https://republictn.com/

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம், 2026 அக்டோபர் 15 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் (Sun Pictures) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், சன் பிக்சர்ஸ் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் ‘டேட் அனௌன்ஸ்மெண்ட் டீசர்’ (Date Announcement Teaser) வீடியோவை வெளியிட்டுள்ளது. ஆயுத பூஜை மற்றும் தசரா பண்டிகை விடுமுறையை முன்னிட்டு படம் வெளியாகவுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இசையை அனிருத் ரவிச்சந்தர் அமைக்கிறார்.

முதல் பாகத்தில் ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற ‘டைகர்’ முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்கிறார். அவருடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, எஸ். ஜே. சூர்யா மற்றும் வித்யா பாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் ஹிருத்திக் ரோஷன் ஆகியோரும் இப்படத்தில் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் நந்தமூரி பாலகிருஷ்ணா, அதிரடியான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் அவர் தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமாகிறார்.

முதல் பாகத்தில் ரசிகர்களைக் கவர்ந்த மோகன்லாலின் மேத்யூ மற்றும் சிவராஜ்குமாரின் நரசிம்மா கதாபாத்திரங்கள், இந்தப் பாகத்தில் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, கதையின் முக்கிய திருப்பங்களாக அமையவுள்ளதாக கூறப்படுகிறது.

முதல் பாகத்தில் முத்துவேல் பாண்டியன் தனது மகனைக் காப்பாற்ற போராடிய நிலையில், இரண்டாம் பாகத்தில் அதைவிட பெரிய, சர்வதேச அளவிலான குற்றச்செயல் வலையமைப்பையும் கடத்தல் கும்பல்களையும் எதிர்கொள்ளும் வகையில் கதையை இயக்குநர் நெல்சன் வடிவமைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், ரஜினிகாந்த் மற்றும் யோகி பாபு இடையேயான டார்க் காமெடி காட்சிகளுக்கும் இந்தப் படத்தில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15, 2026 (வியாழக்கிழமை) வெளியாகவுள்ள நிலையில், ஏற்கனவே அக்டோபர் 16 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள OM திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்படலாம் என கோலிவுட்டில் பேசப்படுகிறது. அந்தப் படத்தில் தனுஷ் மற்றும் மம்மூட்டி நடித்துள்ளனர்.

மேலும், முதல் பாகத்தை விட இரு மடங்கு அதிக பட்ஜெட்டில், ஹாலிவுட் தரத்திலான அதிரடி சண்டைக் காட்சிகளுடன் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2025 மார்ச் முதல் 2026 ஏப்ரல் வரை நடைபெற்ற படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

‘ஜெயிலர் 2’ திரைப்படம் தொடர்பான இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகமும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago