https://republictn.com/

பாலியல் வன்கொடுமை மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நார்வே பட்டத்து இளவரசி மெட்டே-மாரிட்டின் மகன் மரியஸ் போர்க் ஹோய்பிக்கு, ஓஸ்லோ மாவட்ட நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

கடந்த ஜூன் 15, 2026 அன்று வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு, நார்வே முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

29 வயதான மரியஸ் போர்க் ஹோய்பி, நார்வே பட்டத்து இளவரசி மெட்டே-மாரிட், இளவரசர் ஹாகோனை 2001-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு இருந்த உறவின் மூலம் பிறந்த மகன் ஆவார். இவர் அரச குடும்பத்தின் நேரடி வாரிசு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

மரியஸ் போர்க் ஹோய்பி மீது நான்கு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, முன்னாள் காதலியை துன்புறுத்தியது, கஞ்சா கடத்தல் மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் உள்ளிட்ட மொத்தம் 40 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

இந்த வழக்கை விசாரித்த ஓஸ்லோ மாவட்ட நீதிமன்றம், சுமத்தப்பட்ட நான்கு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் இரண்டு புகார்களை உறுதி செய்து, மரியஸ் போர்க் ஹோய்பியை குற்றவாளியாக அறிவித்தது. மற்ற இரண்டு பாலியல் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

எனினும், முக்கிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

விசாரணை முழுவதும் மரியஸ் போர்க் ஹோய்பி தனது மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நார்வே அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்பதை இந்த தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

நார்வே அரச குடும்பத்துடன் தொடர்புடைய ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பது, அந்நாட்டு அரச குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago