Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழக பா.ஜ.க.வின் முக்கிய முகங்களில் ஒருவரான நயினார் நாகேந்திரன், தனது சொந்த ஊரான திருநெல்வேலியில் வெற்றி வாய்ப்பு பலவீனமாக இருப்பதை உணர்ந்து, இம்முறை விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதியைத் தஞ்சமடைந்துள்ளார். ஆனால், வெளியூர்க்காரர் என்ற முத்திரை குத்தப்பட்டுள்ள நயினாருக்கு, சாத்தூர் கோட்டை சிம்ம சொப்பனமாக மாறியுள்ளது.

முக்குலத்தோர் ஓட்டுகளில் விரிசல்

சாத்தூரில் நயினார் நாகேந்திரன் நம்பியிருக்கும் முக்குலத்தோர் சமூக ஓட்டுகளைச் சிதறடிக்க, சசிகலா தரப்பிலிருந்து பசும்பொன் மக்கள் தேசம் கட்சியின் இசக்கி ராஜா களமிறக்கப்பட்டுள்ளார். இசக்கி ராஜாவை நயினார் நாகேந்திரன் ரகசியமாக கவனித்து விட்டதாகத் தகவல்கள் கசிந்தாலும், அவர் களத்தில் நிற்பதே நயினாரின் வெற்றிக்கு வேட்டு வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சொந்தச் சமூக ஓட்டுகளிலேயே ஓட்டை விழுந்திருப்பது நயினாரை நிலைகுலையச் செய்துள்ளது.

அ.தி.மு.க.வின் உள்ளடி அரசியல்

நயினார் நாகேந்திரனின் வருகையால், சாத்தூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை இழந்த அ.தி.மு.க. மாவட்டச் செயலர் ரவிச்சந்திரன் கடும் ஆத்திரத்தில் உள்ளார். தனது வாய்ப்பைப் பறித்த பா.ஜ.க.வுக்குப் பாடம் புகட்டத் துடிக்கும் அவர், தனது நாடார் சமூக ஓட்டுகளை நயினாருக்கு எதிராகத் திருப்பும் வேலையில் மிகத் தீவிரமாக இறங்கினார். கூட்டணி தர்மத்தை விட, தன்மானமே முக்கியம் என ரவிச்சந்திரன் எடுத்த இந்த விஸ்வரூபம், நயினாரின் கணக்குகளைத் தவிடுபொடியாக்கியுள்ளது.

இதையும் படியுங்க  எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக..! 4 மண்டலங்களிலும் வாஷ் அவுட்.. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா..?

நயினாரின் அரசியல் எதிர்காலம் என்ன?
தி.மு.க. மேலிடத்திற்கு நயினார் மீது ஒருவித ‘கரிசனம்’ இருப்பதாகப் பேச்சு நிலவினாலும், களத்தில் தி.மு.க. வேட்பாளர் ‘கடற்கரை’ ராஜின் கை ஓங்கியுள்ளது. நாயக்கர் மற்றும் தேவேந்திர குல வேளாளர் சமூக ஓட்டுகள் நயினாருக்கு முழுமையாக விழாத பட்சத்தில், சாத்தூரிலும் அவருக்கு ‘கல்தா’ கொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர்.

திருநெல்வேலியில் ஓடியது போல, சாத்தூரிலும் நயினாரின் வியூகங்கள் எடுபடவில்லை என்றால், அடுத்த தேர்தலுக்கு அவர் வேறு ஒரு புதிய தொகுதியைத் தேடி அலைய வேண்டியதுதான். சாத்தூர் மக்கள் வெளியூர்க்காரரை ஏற்பார்களா அல்லது பா.ஜ.க.வின் தாமரையைச் சாத்தூரில் வாடவைப்பார்களா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். நயினார் நாகேந்திரனின் அரசியல் எதிர்காலம் இப்போது சாத்தூர் மக்களின் கைகளில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago