சென்னையில் திரைப்படப் படப்பிடிப்பின்போது சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஓட்டேரி பின்னி மில் வளாகத்தில் நடைபெற்ற திரைப்படப் படப்பிடிப்பின்போது சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மதன் என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும், பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை ஓட்டேரி பின்னி மில் வளாகத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடித்து வரும் “கில்லர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று இரவு முதல் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலை கார்பன் டைஆக்சைடு சிலிண்டரை மாற்றும் பணிகள் நடைபெற்றபோது, திடீரென பலத்த சத்தத்துடன் சிலிண்டர் வெடித்துள்ளது.
இந்த விபத்தில் மதன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சூர்யா மற்றும் சக்திவேல் உள்ளிட்ட மூவர் பலத்த தீக்காயங்களுடன் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல், 10-க்கும் மேற்பட்டோர் லேசான காயங்களுடன் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக ஓட்டேரி காவல்துறையினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலிண்டர் வெடிப்பிற்கான காரணம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தனவா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
