2020 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடைந்த கட்டா குஸ்தி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஜூலை 3 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்திலும் முதல் பாகத்தில் நடித்த விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஜோடியே நாயகன், நாயகியாக நடித்துள்ளனர்.
செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா கணேஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்நிலையில், படத்தின் நாயகி ஐஸ்வர்யா லட்சுமி, கட்டா குஸ்தி முதல் பாகம் குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில், படத்தின் இடைவேளை காட்சி (Interval Scene) மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, “அந்த இடைவேளை காட்சியை பற்றி பேசும்போது இன்னொரு விஷயம் நினைவுக்கு வருகிறது. விஷ்ணு விஷால் நடித்தும் தயாரித்தும் இருந்த படங்களில் அதிக செலவில் உருவாக்கப்பட்ட காட்சி அதுதான்.
அந்த ஒரு காட்சிக்காக மட்டும் சுமார் ரூ.1.2 கோடி செலவிடப்பட்டது. அது ஹீரோயினுக்காக வடிவமைக்கப்பட்ட முக்கியமான காட்சி,” என தெரிவித்துள்ளார்.
மேலும், “நான் அந்த காட்சியை சின்னதாக நினைத்திருந்தேன். ஆனால் இயக்குநர் செல்லா அய்யாவும், விஷ்ணு விஷாலும் அதை மிகவும் பிரம்மாண்டமாக மாற்றினர். திரையரங்குகளில் அந்த காட்சிக்கு மிகுந்த வரவேற்பும், பலத்த கைதட்டலும் கிடைத்தது. அது முழு குழுவின் முயற்சி,” என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேபோல், விஷ்ணு விஷால் சமீபத்திய பேட்டியில் பேசும்போது, “என் சினிமா வாழ்க்கையில் அதிக செலவில் எடுக்கப்பட்ட சீக்வென்ஸ் அதுதான். ஒரு பெண் கதாபாத்திரத்தின் சண்டைக் காட்சிக்காக இவ்வளவு பெரிய தொகை செலவிடுவது பெருமையான விஷயம்,” என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், அந்த காட்சிக்காக பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டதாகவும், திரையில் பார்த்தபோது பெருமை மற்றும் ஆச்சரியம் இரண்டும் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
