மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் இக்பால் ஷேக்கின் அரிய உடல்நலப் பிரச்சினை தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் அம்பானி தனது சொந்த செலவில் அவருக்கு மருத்துவ உதவி வழங்க முன்வந்துள்ளார்.
இக்பாலின் நிலையை அறிந்த அவர், மருத்துவ நிபுணர்களை அனுப்பி முதற்கட்டமாக அவரது உடல்நிலையை ஆய்வு செய்ய ஏற்பாடு செய்ததுடன், பின்னர் சிறுவனை மேற்கு வங்கத்தில் இருந்து விமானம் மூலம் மும்பைக்கு அழைத்து வரவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டம் பெல்தாங்கா பகுதியைச் சேர்ந்த இக்பால் ஷேக், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பெரும்பாலான நேரத்தை குளத்துத் தண்ணீரிலேயே கழித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தண்ணீரை விட்டு வெளியே வந்தால் உடல் முழுவதும் கடுமையான எரிச்சலும் வலியும் ஏற்படுவதாக சிறுவன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக குளத்தில் இருப்பதையே அவர் தொடர்ந்து விரும்பியதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில், வழக்கமாக இருக்கும் குளத்தை விடுத்து வேறொரு குளத்துக்குச் சென்ற இக்பால், தொடர்ந்து ஐந்து நாட்கள் தண்ணீரிலேயே இருந்துள்ளார். அப்போது அங்கிருந்த ஒருவர், அவர் தண்ணீருக்குள் இருப்பதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வேகமாகப் பரவி தேசிய அளவில் கவனத்தைப் பெற்றதுடன், ஆனந்த் அம்பானியின் கவனத்திற்கும் சென்றதாகக் கூறப்படுகிறது.

இக்பாலின் குடும்பத்தினர் ஏற்கனவே அவரை உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், உரிய காரணம் கண்டறியப்படாததுடன், மேல் சிகிச்சைக்குத் தேவையான போதிய பொருளாதார வசதியும் குடும்பத்தினரிடம் இல்லாததால், கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறுவனின் நிலை தொடர்ந்து நீடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பல மணி நேரம் குளத்துத் தண்ணீரில் இருப்பதால், இக்பாலின் தோல் வெளுத்துப் போதல், பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்று உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், அவரது உடல்நிலையை விரிவாகப் பரிசோதித்து, பிரச்சினைக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிவது அவசியமாகியுள்ளது.
ஆனந்த் அம்பானியின் ஏற்பாட்டின் பேரில், இக்பால் மேற்கு வங்கத்தில் இருந்து விமானம் மூலம் மும்பைக்கு அழைத்து வரப்பட்டு, அங்குள்ள சர் எச்.என். ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு முன்னணி மருத்துவ நிபுணர்கள் அடங்கிய பிரத்யேக மருத்துவக் குழு அமைக்கப்பட்டு, சிறுவனுக்கு விரிவான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிறப்புச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இக்பாலுக்கு ஏற்படும் கடுமையான எரிச்சலுக்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் தொடர்பான அரிய பாதிப்புகள், கடுமையான தோல் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய சில நோய்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் குறித்து மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர். மேலும், அன்ஹிட்ரோசிஸ் மற்றும் ஹேன்சென்ஸ் நோய் போன்ற பாதிப்புகள் உள்ளதா என்பதையும் மருத்துவர்கள் ஆய்வு செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்பாலுக்கு உடல் ரீதியான பரிசோதனைகள் மட்டுமின்றி, மனநலப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. தண்ணீரை விட்டு வெளியே வந்தால் ஏதோ ஒரு சக்தி தன்னை ஆட்கொள்வது போன்ற உணர்வு ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ள நிலையில், நீண்ட காலமாக ஏற்பட்ட உடல் வலி மற்றும் அச்சத்தின் காரணமாக அவருக்கு உளவியல் ரீதியான பயம் அல்லது வேறு ஏதேனும் மனநலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதையும் மருத்துவர்கள் கண்டறிய உள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக தங்கள் மகனின் இந்த நிலையைப் பார்த்து வந்த பெற்றோர், பொருளாதார வசதி இல்லாததால் உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் தவித்து வந்தனர். தற்போது மும்பையில் உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைத்துள்ளதுடன், ஆனந்த் அம்பானி தனது சொந்த செலவில் உதவ முன்வந்திருப்பது அவர்களுக்கு பெரும் நிம்மதியையும், மகன் குணமடைவார் என்ற புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இக்பால் மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு பல்வேறு மேம்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் அவரது உடல்நலப் பிரச்சினைக்கான துல்லியமான காரணம் கண்டறியப்பட்டு, அதற்கேற்ற சிகிச்சை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு சிறுவனின் நீண்டகால வேதனை சமூக வலைதளங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், அவரது மருத்துவச் சிகிச்சைக்கு ஆனந்த் அம்பானி உதவிக்கரம் நீட்டியிருப்பது இணையதளங்களில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இக்பாலின் உடல்நிலைக்கான காரணம் விரைவில் கண்டறியப்பட்டு, அவர் முழுமையாக குணமடைந்து இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்பதே தற்போது அவரது குடும்பத்தினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
