ராமநாதபுரம் நகராட்சியில் லஞ்ச வழக்கில் சிக்கியுள்ள வருவாய் ஆய்வாளருக்கு சிறந்த பணியாளர் என்ற அடிப்படையில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் கடந்த ஜூலை 3-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 66 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நகராட்சியின் வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், அவரது ஜி-பே பணப் பரிவர்த்தனைகளையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆய்வு செய்ததில், கடந்த 3 ஆண்டுகளில் சுமார் ரூ.25 லட்சம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பணப் பரிவர்த்தனைகளுக்கு முறையான கணக்குகள் மற்றும் உரிய விளக்கங்கள் இல்லாததால், கார்த்திகேயன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பாகப் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், ராமநாதபுரம் நகராட்சியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் கார்த்திகேயனுக்கும் சிறப்பாகப் பணியாற்றியதற்காக நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
நகராட்சி ஆணையராகப் பொறுப்பு வகிக்கும் சுகுமாரன் மற்றும் நகர்மன்றத் தலைவர் ஆர்.கே. கார்மேகம் ஆகியோர் இணைந்து இந்தச் சான்றிதழை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
லஞ்ச வழக்கில் சிக்கி, அவர் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதே நபருக்கு சிறந்த பணியாளர் என்ற அடிப்படையில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவியதையடுத்து, நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து பல்வேறு தரப்பினரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.
லஞ்சம் வாங்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள ஒருவரை இதுபோன்று பாராட்டுவது, தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதுடன், லஞ்சத்தை ஊக்குவிப்பது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அதே நகராட்சியில் பல்வேறு பிரிவுகளில் நேர்மையாகவும் முறையாகவும் பணியாற்றி வரும் ஏராளமான ஊழியர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஒருவருக்கு பாராட்டு வழங்கப்பட்டிருப்பது கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நகராட்சி பொறுப்பு ஆணையரிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட நற்சான்றிதழ் வழங்கப்பட்டது குறித்து முதலில் தனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார். பின்னர் இந்த விவரம் தெரியவந்ததும், ஏற்கனவே வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழைத் திரும்பப் பெற்றுவிட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், சான்றிதழ் வழங்குவதற்கான தேர்வு ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததும், அந்த நடவடிக்கையைத் தான் மேற்கொண்டதாகவும் நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ராமச்சந்திரனிடம் இந்த விவகாரம் குறித்து கேட்டபோது, லஞ்ச வழக்கில் தொடர்புடைய ஒருவருக்கு இதுபோன்ற பாராட்டுச் சான்றிதழ் வழங்குவது முழுக்க முழுக்க தவறானது என்றும், இது லஞ்சத்தை ஊக்குவிக்கும் வகையில் அமையக்கூடியது என்றும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதனால், கார்த்திகேயனுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்க யார் பரிந்துரை செய்தார்? எந்த அடிப்படையில் அவரது பெயர் தேர்வு செய்யப்பட்டது? சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த விவகாரம் முன்கூட்டியே தெரியுமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
எனவே, சான்றிதழ் வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, பரிந்துரை செய்தவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பங்கு குறித்து ஆய்வு செய்து, தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
லஞ்ச ஒழிப்புத்துறை ஒருபுறம் ரூ.25 லட்சம் பணப் பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில், மறுபுறம் அதே நபருக்கு சிறந்த பணியாளர் விருது வழங்கப்பட்ட சம்பவம் ராமநாதபுரம் நகராட்சியில் நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பேசுபொருளாகியுள்ளது. வழங்கப்பட்ட சான்றிதழ் பின்னர் திரும்பப் பெறப்பட்டாலும், அது வழங்கப்பட்டதற்கான காரணம் மற்றும் அதற்குப் பின்னால் இருந்த நடைமுறை குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்துள்ளது.
