செங்கல்பட்டு மாவட்டத்தில் தவெக பிரமுகர்கள் மீது அடுத்தடுத்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
73 வயதான விஸ்வநாதன் என்பவர், சென்னை டி.பி. சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர். இவருடைய மனைவி தங்கமணி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதால், முதிய தம்பதி வருமானம் இன்றி தவித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், விஸ்வநாதன் தனது சொந்த வீட்டை விற்று, படப்பை அருகே மனைவியின் அண்ணன் வீடு அருகில் குடியேறியுள்ளார்.
இதனை அறிந்த மனைவியின் அண்ணன் மகளும் தவெக மகளிரணி பிரமுகருமான கலைவாணி, கடந்த ஆண்டு விஸ்வநாதனை அணுகியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சாலமங்கலத்தில், அரசு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக கூறி, அவரிடமிருந்து முதற்கட்டமாக 7 லட்சம் ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது.
ஆனால், சொன்னபடி வீடு வாங்கித் தராமல் காலதாமதம் செய்ததால், விஸ்வநாதன் தம்பதி வேறு வழியின்றி அதே பகுதியில் வாடகை வீட்டில் குடியேறியுள்ளனர்.
மேலும், விஸ்வநாதன் வீட்டிற்கு சென்ற கலைவாணி, அவரது ஏ.டி.எம். கார்டை எடுத்துச் சென்று கூடுதலாக 2 லட்சம் ரூபாய் எடுத்ததாகவும், காஞ்சிபுரத்தில் வாங்கியிருந்த நிலத்தின் அசல் ஆவணங்களையும் பெற்றுக் கொண்டு திருப்பி தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
பணத்தையும் நில ஆவணங்களையும் இழந்த நிலையில், விஸ்வநாதன் கடந்த 15ஆம் தேதி படப்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், காவல் நிலையத்தில் கலைவாணி தரப்பில் “7 லட்சம் ரூபாய் நான் வாங்கவில்லை; அதற்கு என்ன சாட்சி உள்ளது?” என மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் வீடு திரும்பிய விஸ்வநாதன் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். பின்னர் எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், குடும்பத்தினர் அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தற்கொலைக் கடிதமும் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தவெக பிரமுகர் கலைவாணியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இறுதிச் சடங்கு செலவிற்காக அவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் பெற்று, போலீசாரே வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், மதுராந்தகம் அருகே கீழாமூர் கிராமத்தில் நகைக்காக மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாமிநாதன் என்பவரின் மனைவி முத்தாளம்மாள், ஐந்து சவரன் நகை அணிந்திருந்த நிலையில், எதிர்வீட்டுக்காரரும் தவெக கிளை பொறுப்பாளருமான வாசுதேவன் என்பவர் நகைக்காக அவரை தாக்கி கீழே தள்ளியதாகவும், இதில் அவர் தலையில் காயமடைந்து உயிரிழந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர், அவர் வீட்டின் தரையில் தண்ணீர் ஊற்றி, அது வழுக்கி விழுந்து மரணம் ஏற்பட்டதாக சித்தரித்து விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. பின்னர் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த இரண்டு சம்பவங்களும் தவெக பிரமுகர்கள் மீது எழுந்துள்ள கடுமையான குற்றச்சாட்டுகளாக இருப்பதால், செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பும் நிலவுகிறது.
