திருப்பத்தூர் மண் இதுவரை கண்டிராத ஒரு அரசியல் நடுக்கத்தை சந்தித்துள்ளது. திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த இந்தத் தொகுதியில், த.வெ.க சார்பில் களமிறங்கிய டாக்டர் என். திருப்பதி, ஆளுங்கட்சியின் அதிகார பலத்தையும், சிட்டிங் எம்எல்ஏ-வின் செல்வாக்கையும் தவிடு பொடியாக்கி, 48,263 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார்.
துரோகத்தின் நெருப்பு
இந்த வெற்றிக்கு பின்னணியில் பல ஆண்டுகால அரசியல் ஏமாற்றமும், ஒரு மருத்துவரின் விடாமுயற்சியும் அடங்கி இருக்கின்றன. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவின் விசுவாசியாக, தெற்கு ஒன்றிய செயலாளராகப் பணியாற்றியவர் டாக்டர் திருப்பதி. மருத்துவராக மக்களிடம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த அவருக்கு, தொடர்ந்து மூன்று முறை அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இதற்குப் பின்னால் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணியின் அரசியல் சதி இருப்பதாக திருப்பதியின் ஆதரவாளர்கள் நீண்டகாலமாகவே குற்றம் சாட்டி வந்தனர். “உழைப்பவனுக்கு அங்கீகாரம் இல்லை” என்ற நிலையில், சரியான நேரத்திற்காகக் காத்திருந்த திருப்பதிக்கு, விஜய்யின் தவெக ஒரு களம் அமைத்துக் கொடுத்தது. அதிமுகவில் இழைக்கப்பட்ட அநீதிக்கு, தவெகவின் வெற்றிக் கொடியை ஏற்றிப் பதிலடி கொடுத்துள்ளார் திருப்பதி.
பங்காளிகளின் யுத்தம்
திருப்பத்தூர் தேர்தல் களம் வெறும் அரசியல் மோதலாக மட்டும் இருக்கவில்லை. அது இரண்டு ரத்த உறவுகளுக்கு இடையிலான கௌரவப் போராட்டமாகவும் மாறியது. திமுக சார்பில் போட்டியிட்ட சிட்டிங் எம்எல்ஏ நல்லதம்பி, டாக்டர் திருப்பதிக்கு சொந்தப் பங்காளி முறை வேட்பாளர்.
ஆனாலும், மக்கள் செல்வாக்கு யாரிடம் இருக்கிறது என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் தெள்ளத்தெளிவாகக் காட்டியுள்ளன. தவெக வேட்பாளரான டாக்டர் திருப்பதி பெற்றது 1,01,500 வாக்குகள். திமுகவின் நல்லதம்பி 56,835 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். வெற்றி வித்தியாசம்- 48,263
8 முறை வெற்றி பெற்ற திமுக-வின் கோட்டையை, ஒரு அறிமுக வேட்பாளராகக் களம் கண்டு சரித்துள்ளார் திருப்பதி. கடந்த இரண்டு முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்ற நல்லதம்பியை, இரண்டாம் இடத்திற்குத் தள்ளி படுதோல்வி அடையச் செய்துள்ளார்.
திருப்பத்தூர் கோட்டை சரிய காரணம்
கடந்த 40 ஆண்டுகளாக அரசு மருத்துவராகப் பணியாற்றிய திருப்பதி, அப்பகுதி கிராம மக்களின் நாடித் துடிப்பை அறிந்தவர். அதிமுக தலைமையின் மீது அதிருப்தியில் இருந்த அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் திருப்பதியின் ஆதரவாளர்கள், ஒட்டுமொத்தமாக தவெக-விற்கு வாக்களித்தது திமுக-வின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. விஜய்யின் அரசியல் வருகை மற்றும் ஒரு படித்த வேட்பாளர் என்ற பிம்பம் இளைஞர்களை வெகுவாக ஈர்த்தது.

அமைச்சரவை?
தற்போது திருப்பத்தூர் முழுவதும் டாக்டர் திருப்பதியின் ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் உற்சாகமடைந்துள்ளனர். “எங்கள் தலைவருக்கு, அதிமுகவில் அநீதி இழைத்தவர்களுக்கு இதுதான் சரியான பாடம். விரைவில் அமையவுள்ள தவெக அமைச்சரவையில், டாக்டர் திருப்பதி ஒரு முக்கிய அமைச்சராக இடம்பெறுவார்” என அவரது ஆதரவாளர்கள் குதூகலிக்கின்றனர். பங்காளியை வீழ்த்தி, பழைய கணக்குகளைத் தீர்த்து, ஒரு புதிய அரசியல் விடியலை நோக்கி டாக்டர் திருப்பதி நடைபோடுகிறார்.
