அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் மீதான அமெரிக்காவின் ஆதரவை வலியுறுத்தினார். அப்போது “நான் இல்லாவிட்டால் இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது” என்றும் கூறினார்.
ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவுக்கு எதிராக இஸ்ரேலிய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையை விமர்சித்த டிரம்ப், லெபனான் விவகாரத்தில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு “மேலும் பொறுப்புடன்” செயல்பட வேண்டும் என்று கூறினார்.
பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இஸ்ரேலுக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான மோதல் நீண்ட காலமாக நீடித்து வருகிறது. அதிகமான மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் சமீபத்தில் நடத்திய தாக்குதல் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே இடைக்கால அமைதி ஒப்பந்தம் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதால் அதிருப்தி அடைந்தேன்.
ஒருவரைத் தேடும்போதெல்லாம் நீங்கள் ஒரு அடுக்குமாடி குடியிருப்பையே இடித்துத் தள்ள வேண்டியதில்லை. ஏனென்றால் அந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் நிறைய மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை நான் உறுதியாகச் சொல்வேன்.
அமெரிக்கா இல்லாவிட்டால் இஸ்ரேல் இருந்திருக்காது. நான் இதில் தலையிட்டிருக்காவிட்டால் இஸ்ரேல் எப்போதோ தகர்க்கப்பட்டிருக்கும். லெபனானில் நடக்கும் சண்டையை ஒரு “சிறு போர். ஹிஸ்புல்லா தொடர்ந்து தலைகாட்டும் ஒரு சிறிய ஊசிக்குத்து. ஆனால், இஸ்ரேல் தொடர்ந்து பெய்ரூட் மீது தாக்குதல் நடத்தினாலும், ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் நீடிக்கும்.
லெபனான் மற்றும் ஹிஸ்புல்லா விஷயத்தில் இஸ்ரேல் நடந்துகொண்ட விதம் எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. நெதன்யாகுவுடன் எனக்கு ஒரு சிறந்த உறவு இருந்தது. ஆனால், இப்போது லெபனான் விஷயத்தில் பிபி இன்னும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்” என்று கூறினார்.
மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டுவரவும், நிலையற்ற போர் நிறுத்தத்தை நீட்டிக்கவும் வாஷிங்டனும் தெஹ்ரானும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட திட்டமிட்டுள்ள நிலையில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, பிப்ரவரியில் அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே போர் தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட தடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கக்கூடும்.
