவாய் மட்டுமே. கடைகளின் வாடகை, ஊழியர்களின் சம்பளம், பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளை கழித்த பிறகு, தற்போது இந்த வணிகம் நஷ்டமில்லாத நிலையான ‘பிரேக்-ஈவன்’ கட்டத்தை எட்டியுள்ளது. தொடர்ந்து நல்ல லாபத்தை நோக்கி இந்தத் தொழில் நகரத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

முதுகு சொறிதல் தொழிலைத் தொடங்குவதற்கு முன்பு ஜாங் சியாவோகியோ பல்வேறு தொழில் முயற்சிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளார். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, ஒரே ஆண்டில் ஏழு வெவ்வேறு வேலைகளுக்கு மாறியுள்ளார். 30 வயதை எட்டுவதற்கு முன்பாக ஆன்லைன் வர்த்தகம் தொடர்பாக இரண்டு இ-காமர்ஸ் நிறுவனங்களையும் தொடங்கியுள்ளார். ஆனால், அந்த இரண்டு நிறுவனங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் தோல்வியடைந்தன. அதன் பிறகு சமூக ஊடகத் துறையிலும் கால் பதித்த அவர், அங்கும் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை.

இவ்வாறு தொடர்ந்து பல தோல்விகளைச் சந்தித்த பின்னர்தான், சமூக வலைதளத்தில் தற்செயலாகப் பார்த்த ஒரு வீடியோவின் கமெண்ட் பகுதி மூலம் முதுகு சொறிதல் சேவை என்ற புதிய தொழில் யோசனை அவருக்குக் கிடைத்துள்ளது. அந்த யோசனையை வெறும் எண்ணமாக வைத்திருக்காமல், அதை நடைமுறைக்குக் கொண்டு வந்து ‘சுமா’ என்ற பெயரில் கடைகளைத் தொடங்கி தற்போது தொழிலாக வளர்த்துள்ளார்.

இதையும் படியுங்க  ”மனிதக் கடலில் மிதந்த காமேனியின் உடல்! ஸ்தம்பித்த ஈரான்! உலக வரலாற்றில் ஒரு மிரட்டலான இறுதிப் பயணம்!"

இந்த வித்தியாசமான தொழிலுக்கு கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து, சீனா முழுவதும் சுமார் 100 கிளைகளைத் தொடங்க ஜாங் திட்டமிட்டுள்ளார். இதற்கிடையில், இந்தச் சேவை குறித்து சீனாவின் ‘டொயின்’ (Douyin) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் நடைபெற்று வருகிறது. “பெரிய நகரங்களில் வசிப்பவர்களுக்கு அதிக மன அழுத்தம் உள்ளது. எனவே, இதுபோன்ற சேவைக்கு நிச்சயம் தேவை இருக்கிறது” என்று பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஷாங்காய் உள்ளிட்ட பிற நகரங்களில் வசிக்கும் சிலர், ஜாங்கிடம் இந்தத் தொழிலைக் கற்றுக்கொண்டு தங்கள் சொந்த ஊர்களிலும் கிளைகளைத் தொடங்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர். “இந்தக் கலையை உங்களிடம் கற்றுக்கொள்ள விரும்புகிறோம்.

எங்களை உங்கள் சீடர்களாகச் சேர்த்துக்கொள்வீர்களா?” என்றும் சிலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே நேரத்தில், “வெறும் முதுகு சொறிவதற்கு 300 யுவான் கொடுத்து உண்மையிலேயே இவ்வளவு பேர் சேவை பெறுகிறார்களா?” என்று சிலர் ஆச்சரியத்துடனும் சந்தேகத்துடனும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இருப்பினும், மக்களின் அன்றாட வாழ்க்கையில் இருக்கும் ஒரு எளிய தேவையை சரியாகக் கண்டறிந்து, அதை ஒரு தனித்துவமான சேவையாக மாற்றியிருப்பது ஜாங்கின் முயற்சிக்கு கவனம் ஈர்த்துள்ளது. பெரிய படிப்போ, கோடிக்கணக்கான முதலீடோ மட்டுமே ஒரு தொழிலை உருவாக்குவதற்கான அடிப்படை அல்ல; மக்களின் தேவையைப் புரிந்துகொண்டு, அதற்கான தீர்வை வழங்கும் ஒரு சிறிய யோசனையும் வெற்றிகரமான தொழிலாக மாற முடியும் என்பதை ஜாங் சியாவோகியோவின் இந்த முயற்சி எடுத்துக்காட்டுவதாக பலர் பாராட்டி வருகின்றனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 minutes ago at 14 minutes ago