தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, கட்சி நிர்வாகி ஒருவரை அலைபேசியில் மிரட்டியதாகக் கூறப்படும் ஆடியோ பதிவு வெளியாகி, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அமைச்சர் மற்றும் தவெக அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

விருதுநகர் வடமேற்கு தவெக ஒன்றியச் செயலாளர் ராஜகுருவுடன் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியதாகக் கூறப்படும் அந்த ஆடியோவில், சாத்தூர் பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி லட்சுமணன், ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று அதிகாரிகளுக்கு லட்டு வழங்கிய சம்பவம் குறித்து அமைச்சர் கடும் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அந்த உரையாடலில், “சாத்தூர்க்காரன் என் தொகுதிக்குள் வந்து வேலை பார்க்க யார் அதிகாரம் கொடுத்தது? ஆரம்பத்திலிருந்தே என்னை சீண்டிக்கொண்டே இருக்கிறான். என் தொகுதிக்குள் அவன் கால் வைத்தால் தூக்கி வைத்து, சட்டியோட வைத்து, அடிச்சு கொன்னுடுவேன்” என்று ஆவேசமாகப் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆடியோ வெளியாகி பரவலாக பேசப்பட்டதைத் தொடர்ந்து, தவெக தலைமை உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. அமைச்சருடன் அலைபேசியில் பேசியதாகக் கூறப்படும் விருதுநகர் வடமேற்கு ஒன்றியச் செயலாளர் ராஜகுரு, கட்சி விதிமுறைகளுக்கு முரணாக செயல்பட்டதாகக் கூறி தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தவெக ஆட்சி அமைந்த சில நாட்களிலேயே அமைச்சர்கள் தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் எழுந்துவரும் நிலையில், அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு இது இரண்டாவது முக்கிய சர்ச்சையாகக் கருதப்படுகிறது.
இதற்கு முன்பு, விருதுநகரில் நடைபெற்ற அரசு விழாவில், பேனரில் தனது பெயர் இரண்டாவது இடத்தில் இடம்பெற்றிருந்ததை எதிர்த்து, “நான் இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர்; எனது பெயர்தான் முதலில் இருக்க வேண்டும்” என்று மாவட்ட ஆட்சியருடன் மேடையிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அந்த சர்ச்சை ஓய்வதற்குள், தற்போது சக கட்சி நிர்வாகியையே மிரட்டியதாகக் கூறப்படும் இந்த ஆடியோ வெளியாகியிருப்பது, சட்டம்-ஒழுங்கு மற்றும் தூய ஆட்சி என வலியுறுத்தி வந்த தவெக அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆடியோவை சுட்டிக்காட்டி, “மிரட்டல் அரசியலுக்கு இடமில்லை” என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக அரசின் உண்மை முகம் இதுதானா? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி கடுமையாக விமர்சித்து வருகின்றன.

மறுபுறம், அமைச்சர் ஜெகதீஸ்வரியின் ஆதரவாளர்கள் இந்த ஆடியோவை திட்டமிட்டு திருத்தி (எடிட் செய்து) பரப்பப்பட்ட போலி பதிவு எனக் கூறி மறுப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த உரையாடல் அமைச்சர் பதவியேற்ற பிறகு நடைபெற்றதல்ல; அவர் அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்பு, தேர்தல் அல்லது கட்சிப் பணிகளின் போது நடைபெற்ற பழைய உரையாடல் என்ற தகவலையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
ஆனால், “அமைச்சராக பதவியேற்பதற்கு முன்பு பேசியதாக இருந்தாலும், அதற்கு அரசியல் பொறுப்பு இல்லையா?” என்ற கேள்வியையும் எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.
இதற்கிடையில், கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட ஒன்றியச் செயலாளர் ராஜகுரு, அமைச்சர் ஜெகதீஸ்வரி மற்றும் தவெக தலைமை மீது புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
“நான் எந்தத் தவறும் செய்யவில்லை. கடந்த 25 ஆண்டுகளாக அரசு ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறேன். அதையே காரணமாகக் காட்டி அமைச்சர் ஜெகதீஸ்வரி திட்டமிட்டு என் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுத்துள்ளார். என் மீதான நடவடிக்கையை மறுபரிசீலனை செய்து, கட்சிப் பொறுப்பை மீண்டும் வழங்க வேண்டும்” என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த ஆடியோ சர்ச்சை ஒருபுறம் நீடித்து வரும் நிலையில், தவெக அரசுக்கு மேலும் ஒரு புதிய சிக்கலும் உருவாகியுள்ளது. உசிலம்பட்டி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் விஜயை பணம் கொடுத்து கட்சி மாறச் செய்ய முயன்றதாகக் கூறப்படும் வழக்கில் மூன்று பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இதனால் ஆடியோ சர்ச்சையும், ஆட்சி கவிழ்ப்பு முயற்சி குறித்த குற்றச்சாட்டும் சேர்ந்து தவெக அரசுக்கு இரட்டை நெருக்கடியை உருவாக்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து விளக்கம் கேட்க செய்தியாளர்கள் அமைச்சர் ஜெகதீஸ்வரியை தொடர்புகொள்ள முயன்றபோதும், அவர் அழைப்புகளை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுவரை அமைச்சர் அல்லது தவெக தலைமையிடமிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகாத நிலையில், இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
அமைச்சரின் ஆடியோ பதிவு உண்மையா அல்லது திருத்தப்பட்ட பதிவா என்பது குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை நடத்தப்பட்டு உண்மை நிலை வெளிவர வேண்டும் என்பதே தற்போது அரசியல் வட்டாரங்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
