Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

பெரியளவில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றத்துக்கு அறிவாலயம் தயாராகிக் கொண்டிருப்பதாக வரும் தகவல் தி.மு.க-வில் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.

திமுகவில் வருவாய் மாவட்டங்களின் அடிப்படையில், இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற வகையில் புதிய மறுசீரமைப்பு மேற்கொள்ள அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் கட்சி மாவட்டங்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், மாவட்டச் செயலாளர்களுக்கான வயது வரம்பு 70 ஆகவும், அதிகபட்ச பதவிக்காலம் 3 முறையாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. எவ்வாறு பிரிக்கப்படும், புதிய நிர்வாகிகளாக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற விவாதம் அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக திருப்பத்தூர் திமுக சீனியர்கள் சிலரிடம் பேசினோம்… சட்டசபைத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த நிலையில், சமீபத்தில் நடந்த தி.மு.க. தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில், இரண்டு சட்டசபைத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் எனப் பிரிக்கவும், வார்டு செயலாளர்கள் முதல் மாவட்டச் செயலாளர்கள் வரை உள்ள நிர்வாகிகளுக்குப் பதவிக்காலமும், வயது வரம்பும் நிர்ணயிக்கப்பட்டு, “செக்” வைத்திருக்கிறார் ஸ்டாலின்.

இதையும் படியுங்க  பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை..? உடைந்தது சஸ்பென்ஸ்.. நாளை முக்கிய அறிவிப்பு..!

இதனடிப்படையில் தற்போது திருப்பத்தூர் மாவட்டம் தெற்கு, வடக்கு எனப் பிரிக்கப்பட்டால், ஆம்பூர், வாணியம்பாடி வடக்கு எனவும், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் தெற்கு எனவும் இரண்டு மாவட்டங்களாக உருவாகிறது.

Republic Tamil

வடக்கு மாவட்டம் (ஆம்பூர் + வாணியம்பாடி) தற்போதைய ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தேவராஜ், ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளர் வி.எஸ். ஞானவேலன் , வக்கீல் தேவக்குமார் , மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு சையத் ஹமீத் தங்கல் ஆகியோர் போட்டியில் இருக்கிறார்கள். தேவராஜ் தொடர வாய்ப்பு உள்ளதாகவும், இளைஞருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால் வி.எஸ். ஞானவேலன் தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் தெற்கு மாவட்டமானால் ,முன்னாள் எம்.எல்.ஏக்கள் அ.நல்லத்தம்பி , என்.கே. சூரியகுமார், முன்னாள் மாவட்டப் பொறுப்பாளர் முத்தமிழ்ச்செல்வி, திருப்பத்தூர் நகரச் செயலாளர் எஸ். ராஜேந்திரன், கவிதா தண்டபாணி ஆகியோர் களத்தில் இருப்பதாகக் கூறுகின்றனர் , சாதி ரீதியாகவும், அனுபவ ரீதியாகவும் பார்க்கப்பட்டால், இதில் அ. நல்லத்தம்பி மற்றும் எஸ் ராஜேந்திரன் ஆகியோரில் ஒருவருக்கு அதிக வாய்ப்பு என்கிறார்கள். பெண்களுக்கு ஒதுக்கப்பட்டால் முத்தமிழ்ச்செல்வி, கவிதா ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு உள்ளதாம்.

இதையும் படியுங்க  எந்த நேரத்திலும் வெளியேறுவோம்..! விஜய்க்கு செக் வைக்கும் திருமா..! தத்தளிக்கும் தவெக ஆட்சி..!

இருப்பினும், போட்டி என வந்துவிட்டால், கிளைக் கழகம் மற்றும் ஒன்றியச் செயலாளர் தேர்தலில் யாருடைய ஆதரவாளர்கள் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள் எளிதாக மாவட்டச் செயலாளராகிவிட முடியும்.

அதேவேளையில், புதிதாகக் கட்சி தொடங்கி ஆட்சிக்கு வந்துள்ள தவெகவைச் சமாளிக்க வேண்டுமானால், இரண்டு மாவட்டங்களுக்கு இரண்டு ஜாதியைச் சேர்ந்தவர்கள் இருக்க வேண்டும். இளைஞர்கள், இளம் பெண்கள் பங்கு அதிகம் இருக்க வேண்டுமென தலைமை முடிவு எடுத்துள்ளதாம்.

பெண்கள், இளைஞர்களுக்கான வாய்ப்பு என்பது மாவட்டச் செயலாளர் பதவியில் தவெக எம்.எல்.ஏ.க்களைப் போல அமைந்துவிட்டால், நிர்வாகத் திறனின்றி கட்சியின் கட்டமைப்பு சிதைந்துவிடும் என்ற அச்சமும் திமுகவிற்கு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிக்க திருப்பத்தூர் உடன்பிறப்புகள் “சூடாகி” இருக்கும் வேளையில், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் தொகுதிகளைச் சேர்ந்த பல்வேறு பிரமுகர்கள் ஆசைப்பட்டாலும், ஆளுமை, நிர்வாகத் திறன், கட்டுக்கோப்பு, தொண்டர்களிடம் அணுகுமுறை, கட்சிப்பணி, தலைமை மீதான விசுவாசம், கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் வீட்டு நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்பது, அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செல்வது போன்ற பண்புகள் கொண்டவரை மாவட்டச் செயலாளராக நியமித்தால் மட்டுமே எதிர்வரும் உள்ளாட்சி, லோக்சபா தேர்தல்களில் மீண்டும் மக்கள் நம்பிக்கையைப் பெற முடியும் என்றார்கள் விரிவாக.

இதையும் படியுங்க  "ரீல் ஹீரோ இல்ல.. ரியல் ஹீரோவா மாறுங்க!" விஜய்யின் 100 நாள் ஆட்சியை நோக்கி சீறிய பிரேமலதா விஜயகாந்த்!
Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 days ago at 5 days ago