சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறி ஊடகங்களில் பேசியதற்காக நடிகர் ரவி மோகன் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
“எனது கருத்துக்களால் மனவேதனை அடைந்த அல்லது பாதிக்கப்பட்ட அனைவரிடமும் வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ரவி மோகன் தெரிவித்துள்ளார்.
மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி தாக்கல் செய்துள்ள வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இந்த மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.
ரவி மோகனும், அவரது மனைவி ஆர்த்தியும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், திருமணத் தகராறு தொடர்பான விவகாரங்கள் சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியாகி வந்ததால், இருவரும் பொதுவெளியில் கருத்து தெரிவிக்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், விவாகரத்து வழக்கு தொடர்பாக இருவரும் பொதுவெளியில் எந்தவிதமான கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்று கடந்த ஆண்டு மே மாதத்தில் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், அந்த உத்தரவை மீறி ரவி மோகன் ஊடகங்களில் பேசியதாக ஆர்த்தி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக ரவி மோகன் செயல்பட்டுள்ளதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இதையடுத்து, ரவி மோகன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தனது செயலுக்காக மன்னிப்பு கோரி பொதுஅறிவிப்பு வெளியிடத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதிமன்றம், ரவி மோகன் மன்னிப்பு கோரி பத்திரிகைகளில் பொதுஅறிவிப்பு வெளியிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், விவாகரத்து வழக்கு அல்லது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக இனி பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
