Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

மாதவிடாய் சுழற்சியின் லூட்டியல் கட்டத்தில் (Luteal Phase) ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் தோற்ற மற்றும் மனநிலை மாற்றங்களை பெண்கள் ‘லூட்டியல் அக்லீஸ்’ (Luteal Uglies) என்று குறிப்பிடி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர். இது உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் இயல்பான மாற்றமாகக் கருதப்படுகிறது.

‘லூட்டியல் அக்லீஸ்’ என்பது வெறும் சமூக ஊடகப் போக்கு (Trend) மட்டுமல்ல; பெண்களின் உடலில் ஏற்படும் உண்மையான ஹார்மோன் மாற்றங்களின் வெளிப்பாடாகவும் மருத்துவர்கள் விளக்குகின்றனர்.

மாதவிடாய் சுழற்சியின் இரண்டாம் பாதியான லூட்டியல் கட்டத்தில், ஈஸ்ட்ரோஜன் (Estrogen) ஹார்மோனின் அளவு குறைவதுடன், புரோஜெஸ்ட்டிரோன் (Progesterone) ஹார்மோனின் அளவு மாறுபடுகிறது. இதன் விளைவாக பெண்களின் தோற்றத்திலும் மனநிலையிலும் தற்காலிக மாற்றங்கள் ஏற்படுகின்றன.

புரோஜெஸ்ட்டிரோன் அளவு அதிகரிப்பதால் சருமத்தில் எண்ணெய் சுரப்பு அதிகரித்து, முகப்பருக்கள் மற்றும் சிறிய புள்ளிகள் தோன்றக்கூடும். அதே நேரத்தில், ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் சருமத்தின் கொலாஜன் (Collagen) உற்பத்தி பாதிக்கப்பட்டு, சருமம் வறண்டு, பொலிவிழந்து, சோர்வாகக் காணப்படலாம்.

மேலும், இந்தக் கட்டத்தில் உடல் அதிகளவு திரவத்தைத் தக்கவைத்துக் கொள்வதால் முகம் வீங்கியதுபோல் தோன்றுவதுடன், மார்பகங்களும் கனமாக உணரப்படலாம்.

மூளையில் செரோடோனின் (Serotonin) அளவு குறைவதால் கடுமையான கோபம், எரிச்சல், சோகம், மனஅழுத்தம் உள்ளிட்ட உணர்ச்சி மாற்றங்கள் ஏற்படலாம். இந்த நாட்களில் கண்ணாடியில் தங்களைப் பார்க்கும்போது, தங்களது தோற்றத்தைப் பற்றிய எதிர்மறையான எண்ணங்கள் மற்றும் அதிக சுயவிமர்சன உணர்வு உருவாகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்க  "கோவையில் கார் திருவிழா: சொகுசு மற்றும் விண்டேஜ் கார்களின் பிரம்மாண்ட அணிவகுப்பு!"

இந்த மாற்றங்களைச் சமாளிக்க, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலில் தேங்கும் தேவையற்ற திரவங்களை வெளியேற்றி முக வீக்கத்தைக் குறைக்க உதவும். உப்பு அதிகமுள்ள மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, மெக்னீசியம் நிறைந்த உணவுகள் மற்றும் கீரை வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கடுமையான உடற்பயிற்சிகளுக்குப் பதிலாக நடைப்பயிற்சி அல்லது யோகா போன்ற எளிய பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. மேலும், காபி மற்றும் ஆல்கஹால் அருந்துவதைத் தவிர்ப்பது பதற்றத்தையும் தூக்கமின்மையையும் கட்டுப்படுத்த உதவும்.

அதேபோல், மாதவிடாய் சுழற்சியைத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம், இந்த மாற்றங்கள் தற்காலிகமானவை என்பதைப் புரிந்துகொண்டு மனதளவில் தயாராக இருக்க முடியும்.


Republic Tamil

இது தொடர்பான விவாதங்கள் சமூக ஊடகங்களில் அதிகரித்து வருவது, பெண்கள் தங்கள் உடலைப் பற்றி மேலும் புரிந்துகொள்வதற்கும், ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதற்கும் ஒரு நல்ல தளத்தை உருவாக்கியுள்ளது. இருப்பினும், இந்த அறிகுறிகள் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் அளவுக்கு தீவிரமாக இருந்தால், குறிப்பாக PMDD (Premenstrual Dysphoric Disorder) போன்ற பாதிப்புகள் இருக்கக்கூடும் என்பதால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

இதையும் படியுங்க  “மாரடைப்பின் உண்மையான காரணம்: கொலஸ்ட்ராலா அல்லது குடல் ஆரோக்கியமா?”

டிக்டாக் (TikTok) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற சமூக ஊடக தளங்களில், “நான் உலகிலேயே மிகவும் அசிங்கமாக உணர்கிறேன்; நீங்கள் லூட்டியல் கட்டத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்” என்ற கருத்தில் வெளியாகும் வீடியோக்கள் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று வருகின்றன.

இந்த வீடியோக்களின் கீழ் ஆயிரக்கணக்கான பெண்கள், “இது அப்படியே எனக்குப் பொருந்துகிறது”, “இந்தக் கட்டத்தில் நான் கண்ணாடியில் என்னைப் பார்க்கவே விரும்புவதில்லை” என்று கருத்துகளைப் பகிர்ந்து தங்களது அனுபவங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மருத்துவ ஆய்வுகளின்படி, லூட்டியல் கட்டத்தில் ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் செரோடோனின் ஹார்மோன்களின் குறைவு, பெண்களுக்கு தங்களது உடல் தோற்றம் குறித்து தீவிரமான எதிர்மறை எண்ணங்களை உருவாக்குவதுடன், தற்காலிக ‘பாடி டிஸ்மார்பியா’ (Body Dysmorphia) போன்ற உணர்வுகளையும் தூண்டக்கூடும்.

இது சாதாரண PMS (Premenstrual Syndrome) அறிகுறிகளை விட தீவிரமான PMDD (Premenstrual Dysphoric Disorder) என்ற மனநல மற்றும் உடல்நலப் பாதிப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம். உலகளவில் சுமார் 3 முதல் 8 சதவீத பெண்கள் வரை இந்த பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சில பெண்களுக்கு இந்தக் காலகட்டத்தில் பார்வை மங்குவது போன்ற உணர்வு, அன்றாடப் பேச்சுவழக்கில் எளிய வார்த்தைகளைக்கூட மறந்து விடுதல், பழைய மனவேதனையான நினைவுகள் (Flashbacks) மீண்டும் மீண்டும் தோன்றி மனஅழுத்தத்தை ஏற்படுத்துதல் போன்ற தீவிரமான அறிகுறிகளும் காணப்படுவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இதையும் படியுங்க  ஜூன் 30-முதல் காகித ரூபாட் நோட்டுகள் செல்லாதா..? அலறிய மக்கள்… உண்மையை உடைத்த ரிசர்வ் வங்கி..!

இதன் தொடர்ச்சியாக, சமூக ஊடகங்களில் பரவி வரும் ‘சைக்கிள் சின்கிங்’ (Cycle Syncing) என்ற நடைமுறையையும் பல பெண்கள் பின்பற்றி வருகின்றனர். இதில், மாதவிடாய் சுழற்சிக்கு ஏற்ப உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் அன்றாடப் பணிகளை மாற்றியமைக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், டாக்டர் அலெக்சாண்டிரா ட்ரையர் கூறுகையில், “பெண்களின் உடலின் இயல்பான மற்றும் இயற்கையான ஒரு சுழற்சி கட்டத்தை ‘அசிங்கமானது’ (Ugly) என்று குறிப்பிடுவது, பெண்களின் மனநிலையில் தேவையற்ற எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, அந்த வார்த்தைப் பயன்பாட்டைத் தவிர்ப்பது நல்லது,” என்று எச்சரிக்கிறார்.

மேலும், இந்த நாட்களில் மனச்சோர்வு, பதற்றம் அல்லது கவனக்குறைவு காரணமாக அலுவலகப் பணிகளையோ, அன்றாடச் செயல்பாடுகளையோ மேற்கொள்ள முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதை சாதாரண ஹார்மோன் மாற்றம் என்று அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டும் என்று மருத்துவ ஆய்வுகளும் நிபுணர்களும் வலியுறுத்துகின்றனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago