Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன் உயிரிழந்த விவகாரத்தில், பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் தலைமை வார்டன் உள்ளிட்ட 3 சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நாகர்கோவில் ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த சபரிவர்மன், தனது கடையில் குட்கா விற்பனை செய்ததாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டு, நாகர்கோவில் கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவர் சிறையிலேயே திடீரென உயிரிழந்தார்.

முதற்கட்டமாக, உடல்நலக் குறைவு காரணமாக சபரிவர்மன் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய உறவினர்கள், உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்து தொடர்ந்து இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மாவட்ட நீதிபதி முன்னிலையில் சபரிவர்மனின் உடற்கூறு ஆய்வு (பிரேதப் பரிசோதனை) மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பரிசோதனை அறிக்கையில், அவரது உடலில் மொத்தம் 19 இடங்களில் காயங்கள் மற்றும் தழும்புகள் இருந்தது தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்க  பல்லடத்தில் பயங்கரம்... தாய், மகளை வெட்டிக்கொன்ற கொடூரன்... பகீர் பின்னணி...!

கை, கால், மார்பு, தலை உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் காயங்கள் இருந்ததுடன், பல இடங்களில் இரத்தக் கட்டுகள் காணப்பட்டதாகவும், ஒரு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவல்களைத் தொடர்ந்து, சபரிவர்மன் சிறைக் காவலில் தாக்கப்பட்டிருக்கலாம் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அவரை தாக்கியதன் விளைவாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் அவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் சிறைத்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், நேசமணி நகர் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர்.

மேலும், நாகர்கோவில் கிளைச் சிறையின் தலைமை வார்டன் திருமலை நம்பி மற்றும் சிறைக் காவலர்கள் ஜெகன், சிவக்குமார் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட மூவரையும் பணியிடை நீக்கம் செய்து, நெல்லை மத்திய சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) செந்தாமரை கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சபரிவர்மனின் உயிரிழப்புக்கான உண்மை நிலையை கண்டறிய போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்க  70 வயதிலும் தளராத வீரியம்! வாசுதேவநல்லூரில் வைகோவின் அதிரடி பட்டினிப் போராட்டம்!
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago