Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுப் பணியாளர் நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி மாணவர்கள் மற்றும் தேர்வர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த நிலையில், அவர்களின் கோரிக்கையை ஏற்று JSSC-CGL தேர்வை ரத்து செய்வதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநில அரசுப் பணியாளர் தேர்வுகளில் பெரிய அளவில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு நடைபெற்றதாக மாணவர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட தேர்வுகளை ரத்து செய்து, முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 20 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, மாணவர் தலைவர் தேவேந்திரநாத் மாஹதோ உள்ளிட்டோர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான மாநில அரசு, JSSC-CGL தேர்வு உள்ளிட்ட TSR Data Processing Private Limited (TDPL) என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட தேர்வுகள், அவற்றின் முடிவுகள் மற்றும் அதனடிப்படையிலான நியமனங்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.

இதையும் படியுங்க  "டிவோர்ஸ் இல்லாம 2வது மேரேஜா..?" — அரசு ஊழியர்களின் மொத்த சம்பளமும் முதல் மனைவிக்கே.. அதிரடி சட்டம்!

Republic Tamil

மேலும், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் TDPL மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. முறைகேட்டில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

அரசின் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், தங்களது வெற்றியைக் கொண்டாடினர். நீண்ட நாட்களாக உண்ணாவிரதத்தில் இருந்த மாணவர் தலைவர் தேவேந்திரநாத் மாஹதோவும் அரசின் அறிவிப்பை வரவேற்று தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

இருப்பினும், ஒரு தரப்பு மாணவர்கள் இன்னும் முழுமையான விசாரணை வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ (CBI) விசாரணைக்கு அரசு அதிகாரப்பூர்வமாக உத்தரவிடும் வரை தங்களது போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, தேர்வு ரத்து செய்யப்பட்டதால் ஏற்கனவே தேர்ச்சி பெற்று அரசுப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சுமார் 2,000 தேர்வர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தங்களது உழைப்பால் தேர்ச்சி பெற்றவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் வகையில் ஒட்டுமொத்த தேர்வையும் ரத்து செய்யக் கூடாது என்றும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக ராஞ்சியில் உள்ள அரசு அலுவலகமான ப்ராஜெக்ட் பவன் முன்பும் போராட்டம் நடைபெற்றுள்ளது.

இதையும் படியுங்க  குட்நியூஸ்... தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை.. குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள் அரசு ஊழியர்கள்!
Republic Tamil

தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தவும், எதிர்காலத்தில் வினாத்தாள் கசிவு மற்றும் பிற முறைகேடுகளைத் தடுக்கவும் அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்காக புதிய சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் தேர்வு நடைமுறைகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதனிடையே, ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வுகளில் தொடர்ந்து எழுந்து வரும் முறைகேடு குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியாகவும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. மாணவர்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள், சம்பந்தப்பட்ட தேர்வுகள் குறித்து சுயாதீனமான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

முன்னதாக, ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற 14ஆவது JPSC சிவில் சர்வீஸ் தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் தொடர்பாகவும் முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. இதனால் தேர்வு முடிவுகள் மற்றும் தேர்வு நடைமுறைகள் குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்த நிலையில், அரசுப் பணியாளர் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், தகுதியான தேர்வர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்க  கோபத்தை வென்ற மனிதாபிமானம்! டெல்லி நீதிமன்றத்தையே உருகவைத்த தம்பதி!

ஒருபுறம் முறைகேடுகளைக் களைய வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் ஏற்கனவே தேர்ச்சி பெற்று பணிக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால், ஜார்க்கண்ட் அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையை தேர்வர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago