தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கும் மாமூல் வழக்கம் மட்டும் ஓயவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வருகிறது. “தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டோம்” என தவெக அரசு அறிவித்தாலும், சொன்னபடி கடைகள் மூடப்படவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி சீர்திருத்தங்களை மேற்கொள்ள தவெக அரசு தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது. முறைகேடுகளைத் தடுக்க அதிகாரிகளை ஒட்டுமொத்தமாகப் பணியிடமாற்றம் செய்யத் திட்டமிடப்பட்டு வருகிறது. ஜூன் 30-ஆம் தேதியுடன் பழைய டாஸ்மாக் பார்களின் டெண்டர் முடிவடைய உள்ள நிலையில், புதிய நெறிமுறைகளுடன் கூடிய டெண்டர் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. காலி பாட்டில்களைத் திரும்பப் பெறுவதில் மக்களுக்கு இடையூறு இல்லாத புதிய திட்டமும் பரிசீலனையில் உள்ளது.
தனியாருக்கு கைமாறுகிறதா?
இவை அனைத்தையும் விட, ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கும் ஒரு ‘மெகா’ தகவல் தற்போது கசிந்துள்ளது. ஆண்டுக்கு சுமார் 48,000 கோடி ரூபாய் வருமானம் தரும் டாஸ்மாக் கடைகள், பார்களை முழுமையாகத் தனியாரிடம் ஒப்படைக்க அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
டாஸ்மாக் கடைகள் முழுமையாகத் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டால், மது விற்பனைக்கும் அரசுக்கும் எந்தவித நேரடித் தொடர்பும் இருக்காது. “அரசு மதுவை வாங்காது; விற்காது; அதைத் தனியார் பார்த்துக் கொள்ளும்” என்ற நிலையை உருவாக்குவதன் மூலம், தங்களின் கொள்கையான “மது ஒழிப்பு” திட்டத்தில் மாஸ் வெற்றி பெற்றுவிட்டதாக அரசு அறிவிக்கப் போவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
வருமானத்தை விட்டுக்கொடுக்காமல், அதே சமயம் “அரசு மது விற்கவில்லை” என்ற நற்பெயரை எடுக்க தவெக அரசு போடும் இந்த மெகா ஸ்கெட்ச், தமிழக அரசியல் களத்தில் அடுத்த புயலைக் கிளப்பப் போவது மட்டும் உறுதி.
