நடிகர் சூர்யா, தனது குடும்பத்துடன் சென்னை சொகுசு பங்களாவில் இருந்து மும்பைக்கு குடிபெயர்ந்ததற்கான உண்மையான காரணங்களை அண்மையில் நடைபெற்ற ஊடக நேர்காணல்களில் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளங்களில் பரவி வந்த பல்வேறு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரது விளக்கம் அமைந்துள்ளது.
ஜோதிகாவின் பெற்றோருக்கு முக்கியத்துவம் அளிப்பதும், அவர்களுக்கு அருகில் இருந்து அவர்களுடன் நேரத்தைச் செலவிடுவதுமே மும்பைக்கு குடிபெயர்ந்ததற்கான முக்கியக் காரணம் என்று சூர்யா தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், மும்பையில் இருந்தபடியே தங்களுக்குப் பணி சார்ந்த புதிய வாய்ப்புகளும் அமைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிகா தனது 18-19 வயதில் மும்பையை விட்டு சென்னைக்கு வந்தார். அதன் பின்னர் சுமார் 27 ஆண்டுகள் சென்னை வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்துடன் இணைந்து வாழ்ந்ததுடன், தனது தொழில் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட பல விஷயங்களையும் சூர்யா குடும்பத்திற்காகத் தியாகம் செய்ததாக சூர்யா தெரிவித்துள்ளார். தற்போது வயதான தனது மாமனார், மாமியாரை கவனித்துக்கொள்ளவும், அவர்களுடன் அதிக நேரம் செலவிடவும் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

மேலும், தங்களது குழந்தைகளான தியா மற்றும் தேவின் சிறந்த பள்ளிக் கல்விக்காகவும் மும்பையில் குடியேற வேண்டிய சூழல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருவரும் IB பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளியில் கல்வி பயின்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை வாழ்க்கை குறித்து சூர்யா கூறுகையில், சென்னையில் தாங்கள் வெளியில் செல்லும்போது எப்போதும் பிரபலங்களாகவே பார்க்கப்படுவதாகவும், இதனால் இயல்பான வாழ்க்கையை அனுபவிப்பது சிரமமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் மும்பையில் தங்களை யாரும் பெரிய அளவில் “விஐபி”க்களாகப் பார்ப்பதில்லை என்றும், சாதாரண மனிதர்களைப் போல பூங்காவுக்குச் செல்வது, குழந்தைகளுடன் ஐஸ்கிரீம் சாப்பிடுவது உள்ளிட்டவற்றைச் சுதந்திரமாகச் செய்ய முடிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மும்பையில் இருந்தபடியே சூர்யா மற்றும் ஜோதிகா இருவருக்கும் பாலிவுட் திரைப்பட வாய்ப்புகள் உள்ளிட்ட புதிய தொழில் வாய்ப்புகளும் கிடைத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், தனது திரைப்படப் பணிகளுக்காக சூர்யா தொடர்ந்து சென்னைக்கு வந்து செல்கிறார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் மும்பையில் தனது குடும்பத்தினருடன் நேரத்தை முழுமையாகச் செலவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
₹70 கோடி பங்களா இல்லை; 1,700 சதுர அடி வீடு
சூர்யா மும்பையில் ₹70 கோடி மதிப்பில் பிரம்மாண்டமான பங்களா வாங்கியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. ஆனால் இந்த தகவலை சூர்யா மறுத்துள்ளார். தாங்கள் மும்பையில் வசிப்பது மிகப்பெரிய பங்களாவில் அல்ல என்றும், வெறும் 1,700 சதுர அடி பரப்பளவு கொண்ட சிறிய வீட்டில்தான் வசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தங்களது பெரிய பங்களாவை விட, மும்பையில் உள்ள இந்தச் சிறிய வீடு குடும்பத்தினரை இன்னும் நெருக்கமாக்கியுள்ளதாக சூர்யா தெரிவித்துள்ளார்.
“சென்னை எனக்கு வேலை பார்க்கும் இடம்; மும்பை எனக்கு ஒரு விடுமுறைக்காலம் போன்றது” என்ற வகையில் தனது மும்பை வாழ்க்கையை அவர் வர்ணித்துள்ளார்.
மும்பை வீட்டில் தான் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்வதாகவும், தனது அன்றாட வேலைகளைத் தானே செய்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நடிகை ராதிகா சரத்குமார் ஒரு நேர்காணலில் சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.
மும்பை வீட்டிற்குச் சென்றதும் சூர்யா, தனது துணிகளை அயர்ன் செய்யும் தோபி எங்கே என்றும், தனது ஷூக்கள் எங்கே என்றும் கேட்டு, பின்னர் தனது வேலைகளைத் தானே கவனித்துக்கொள்வார் என்றும் ராதிகா தெரிவித்துள்ளார். மேலும், சூர்யா சொந்தமாகக் காபி தயாரித்துக் குடிப்பதாகவும், மும்பையில் மிகவும் எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதாக ஜோதிகா தன்னிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சூர்யாவை அடையாளம் கண்ட ரசிகர்கள்; ஜோதிகாவை கண்டுகொள்ளாத மக்கள்

மும்பையில் சூர்யாவை மக்கள் அடையாளம் கண்டு அவருடன் பேசும் அளவுக்கு, ஜோதிகாவை அங்குள்ள பலருக்கும் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. ஒருமுறை இருவரும் வெளியில் சென்றபோது சூர்யாவை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டதாகவும், ஆனால் ஜோதிகாவை யாரும் பெரிதாகக் கவனிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைப் பார்த்த அவர்களது மகள் தியா, ஜோதிகாவை ஜாலியாகக் கிண்டல் செய்ததாகவும் கூறப்படுகிறது. “அம்மா, உன்னோட கேமை நீ இன்னும் இம்ப்ரூவ் பண்ணணும் போல… இங்க உன்னை யாருக்குமே தெரியல பாரு!” என்று தியா கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மும்பையில் இயல்பான குடும்ப வாழ்க்கை
சென்னையை விட மும்பையில் சூர்யாவும் ஜோதிகாவும் மிகவும் இயல்பான, அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக சூர்யா தெரிவித்துள்ளார். பாந்த்ரா பேண்ட்ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளுடன் நடைப்பயிற்சி மேற்கொள்வதும், சாதாரண உணவகங்களில் உணவருந்துவதும் வழக்கமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

சென்னை தனது பணியிடமாகவும், மும்பை விடுமுறை போன்றதாகவும் இருப்பதாகக் குறிப்பிட்ட சூர்யா, 1,700 சதுர அடி கொண்ட சிறிய வீடு தங்கள் குடும்பத்தை மேலும் நெருக்கமாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். குழந்தைகள் அருகிலேயே இருப்பதும், மும்பையில் கிடைக்கும் அமைதியான சூழலும் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்..
இதனால், மும்பைக்கு குடிபெயர்ந்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய பல்வேறு வதந்திகளுக்கு மாறாக, ஜோதிகாவின் பெற்றோருக்கு அருகில் இருப்பது, குழந்தைகளின் கல்வி, குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவது மற்றும் புதிய தொழில் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது ஆகியவையே தங்களது மும்பை வாழ்க்கைக்கான முக்கியக் காரணங்கள் என்பது சூர்யாவின் விளக்கத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
