Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், “என் கணவரை விட உங்களைத்தான் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று மேடையில் தெரிவித்த பெண் ரசிகைக்கு, தனது தனித்துவமான பாணியில் நாகரிகமாகவும், குடும்ப உறவின் மதிப்பை உணர்த்தும் வகையிலும் அளித்த பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் மங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஷாருக்கான் கலந்து கொண்டார். அப்போது, பெண் ரசிகை ஒருவர் தனது கணவரை அருகில் வைத்துக்கொண்டே, “என் கணவரை விட உங்களைத்தான் எனக்கு மிகவும் பிடிக்கும்… ஐ லவ் யூ” என்று வெளிப்படையாகக் கூறினார். இதைக் கேட்டதும் அரங்கில் இருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.

இதற்கு புன்னகையுடன் பதிலளித்த ஷாருக்கான், “இது உங்கள் உணர்வு. அதை நான் மதிக்கிறேன். உங்கள் கணவரும் உங்கள் மனதைப் புரிந்துகொள்வார் என்று நம்புகிறேன்,” என்று கூறி தனது பதிலைத் தொடங்கினார்.

தொடர்ந்து அவர், “என்னை நீங்கள் திரையில் மட்டும்தான் பார்க்க முடியும். உங்கள் வாழ்க்கையில் என்னால் எந்தப் பொறுப்பையும் ஏற்க முடியாது. உங்களுக்கு நான் வீடு வாங்கித் தரமாட்டேன். உங்கள் வீட்டு வாடகையை நான் செலுத்த மாட்டேன்.

இதையும் படியுங்க  ஒல்லியான தோற்றம்.. பரவிய வதந்திகள்! ஒற்றை போஸ்ட்டில் வாயடைக்க வைத்த சல்மான் கான்!

உங்கள் குழந்தைகளின் கல்விச் செலவுகளை நான் கவனிக்க மாட்டேன். அவர்களை தினமும் பள்ளிக்குச் சென்று அழைத்து வரவும் மாட்டேன். உங்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் நான் துடித்துப் போக மாட்டேன்.

உங்கள் கஷ்டங்களில் நான் பங்கேற்க மாட்டேன். உங்களுடன் சண்டையிடவும் மாட்டேன். உங்களை தினமும் மகிழ்ச்சியாக வைத்திருக்கவும் என்னால் முடியாது,” என்று கூறினார்.

பின்னர் ரசிகையை நோக்கி, “இவை எதையுமே செய்யாத என் மீது நீங்கள் இவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கையில் இவை அனைத்தையும் செய்து கொண்டிருக்கும் உங்கள் கணவரை நீங்கள் எந்த அளவுக்கு நேசிக்க வேண்டும் என்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் என்னை ஒரு நடிகராக ரசித்தால் மட்டும் போதும்,” என்று நெகிழ்ச்சியுடன் அறிவுரை வழங்கினார்.

இதோடு நிற்காமல், அந்தப் பெண் ரசிகையை தனது கணவரை நேருக்கு நேர் பார்த்து “ஐ லவ் யூ” என்று சொல்ல வைத்த பிறகே ஷாருக்கான் தனது உரையை நிறைவு செய்தார்.

இதையும் படியுங்க  தீபிகா படுகோனையே ஓவர்டேக் செய்த ராஷ்மிகா! இந்திய சினிமாவை ஆளும் புதிய பாக்ஸ் ஆபீஸ் ராணி!

ரசிகையின் உணர்வுகளைப் புண்படுத்தாமல், அதே நேரத்தில் கணவன்–மனைவி உறவின் மதிப்பையும், குடும்ப வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் மிக அழகாக எடுத்துரைத்த ஷாருக்கானின் இந்த முதிர்ச்சியான பதில், இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், “இதுதான் உண்மையான சூப்பர் ஸ்டார்”, “கிரேட் ஷாருக்கான்”, “குடும்ப உறவின் மதிப்பை அழகாக எடுத்துரைத்தார்” என்று சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago