https://republictn.com/

தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது ஆளுங்கட்சியான த.வெ.க, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கும் இடையே திரைமறைவில் நடந்து வரும் பேச்சுவார்த்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, கட்சியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 எம்.எல்.ஏ-க்கள் கொண்ட ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி

தலைமையில் 25 எம்.எல்.ஏ-க்கள் கொண்ட மற்றொரு அணியும் உருவானது. சட்டசபையில் த.வெ.க அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது, வேலுமணி தரப்பு த.வெ.க-விற்கு ஆதரவு அளித்தது. இந்த வேலுமணி அணியை விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதி எம்.எல்.ஏ-வான சி.வி.சண்முகம் முன்னின்று வழிநடத்தினார்.

த.வெ.க-விற்கு ஆதரவளித்த வேலுமணி தரப்பிற்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தி.மு.க கூட்டணியில் இருந்து விலகி த.வெ.க கூட்டணிக்கு வந்த காங்கிரஸ், வி.சி.க, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அ.தி.மு.க-வினரை அமைச்சரவையில் சேர்ப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் அ.தி.மு.க-வினருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

அமைச்சர் பதவி கிடைக்காததால் வேலுமணி அணியில் குழப்பம் ஏற்பட்டது. அதிருப்தியடைந்த அந்த அணியின் 4 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்தனர். அவர்களுக்குப் பரிசாக வாரியத் தலைவர் பதவி வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, வேலுமணி அணியைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் பழனிசாமி பக்கம் சாயத் தொடங்கினர். இறுதியாக வேலுமணி தரப்பு பழனிசாமியுடன் சமரசம் செய்து கொண்டது. ஆனால், முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம், புதுக்கோட்டை விஜயபாஸ்கர் ஆகிய இருவர் மட்டும் இந்தச் சமரசத்தை ஏற்காமல் தனியாக ஒதுங்கி நிற்கின்றனர்.

இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் த.வெ.க தலைமை, சி.வி.சண்முகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் பட்சத்தில், அவரை, தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி- ஆக நியமிக்க த.வெ.க தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அதிரடி நகர்வு தமிழக அரசியலில் அடுத்தகட்ட மாற்றங்களுக்கு வழிவகுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

21 hours ago at 21 hours ago