Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

கேரள மாநிலத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ என மாற்றுவதற்கான ‘கேரளா (பெயர் மாற்றம்) மசோதா, 2026’ இன்று மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தின் பூர்வீக மலையாளப் பெயரான ‘கேரளம்’ என்பதற்கேற்ப, இந்திய அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் இடம்பெற்றுள்ள மாநிலத்தின் பெயரை மாற்றுவதே இந்த மசோதாவின் நோக்கமாகும்.

மலையாள மொழியில் மாநிலம் ‘கேரளம்’ என்று அழைக்கப்படுவதால், மாநிலத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றக் கோரி கேரள சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தது.

அதன்பின்னர், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வரைவு மசோதாவை கேரள சட்டமன்றத்தின் கருத்துக்காக அனுப்பி வைத்தார். கேரள சட்டமன்றம் மசோதாவின் அனைத்து பிரிவுகளையும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டு, தனது ஒப்புதலை மத்திய அரசுக்குத் தெரிவித்தது. இதையடுத்து, குடியரசுத் தலைவரின் பரிந்துரையுடன் இந்த மசோதா தற்போது நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பின் சரத்து 3-ன் கீழ், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்த பின்னர், பெயர் மாற்றம் சட்டப்பூர்வமாக நடைமுறைக்கு வரும். இதன் மூலம் அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் ‘கேரளா’ என்பதற்குப் பதிலாக ‘கேரளம்’ என பெயர் மாற்றம் செய்யப்படும்.

இதையும் படியுங்க  உலகளாவிய போர்ப் பதற்றம்… பிரதமர் மோடி விடுத்த அதிரடி வேண்டுகோள்!

மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறிய பிறகு, மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பதிவுகளிலும் ‘கேரளா’ என்ற பெயர் ‘கேரளம்’ என மாற்றப்படும்.

இதனிடையே, இன்று மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கங்களை எழுப்பினர். இந்த அமளி மற்றும் கூச்சல் குழப்பத்துக்கு இடையே, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், ‘கேரளா (பெயர் மாற்றம்) மசோதா, 2026’-ஐ மக்களவையில் அறிமுகம் செய்தார்.

இந்த மசோதா உட்பட மொத்தம் நான்கு முக்கிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டம் காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி நீடித்து வருவதால், இந்த மசோதா குறித்து பெரிய அளவிலான விவாதம் இல்லாமலேயே விரைவில் நிறைவேற்றப்படலாம் என கேரளாவைச் சேர்ந்த சில எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.

உயர் நீதிமன்றத்தின் பெயர் உடனடியாக மாறாது

Republic Tamil

மாநிலத்தின் பெயர் ‘கேரளம்’ என மாற்றப்பட்டாலும், அங்குள்ள கேரள உயர் நீதிமன்றத்தின் பெயர் உடனடியாக மாறாது.

இந்திய சட்டப்படி, உயர் நீதிமன்றங்களின் பெயர்களை மாற்றுவதற்கு தனியாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும். இதற்கு உதாரணமாக, மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மற்றும் பாம்பே உயர் நீதிமன்றம் ஆகியவை மாநிலங்களின் பெயர்கள் மாற்றப்பட்ட பின்னரும் பழைய பெயர்களிலேயே தொடர்வதைச் சுட்டிக்காட்டலாம்.

இதையும் படியுங்க  பெண்கள் கையில் 'பிரியதர்ஷினி' டிக்கெட்.. கேரளாவில் தொடங்கிய புதிய சகாப்தம்!

நிர்வாக ரீதியாக பெரும் செலவு ஏற்படும்?

மாநிலத்தின் பெயர் மாற்றத்தால் பெரிய அளவிலான அரசியல் மாற்றங்கள் எதுவும் ஏற்படாது என்றாலும், நிர்வாக ரீதியாக கணிசமான செலவுகள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

அரசின் லெட்டர் பேடுகள், முத்திரைகள், இணையதளங்கள், அரசு பேருந்துகள், அதிகாரப்பூர்வ ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ‘கேரளா’ என்ற பெயரை மாற்றி ‘கேரளம்’ எனப் பதிவிட வேண்டியிருக்கும். இதற்காக பல கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

‘ஐக்கிய கேரளம்’ கோரிக்கை முதல் பெயர் மாற்றம் வரை!

மலையாள மொழி பேசும் மக்களுக்கென தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. கேரளாவின் கம்யூனிஸ்ட் தலைவரும், அம்மாநிலத்தின் முதல் முதலமைச்சருமான இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், 1948ஆம் ஆண்டிலேயே மலையாளம் பேசும் மக்கள் வாழும் பகுதிகளை ஒன்றிணைத்து ‘ஐக்கிய கேரளம்’ உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக முன்வைத்தார்.

இதைத்தொடர்ந்து, 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டபோது கேரள மாநிலம் உருவானது. அப்போது இந்திய அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் மாநிலத்தின் பெயர் ‘கேரளா’ என்றே பதிவு செய்யப்பட்டது.

இதையும் படியுங்க  மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை! டெல்லி தீ விபத்தில் உயிர்காத்த மெத்தை கடைக்காரருக்கு குவியும் பாராட்டு!

சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது அந்தப் பெயர் மலையாளத்தில் பயன்படுத்தப்படும் ‘கேரளம்’ என்ற பெயருக்கு ஏற்ப அதிகாரப்பூர்வமாக மாற்றப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசியல் தலைவர்கள் வரவேற்பு

இந்த பெயர் மாற்ற நடவடிக்கையை முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்றுள்ளார். தனது எக்ஸ் தளப் பதிவில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி தெரிவித்த அவர், மலையாள மக்களின் நீண்டகால கலாச்சார மற்றும் மொழி சார்ந்த அடையாளக் கனவு தற்போது அரசியலமைப்பு ரீதியாக நனவாகும் நிலையை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல், கொல்லம் தொகுதி எம்.பி. என்.கே. பிரேமச்சந்திரன் உள்ளிட்ட கேரள எம்.பி.க்கள், இந்த மசோதா நாடாளுமன்றத்தில் பெரிய அளவிலான விவாதம் இல்லாமல் விரைவில் நிறைவேற வாய்ப்புள்ளதாகவும், அதே நேரத்தில் பெயர் மாற்றத்துக்கான நடைமுறைச் செலவுகள் கணிசமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம், இந்திய அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் சுமார் 70 ஆண்டுகளாக இடம்பெற்றுள்ள ‘கேரளா’ என்ற பெயர், ‘கேரளம்’ என அதிகாரப்பூர்வமாக மாறுவதற்கான முக்கிய நடவடிக்கை தொடங்கியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 days ago at 4 days ago