காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், சமூக வலைதளங்களில் இட்லி தொடர்பாக வெளியாகும் பதிவுகளுக்கு தொடர்ந்து நகைச்சுவை கலந்த பதில்களை அளித்து வருவது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இட்லியின் பெருமையை பாதுகாக்கும் விதமாக அவர் பதிவிட்டு வருவதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.
கடந்த மாதம், ஒருவர் இட்லியை ரசகுல்லாவுடன் ஒப்பிட்டு சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். அந்தப் பதிவுக்கு பதிலளித்த திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், அது “தவறான ஒப்பீடு” மட்டுமல்ல, “ஆழமான பிரபஞ்சவியல் தவறான புரிதல்” என்றும் குறிப்பிட்டு அந்த ஒப்பீட்டை நிராகரித்தார்.
அதன் பின்னர், இணையத்தில் இட்லி தொடர்பான பதிவுகள் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு நகைச்சுவையாகவோ அல்லது விமர்சன ரீதியாகவோ சசிதரூர் பதிலளித்து வருகிறார். இதை அறிந்த சமூக வலைதளப் பயனர்கள், அவரை சீண்டுவதற்காகவோ அல்லது அவரது கருத்தை அறிந்துகொள்வதற்காகவோ இட்லி தொடர்பான பதிவுகளை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், சமீபத்தில் ஒருவர் இட்லியை முக்கோண வடிவத்தில் வெட்டி அதன் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, தனது “இட்லி வெட்டும் திறனை” மதிப்பிடுமாறு மற்ற பயனர்களிடம் கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த சசிதரூர், “ஒரு மென்பொருள் பொறியாளர் சமையலறைக்குள் நுழைந்து தரவுகளைப் பிரிக்க முயன்றால் இதுதான் நடக்கும்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
மேலும், “இதனை இட்லி என்பார்கள்; ‘இட்ஸ் ஸ்லைஸ்’ என்று அல்ல. இத்தாலியர்கள் இதை பீட்சா என்று தவறாக நினைத்தால் தவிர, வேறு யாரும் இட்லியை இப்படி சாப்பிட மாட்டார்கள்” என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.
அதே பதிவில், மற்றொரு பயனர் ஆங்கிலக் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் எழுதிய கவிதை வரிகளைப் பகிர்ந்து சசிதரூரின் கருத்தைப் பாராட்டியிருந்தார். அதற்கு சசிதரூர் “அற்புதம்” என்று பதிலளித்தார்.
சசிதரூரின் இந்த நகைச்சுவை கலந்த பதிவு சமூக வலைதளப் பயனர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இட்லி தொடர்பான அவரது தொடர் கருத்துப் பதிவுகளில் இதுவும் மேலும் ஒரு அத்தியாயமாக இணைந்துள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், இட்லி குறித்த மற்றொரு பதிவுக்கு சசிதரூர் பதிலளித்திருந்தார். அதில், இட்லியுடன் ஒரு கோப்பை தேநீர் இடம்பெற்ற புகைப்படத்தை பகிர்ந்த ஒருவர், “இதுவரை இருந்ததிலேயே சிறந்த இணைவு” என்று குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த சசிதரூர், “பலபலப்பாக, மென்மையாக, பஞ்சு போல இருக்கும் ஒரு இட்லியின் சுவையை மிஞ்சுவது கடினம். ஆனால் இந்த இட்லி மெல்லுவதற்கு சிரமமாக இருக்கும் போலத் தெரிகிறது. இது ரப்பர் போல உள்ளது. எனவே இது முதல் தரமான இட்லி அல்ல” என்று நகைச்சுவையாக கருத்து தெரிவித்திருந்தார்.
தற்போது, இட்லி தொடர்பாக சசிதரூர் தொடர்ந்து வெளியிட்டு வரும் இந்தப் பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. இட்லியின் பெருமையை பாதுகாக்கும் ‘அதிகாரப்பூர்வமற்ற தூதர்’ போல அவர் செயல்பட்டு வருவதாகவும் இணையவாசிகள் நகைச்சுவையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
