https://republictn.com/

இளம்தலைமுறையை வீடுகளில் எவ்வித பாதிப்பும் இன்றி வளர்த்த பெற்றோர், அவர்களுக்குச் சரியான அரசியல் புரிதலைச் சொல்லிக் கொடுக்காமல் போனதன் விளைவாகவே ஒரு வெற்றிடம் உருவானது. அந்த வெற்றிடம்தான் உண்மையில் விஜய்க்கு இவ்வளவு பெரிய வெற்றி வாய்ப்பை வழங்க காரணம் என்பதே உண்மை.

முந்தைய காலக்கட்டங்களில், கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்த்த பெற்றோர், சமூக பொறுப்புணர்வு கொண்டவர்களாக, தமிழ், தமிழ் பண்பாடு, நேர்மை போன்றவற்றை கதைகள் மூலமாக சொல்லிக் கொடுத்தன் விளைவாக ஒரு அரசியல் புரிதலை 18 வயது நிரம்பிய மாணவன் அடைய முடிந்தது.

ஆனால், இன்றைக்கு அரசியல் புரிதலை விட, பொழுதுபோக்கு, நையாண்டி, யாரை பற்றியும் கவலைப்படாத மனப்போக்கு, நாகரீகம் என்ற பெயரில் மேலைநாட்டு கலாசாரத்தை பின்பற்றுதல், குடும்ப உறவுகளுக்கு மதிப்பளிக்காமை, தானே ராஜா தானே மந்திரி போன்ற ஒரு தலைமுறை உருவெடுத்திருக்கிறது.

இந்த தலைமுறை எது நல்லது? எது கெட்டது? என்பதை உணர முடியாமல் உணர்ச்சி வசப்பட்டு முடிவுகளை எடுக்கக் கூடிய நிலையை எட்டியிருப்பதும் கூட விஜய் திடீரென அரசியல் களத்தில் வெற்றி வாய்ப்பை பெற காரணம். இது ஒரு வகையில் ஆட்சி அதிகாரத்தில் கடந்த அரை நூற்றாண்டாக ஊழலை தாரகமந்திரமாக கொண்டிருந்த இரு திராவிடக் கட்சிகளுக்கும் பாடம் புகட்டியதுதான் ஆச்சரியமான விஷயம்.

விஜய் என்ன செய்ய வேண்டும்?
சினிமா என்ற போதை மூலம் ரசிகர்களை கவர்ந்திருக்கும் நடிகர் விஜய், அரசியல் ரீதியாக மக்களுக்கு என்னென்ன நன்மைகளை செய்து அவர்களை கவர முடியும் என்பதை திட்டமிட வேண்டும். விஜய் உண்மையில் தமிழக மக்களால் முழு மனதோடு தேர்வு செய்யப்பட்ட வெற்றியாளர் அல்ல. இதை முதலில் அவர் உணர வேண்டும்.

அவருக்கு மொத்தம் வாக்களித்தவர்களில் 35 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்திருக்கிறார்கள். மீதமுள்ள 65 சதவீதம் மக்கள் இன்னமும் விஜயை ஏற்றுக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் விஜய்க்கு அறுதி பெரும்பான்மை என்ற 117 என்ற வெற்றி இலக்கை எட்ட மக்கள் உதவவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இதனால் ஒரு தொங்கு சட்டசபையையே விஜய் அமைக்க வேண்டிய நிலை இப்போது. ஏற்கெனவே ஆட்சியில் பங்கு என்ற அறைகூவலோடு வலம் வந்த விஜய்க்கு ஒரு நல்ல வாய்ப்பு இது. அதனால், ஆட்சியில் பங்கு என்ற ரீதியில் இன்றைக்கு வெற்றிபெற்ற திமுக அணியில் உள்ள ஒருசில சிறிய கட்சிகள், அதிமுக அணியில் உள்ள ஒருசில சிறிய கட்சிகள் ஆதரவு அளிக்கக்கூடும்.

இதை நல்ல முறையில் பயன்படுத்தும் அதே வேளையில், திமுகவை போல, அதிமுகவை போல விஞ்ஞான ஊழலில் ஈடுபடும் மனப்போக்கு விஜய்க்கோ, அவரது வெற்றி வேட்பாளர்களுக்கோ, கட்சியின் மாவட்ட நிர்வாக ரீதியிலான நிர்வாகிகளுக்கோ இருக்குமேயானால் 5 ஆண்டுகளுக்கு கட்டாயம் ஒதுக்கி வையுங்கள்.

ஆட்சிக்கு வந்ததே, சம்பாதிக்கத்தான் என்று கட்சித் தலைமை முதல் நிர்வாகிகள் வரை நினைத்தால் அடுத்த முறை இத்தகைய வாய்ப்பை தமிழக வெற்றிக் கழகத்துக்கு மக்கள் அளிக்க மாட்டார்கள் என்பதை உணர வேண்டும். அதனால், எதிர்காலப் பணிகள் முற்றிலும் லஞ்ச, லாவண்யம் அற்ற, நேர்மையான அரசாக அமைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் மட்டுமே விஜயின் எதிர்காலத்தை காப்பாற்றும்.

அத்துடன் இன்றைக்கு தேர்வு செய்யப்பட்ட தவெக சட்டப் பேரவை உறுப்பினர்கள் தங்களை திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் போல் எஜமானர்களாக நினைத்துக் கொண்டு மக்களை துச்சமென மதிக்கும் கடந்தகால எம்எல்ஏ கலாசாரத்தை கைவிட வேண்டும்.
மக்கள் எளிதில் சந்திக்கும் ஒரு நண்பனாக, மக்களை நோக்கி சென்று குறைகளை கேட்கும் ஊழியனாக இருக்க வேண்டும். ஊராட்சி, மாநகராட்சி, கட்டுமானங்கள், பயன்பாட்டுப் பொருள்கள், சாலைப் பணிகள் என அனைத்திலும் திமுக மற்றும் அதிமுகவைப் போல் கூட்டுக்கொள்ளை அடிக்காமல் இருக்க வேண்டும்.

அந்தத் தவறுகளை நீக்கும் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் தவேகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். இந்த விஷயத்தை இப்போது விஜய் உணராவிட்டால், அவரது எதிர்காலம் இன்றைய அரசியல் கட்சிகளை விட மிக மோசமானதாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. மதுக்கடைகளை ஒழிக்கப் போகிறேன் என்று லாட்டரி சீட்டை கொண்டுவரும் நோக்கத்தை ஒரு வேளை விஜய் கொண்டிருப்பாரேயானால், அது அவரது ஆட்சிக்கு வைக்கப்படும் மிகப்பெரிய வேட்டு என்பதையும் எச்சரித்தாக வேண்டும்.

திமுகவுக்கு எச்சரிக்கை
எதிர்க்கட்சி வரிசையில் அதிமுகவை விட திமுகவே மேல் என்ற ரீதியில்தான் அந்த தகுதியை மக்கள் அளித்திருக்கிறார்கள். அத்துடன் சட்டப் பேரவையில் மறைந்த முதல்வர் கருணாநிதி வெற்றி பெற்றும் அமர முடியாத சூழல் ஏற்பட்டது போன்ற நிலை மு.க. ஸ்டாலினுக்கு ஏற்படவில்லை.

காரணம் மக்கள் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் எதிர் வரிசையில் அமர்ந்து செயல்படுவதை விட, கட்சியின் தலைமைக்கு முழு பொறுப்பேற்று அதை தூய்மை செய்யும் பணியையும், மக்களுக்கு நேர்மையான முறையில் தொண்டாற்றும் வகையிலான நேர்மையாளர்களை கட்சியில் உயர்த்திப் பிடிக்க தொடங்க வேண்டும் என்று அவரை மக்கள் தோல்வியுற செய்திருக்கிறார்கள்..

உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய வாரிசாக வரவேண்டும் என்ற மு.க.ஸ்டாலினின் ஆசையும் கூட இப்போது நிறைவேறியிருக்கிறது. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி வெற்றி மூலம் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக அமரும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. திமுக தலைமையும், அக்கட்சியில் இதுவரை கோடிக்கோடியாக பல தலைமுறைக்கு பணம் சேர்த்தவர்களும், இனியாவது மக்களுக்கு உண்மையான தொண்டாற்றும் மனநிலையோடு காய் நகர்த்த தொடங்க வேண்டும்.

நேர்மையானவர்கள், குறிப்பாக கம்யூனிஸ சித்தாந்த தோழர்களிடம் காணப்படும் நல்ல குணாதியசங்களைக் கொண்டவர்களை எதிர்காலத்தில் வேட்பாளர்களாக நிறுத்துங்கள். பணம் இருப்பவன்தான் பலசாலி என்ற நிலையை கட்சி மட்டத்தில் இருந்து அகற்றுங்கள். எதிர்காலத்தில் கட்சியில் உழைக்கும் அடிமட்ட தொண்டனும்கூட சட்டப் பேரவைக்கு செல்லும் எம்ஜிஆர் பாணி அரசியலை கையில் எடுங்கள். அப்போதுதான் தலைமைக்கு கட்டுப்பட்ட நிர்வாகத்தை உங்களால் உருவாக்க முடியும்.

உங்களின் சிறப்பான நடவடிக்கைகள் மூலம் மக்கள் மீண்டும் ஒரு முறை வாய்ப்பை அளிக்க வழியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் இன்றைக்கு அதிமுகவுக்கு ஏற்பட்ட கடைசி இடம்தான் உங்கள் கட்சிக்கும் ஒதுக்கப்படும்.

அதிமுக செய்ய வேண்டியது என்ன?
அதிமுக மாநில உரிமைகளை கொஞ்சம்கொஞ்சமாக தன்னுடைய சுயநலத்துக்காக அடகு வைத்ததை மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். சுயநலத்தோடு, ஒருசில நிர்வாகிகளோடு கைக்கோர்த்துக்கொண்டு யார் ஆட்சியிலும் இருந்தாலும், வரவேண்டிய பங்கு வந்துவிடும் என்ற போக்கை இனியும் அதிமுக கடைபிடிக்குமானால் அதனுடைய எதிர்காலம் இப்போதைய சூழலை விட மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டுவிடும்.

மாநில உரிமைகளுக்கு குரல் கொடுப்பது, மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை தொய்வில்லாமல் தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் மூலம் மேற்கொள்வது போன்ற பணிகளை கடந்த கால எஜமான தோரணையை கைவிட்டு களத்தில் இறங்கிச் செல்ல பழகிக்கொள்ளுங்கள்.

நாட்டில் அரசியலில் ஊழல் மிகுந்த நிர்வாகங்களைக் கொண்டதாக மாற்றிய பெருமை திராவிடக் கட்சிகளான திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மிகப் பெரிய பங்கு உண்டு. இதை உணர்ந்தாவது எதிர்காலத்தை மக்கள் சேவை மனத்தை வளர்த்துக் கொண்டு, சுரண்டல் தத்துவத்தை கைவிட பழகிக் கொள்ளுங்கள். அதற்காகவே இன்றைக்கு 3-வது இடத்தை மக்கள் அளித்திருக்கிறார்கள்.

மூன்றாவது இடத்தில் இருந்து 2-ஆவது இடத்தை பிடிக்க முதலில் ஒரு நேர்மையான கட்டமைப்பு கொண்டவர்களாக மாறத் தொடங்குங்கள். இல்லாவிட்டால் 2031 தேர்தலில் அதிமுக என்ற கட்சி இருந்ததற்கான அடையாளம் கூட மறைந்துவிடும்.

பொதுவாக சொல்ல வேண்டுமென்றால், பணத்தால் ஓட்டுக்களை வாங்கிவிடலாம் என்ற மனநிலையை இப்போதாவது இரு திராவிட கட்சிகளும் கைவிட வேண்டும். பணத்தின் மூலம் சாதிக்கும் தன்மை உங்களிடம் இருந்து விடுபட்டால்தான் நாளைக்கு உங்களை நம்பி மக்கள் ஆட்சியை ஒப்படைப்பார்கள். இல்லாவிட்டால், நாளைக்கு உதயமாகும் மற்றொரு கட்சிக்கு வாய்ப்புக் கதவு திறக்கும்.
திமுக தோல்விக்கு முக்கிய காரணம் குடும்ப அரசியல், விஞ்ஞான ஊழல், மற்றும் நேர்மையானவர்களை, திறமையானவர்களை ஓரங்கட்டியதே முக்கிய காரணங்களாகும்.

தவெக வெற்றிக்கு யார் காரணம்?
அரசியல் மாற்றத்தை விரும்பிய, பணத்திற்கு விலைபோகாத இளம்தலைமுறையினரின் வாக்குகளே இதற்கு முக்கிய காரணம்.

விஞ்ஞான ஊழல் என்றால் என்ன?
அரசுத் திட்டங்களில் நேரடியாகச் சிக்காதவாறு, மிகவும் நுட்பமாகத் திட்டமிட்டுச் செய்யப்படும் முறைகேடுகள் விஞ்ஞான ஊழல் எனப்படும். இவற்றுக்கான சாட்சியங்களை திரட்டுவதும், நிரூபணம் செய்வதும் மிகவும் கடினம்.

பிடிஆர் பழனிவேல்ராஜன் ஏன் ஓரங்கட்டப்பட்டார்?
அவரது நேர்மையான மற்றும் வெளிப்படையான கருத்துகள் கட்சித் தலைமைக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியதால் அவர் ஓரங்கட்டப்பட்டார். பெயரளவில் ஒரு அமைச்சர் பதவி தரப்பட்டது. தேர்தல் களத்தில் அவரை தோற்கடிக்கவும் மாற்று வியூகங்கள் வகுக்கப்பட்டதன் காரணமாக தோற்றுப்போனார்.

தவெகவின் எதிர்காலம் என்ன?
அவர்கள் ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை வழங்கினால் மட்டுமே அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். பாரம்பரிய கட்சிகளின் ஊழல் மற்றும் வாரிசு அரசியலால் ஏற்பட்ட அதிருப்தியே இளைஞர்களை மாற்றுப்பக்கம் திருப்பியது.
ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கட்சியின் உயர்பதவிகளைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பது குடும்ப அரசியல் ஆகும். ஊராட்சி முதல் மாநகராட்சி வரை எவ்வித லஞ்சமும், கூட்டுக்கொள்ளையும் இன்றி மிகவும் நேர்மையாகச் செயல்பட வேண்டும். சட்டப் பேரவை உறுப்பினர்கள் மக்களால் எளிதில் அணுகக் கூடியவர்களாக நடந்து கொள்ள வேண்டும்.

2026 தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன?
பண பலத்தை விட மக்கள் சக்தியே மேலானது என்பதையும், நேர்மையான மாற்று அரசியலை தமிழகம் நாடுகிறது என்பதையும் உணர்த்துகிறது.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வாய்ப்பு உண்டா?
உண்டு. எம்ஜிஆர் பாணியில் ஒரு சாதாரண தொழிலாளியும் சட்டப் பேரவை உறுப்பினர் தகுதியை பெறும் வகையில் நேர்மையான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இப்போது களத்தில் இருப்பவர்களைத் தவிர இதர குடும்பத்தினரை அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago