Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாக ஆசை காட்டி ரூ.63 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபரின் பெரம்பூர் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், அறை முழுவதும் டம்மி ரூபாய் நோட்டுக் கட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த டம்மி நோட்டுகளை பயன்படுத்தி அவர் வேறு எந்தெந்த வகையான மோசடிகளில் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த தங்க நகை வியாபாரி அன்மோல் ஜெயின், தனது உறவினர் நமீத்துடன் இணைந்து மொத்தமாக தங்கம் வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 17-ஆம் தேதி, மொத்தமாக தங்கம் வாங்க வேண்டியிருப்பதாக நமீத், அன்மோல் ஜெயினை தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார்.

அப்போது, தனது பணியாளர் ராஜேந்திர ஜெயினிடம் ரூ.63 லட்சம் பணத்தை கொடுத்து அனுப்புவதாகவும், எழும்பூரில் உள்ள பவுண்டன் பிளாசா வளாகத்தில் குறைந்த விலைக்கு தங்கம் விற்பனை செய்யும் நபர்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், அவர்களிடம் அழைத்துச் செல்ல ஸ்ரீராம் என்ற நபர் வருவார் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்படி, எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே அன்மோல் ஜெயினை ஸ்ரீராம் சந்தித்துள்ளார். அவருடன் சக்தி என்பவரும் வந்திருந்தார். சக்தி, தனது தந்தை சாந்தகுமாருடன் இணைந்து எழும்பூரில் நகைக் கடை நடத்தி வருவதாகவும், இருவரும் மொத்தமாக தங்கம் வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் இருப்பதாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதையும் படியுங்க  ரூ.1.64 லட்சமாக உயர்ந்த தங்கம்..! 2 நாட்களில் ரூ.10,000 குறைந்த வெள்ளி விலை..!

பின்னர், அன்மோல் ஜெயின், ஸ்ரீராம் மற்றும் சக்தி ஆகிய மூவரும் இரண்டு இருசக்கர வாகனங்களில் எழும்பூரில் உள்ள பவுண்டன் பிளாசாவுக்கு சென்றுள்ளனர். அங்கு காத்திருந்த நமீத்தின் பணியாளர் ராஜேந்திர ஜெயின், ரூ.63 லட்சம் பணத்தை அன்மோல் ஜெயினிடம் ஒப்படைத்துள்ளார்.

அந்த நேரத்தில் அங்கு வந்த சாந்தகுமார், பணத்தை பெற்றுக்கொண்டு தனது மகன் சக்தியிடம் கொடுத்து, “தங்க நகையும் பில்லையும் எடுத்து வா” என்று கூறி அனுப்பியுள்ளார். அன்மோல் ஜெயின் மற்றும் சாந்தகுமார் உள்ளிட்டோர் பவுண்டன் பிளாசா வளாகத்தின் கீழ்தளத்தில் காத்திருந்தனர்.

சுமார் 10 நிமிடங்கள் ஆகியும் தங்கம் வராததால், அருகிலுள்ள மற்றொரு கடைக்கு தங்கம் வந்துவிட்டதாக கூறி, அங்கு செல்லலாம் என சாந்தகுமார் அன்மோல் ஜெயினை அழைத்துச் சென்றுள்ளார். சாந்தகுமார் மற்றும் ஸ்ரீராம் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற நிலையில், அன்மோல் ஜெயின் மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்துள்ளார்.

ஆனால், சிறிது நேரத்தில் சாந்தகுமாரும் ஸ்ரீராமும் மாயமானதால் அன்மோல் ஜெயின் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, மாற்றி மாற்றி பேசி குழப்பியுள்ளனர். அப்போதுதான் தாம் திட்டமிட்டு செயல்பட்ட மோசடி கும்பலிடம் சிக்கியிருப்பதை அன்மோல் ஜெயின் உணர்ந்துள்ளார்.

இதையும் படியுங்க  மர்ம சூட்கேஸ்.. சிதறிய தலை.. சென்னை பெரம்பூரில் அரங்கேறிய பகீர் கொலை! யார் அந்த நபர்?

இதையடுத்து, எழும்பூர் காவல் நிலையத்தில் அன்மோல் ஜெயின் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், இந்த மோசடியில் சாந்தகுமார், ஸ்ரீராம், ராம்குமார் மற்றும் உதயகிரண் ஆகியோர் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.50 ஆயிரம் ரொக்கம், இரண்டு ஐபோன் செல்போன்கள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சக்திவேல் மற்றும் விஷ்வா ஆகிய இருவரையும் சில நாட்களுக்குப் பிறகு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.44 லட்சத்து 50 ஆயிரம் பணத்தையும் மீட்டனர்.

இதனைத் தொடர்ந்து, முக்கிய குற்றவாளியான சாந்தகுமாரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையின் ஒரு பகுதியாக, பெரம்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, வீட்டில் இருந்த ஒரு அறை முழுவதும் டம்மி ரூ.500 நோட்டுக் கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உண்மையான ரூபாய் நோட்டுகளைப் போல தோற்றமளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருந்த அந்த டம்மி நோட்டுக் கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையும் படியுங்க  "ரீல்ஸுக்கு லைக்ஸ் தேடி... கடைசியில் கம்பி எண்ணிய இன்ஸ்டா பிரபலங்கள்! - சென்னையில் ₹10 லட்சம் சொகுசு பைக்குடன் 'தரமான' செய்கை செய்த போலீஸ்!"

ஏற்கனவே குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது வீட்டில் இருந்து டம்மி ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இந்த டம்மி நோட்டுகளை பயன்படுத்தி சாந்தகுமார் வேறு எந்தெந்த வகையான மோசடிகளை அரங்கேற்றியுள்ளார்? யாரெல்லாம் அவரது மோசடிக்கு பலியாகியுள்ளனர்? இந்த சம்பவத்தில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், டம்மி ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றும் வகையில் வேறு மோசடி சம்பவங்களில் சாந்தகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால், அவரது முந்தைய நடவடிக்கைகள், நிதி பரிவர்த்தனைகள் மற்றும் தொடர்புடைய நபர்கள் குறித்தும் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago