தமிழக அரசியலில் மாற்றம் என்கிற ஒற்றைச் சொல்லைப் பிடித்துக்கொண்டு பத்தாண்டுகளுக்கு மேலாகப் போராடி வரும் சீமான், இந்த முறை ஒரு புத்திசாலித்தனமான காய்நகர்த்தலைச் செய்துள்ளார். எப்போதும் வட மாவட்டங்களையோ அல்லது தென் மாவட்டத்தின் ஒதுக்குப்புறமான பகுதிகளையோ தேர்வு செய்தவர், இந்த முறை தனது சொந்த மண்ணான காரைக்குடியைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

சொந்த மண்ணின் சென்டிமென்ட்
காரைக்குடி தொகுதி என்பது சீமானுக்கு வெறும் தேர்தல் களம் மட்டுமல்ல, அது அவருடைய வேர். மண்ணின் மைந்தன் என்கிற கோஷம் அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து வந்து போட்டியிடுபவர்களை விட, நம்மூர் ஆள் சட்டசபைக்குச் சென்றால் நல்லது என்கிற எண்ணம் காரைக்குடி மக்களிடம் மெல்ல வேரூன்றியுள்ளது. மற்ற வேட்பாளர்களை விட சீமான் அங்கு ஒரு ஸ்டார் வேட்பாளர் அந்தஸ்துடன் வலம் வருவது அவருக்குப் பெரும் பலம்.

பலவீனமான எதிர்ப்பு- பலமான வியூகம்

இந்தத் தேர்தலின் மிகப்பெரிய ஆச்சரியம், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளும் காரைக்குடியில் நேரடியாகப் போட்டியிடவில்லை என்பதுதான். திமுக கூட்டணியில் காங்க்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏ மாங்குடி மீண்டும் களம் இறங்கியுள்ளார். அதிமுக கூட்டணியில் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி களம் காண்கிறார்.

திமுக, அதிமுகவின் நேரடி வேட்பாளர்கள் இல்லாதது சீமானுக்கு ஒரு விதத்தில் சாதகமாகவே பார்க்கப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் மீது அந்தந்தப் பகுதி மக்களுக்கு இருக்கும் அதிருப்தி, சீமானுக்கு வாக்குகளாக மாற வாய்ப்புள்ளது.

தவெக வாக்குகளில் சேதாரமா?
விஜய்யின் தவெக சார்பாக டாக்டர் பிரபு களம் இறங்கியிருப்பது, இளைஞர்களின் வாக்குகளைப் பிரிக்கும் என்று ஒரு பேச்சு உண்டு. இருப்பினும், சீமான் தம்பிகள் இதை மறுக்கிறார்கள். விஜய்யின் வாக்கு வங்கி வேறு, சீமானின் கொள்கை வாக்கு வங்கி வேறு என்பது அவர்களின் வாதம். விஜய்யின் வருகை அதிமுக, திமுக வாக்குகளைத் தான் பாதிக்குமே தவிர, சீமானின் உறுதியான ‘தம்பி’கள் பட்டாளத்தை அசைக்க முடியாது என அவர்கள் நம்புகிறார்கள்.

தற்போதைய எம்.எல்.ஏ மாங்குடிக்கு அந்தப் பகுதியில் ஒரு பெயர் உண்டு என்றாலும், “என்ன செய்தார்?” என்கிற கேள்வி மக்கள் மத்தியில் எழாமல் இல்லை. காரைக்குடி நகராட்சியை மாநகராட்சியாக மாற்றியது போன்ற சில சாதனைகளை காங்கிரஸ் முன்வைத்தாலும், சீமானின் அடுக்குமொழிப் பேச்சும், தொகுதிக்கான அவரது தொலைநோக்குப் பார்வையும் இளைஞர்களைக் கவர்ந்துள்ளது.

“அண்ணன் இந்த முறை குறைவான நாட்களே பிரச்சாரம் செய்தாலும், ஒவ்வொரு பேச்சும் மக்கள் மனதில் ஈட்டி போலப் பாய்ந்துள்ளது. மாங்குடியின் செல்வாக்கை விட சீமானின் ஆவேசம் காரைக்குடியில் அதிகம் வேலை செய்துள்ளது” என்கிறார்கள்.

நிச்சயமாக காரைக்குடி இந்த முறை ஒரு பெரும் மாற்றத்தைக் காணத் துடிக்கிறது. சீமான் ஒரு ‘ஸ்டார் வேட்பாளராக’ இருப்பதும், சொந்த மண் என்கிற உரிமையும் அவருக்குக் கூடுதல் பலத்தைத் தருகிறது. திமுக, அதிமுகவின் நேரடி வேட்பாளர்கள் இல்லாத வெற்றிடத்தில் சீமான் எளிதாக நுழைந்துவிடுவார் என்று விவரம் தெரிந்தவர்கள் கணிக்கிறார்கள்.

விஜய்யின் தவெக ஏற்படுத்தும் தாக்கம், கடைசி நேரப் பணப்பட்டுவாடா போன்ற தடைகளைத் தாண்டி, சீமான் காரைக்குடியில் வெற்றி பெற்று முதன்முறையாக தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைவார் எங்கிறார்கள். சீமான் தம்பிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை நிஜமானால், காரைக்குடி வரலாறு படைக்கும்.

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *