Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில், ஆனந்த் லோக்கல் கிரைம் பிராஞ்ச் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில், முகநூல் (Facebook) மூலம் ஏற்பட்ட காதலைத் தொடர்ந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, இந்து மதத்திற்கு மாறி, 12 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்த வங்கதேசப் பெண் கைது செய்யப்பட்டு, தற்போது நாடு கடத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டம், லம்பவேல் கிராமத்தைச் சேர்ந்த தருண் படேல் என்பவருக்கும், வங்கதேசத்தைச் சேர்ந்த காஜுலி என்ற பெண்ணுக்கும், முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது.

வங்கதேசத்தில் கடவுச்சீட்டு (Passport) பெற முயன்றபோது, ஏஜென்டால் ஏமாற்றப்பட்டதால், கடந்த 2016-ஆம் ஆண்டு காஜுலி சட்டவிரோதமாக எல்லையைத் தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

இந்தியா வந்த பிறகு, அவர் இந்து மதத்திற்கு மாறி, தனது பெயரை “காஜல்” என்று மாற்றிக் கொண்டு, இந்து மதச் சடங்குகளின்படி தருண் படேலைத் திருமணம் செய்து கொண்டார்.

இத்தம்பதியினருக்கு தற்போது 8 வயது மற்றும் 2 வயதுடைய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், குஜராத் போலீசார் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேச குடியேறிகளுக்கு எதிராக மேற்கொண்ட “ஆபரேஷன் டெல்டா ஹன்ட்” என்ற சிறப்பு சோதனையின் போது, காஜல் தனது தாயாருடன் வங்கதேசத்திற்கு தொலைபேசியில் பேசிய தகவலின் அடிப்படையில், அவரை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட காஜல் தற்போது பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரை வங்கதேசத்திற்கு நாடு கடத்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அவரது கணவர் தருண் படேல் கூறுகையில், காஜல் எந்தவித குற்றநோக்கத்துடனும் இந்தியாவுக்கு வரவில்லை என்றும், வங்கதேசத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டால் மதமாற்றம் மற்றும் சட்டவிரோத திருமணம் காரணமாக அங்குள்ள தீவிரவாத அமைப்புகளால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளார்.

மேலும், மனிதாபிமான அடிப்படையில் காஜலை நாடு கடத்தாமல், இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று அவரது கணவரும், குழந்தைகளும், குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி மற்றும் மத்திய அரசிடம் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 weeks ago at 4 weeks ago