நடப்பு கல்வி ஆண்டில் பொறியியல் படிப்புகளுக்கு இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 2,45,220 ஆக பதிவாகி சாதனை படைத்துள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடர்பான புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு சலுகையின் கீழ் கட்டணமில்லா உயர்கல்வி பெற தகுதி உடைய 50,373 அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
மொத்த விண்ணப்பதாரர்களில், பொதுப்பிரிவில் 2,42,909 மாணவர்களும், தொழிற்கல்வி பிரிவில் 2,311 மாணவர்களும் அடங்குகின்றனர்.
மாநில பாடத்திட்டத்தில் பயின்ற 2,38,098 மாணவர்களும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற 28,693 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.
மேலும், 103 இலங்கைத் தமிழ் புலம்பெயர்ந்த மாணவர்களும் இந்த ஆண்டு பொறியியல் சேர்க்கைக்காக விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
