தெலுங்குத் திரையுலகில் அடுத்தடுத்து மிகப்பெரிய ஜாம்பவான்களின் படங்களில் ஒப்பந்தமாகி, தனது செகண்ட் இன்னிங்ஸை மாஸாகத் தொடங்கியிருக்கிறார் நிவேதா பெத்துராஜ்.
தமிழ், தெலுங்குத் திரையுலகில் தனது எதார்த்தமான நடிப்பாலும், வசீகரிக்கும் அழகாலும் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருப்பவர் நிவேதா பெத்துராஜ். தெலுங்கில் ‘மென்டல் மடிலோ’ படம் மூலம் அறிமுகமானாலும், அவருக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது மாபெரும் வெற்றிப்படமான ‘அலா வைகுந்தபுரமுலூ’ தான். அந்தப் படத்தில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டாலும், உடனடியாக அது பெரிய வாய்ப்புகளாக மாறவில்லை. சோலோ ஹீரோயினாக நடித்த சில படங்களும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. 2023-ல் வெளியான ‘பூ’ திரைப்படத்திற்குப் பிறகு சில காலம் திரையில் காணமல் போன நிவேதா, தற்போது டோலிவுட்டில் புதிய அசுர வேகத்தில் களம் இறங்கியுள்ளார்.
‘அலா வைகுந்தபுரமுலூ’ படத்திற்குப் பிறகு இயக்குநர் த்ரிவிக்ரமுடன் மீண்டும் இணைந்துள்ளார் நிவேதா. ‘விக்டரி’ வெங்கடேஷ் நடிக்கும் ‘ஆதர்ஷ குடும்பம்: ஹவுஸ் நம்பர் 47’ என்ற ஃபேமிலி ஆக்ஷன் என்டர்டெய்னரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் ஸ்ரீநிதி ஷெட்டி முதன்மை நாயகியாக இருந்தாலும், நிவேதாவின் கதாபாத்திரம் கதைக்கு மிகவும் வெயிட்டானது எனக் கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி, கே.எஸ். ரவீந்திரா இயக்கத்தில் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் புதிய படத்திலும் நிவேதா பெத்துராஜ் இணையவிருப்பதாகத் தகவல். பிரியாமணி, அனஸ்வரா ராஜன் ஆகியோருடன் இணைந்து நிவேதாவும் இந்த பிரம்மாண்ட படத்தில் களம் இறங்குவது படத்திற்கு கூடுதல் கவர்ச்சியையும் மதிப்பையும் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நேரத்தில் வெங்கடேஷ், சிரஞ்சீவி என இரு பெரிய நட்சத்திரங்களின் படங்களில் மல்டி-ஸ்டாரர் ஹீரோயினாக நிவேதா வலம் வருவது அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு பாசிட்டிவான டர்னிங் பாயிண்டாக அமைந்துள்ளது.
தெலுங்கில் மல்டி-ஸ்டாரர் படங்களில் ஜொலிக்கும் நிவேதாவிற்கு, தமிழ் சினிமா எப்போதுமே ஒரு தனித்துவமான அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளது. மதுரையை பூர்வீகமாகக் கொண்டு, துபாயில் வளர்ந்த தமிழ் பெண்ணான நிவேதா, 2016-ல் வெளியான ‘ஒரு நாள் கூத்து’ படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அந்தப் படத்தில் இடம்பெற்ற “அடியே அழகே” பாடல் ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களின் காலர் டியூனாக மாறி இவரைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.
உதயநிதி ஸ்டாலினுடன் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’, விஜய் ஆண்டனியுடன் ‘திமிரு புடிச்சவன்’ ஆகிய படங்களில் கிராமத்து பெண்ணாகவும், துடிப்பான போலீஸ் அதிகாரியாகவும் அசத்தினார். ‘சங்கத்தமிழன்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து கமர்ஷியல் ஹீரோயினாகவும் முத்திரை பதித்தார்.
இந்தியாவின் முதல் விண்வெளித் திரைப்படமான ஜெயம் ரவியின் ‘டிக் டிக் டிக்’ படத்தில் ராணுவ அதிகாரியாக வந்து ஆக்ஷன் காட்சிகளிலும் மிரட்டினார். லோகேஷ் கனகராஜின் தயாரிப்பான ‘கம்பாசிஷன்’ படங்களிலும் இவரது பங்களிப்பு பேசப்பட்டது.
சினிமாவைத் தாண்டி நிவேதா பெத்துராஜ் ஃபார்முலா ரேஸ் கார் வீராங்கனை. மல்டி-ஸ்டாரர் படங்களில் மற்ற நாயகிகளுடன் திரையைப் பகிர்ந்து கொண்டாலும், தனது அசாத்திய திறமையால் தனித்துத் தெரியும் நிவேதா பெத்துராஜிற்கு இந்த செகண்ட் இன்னிங்ஸ் கோலிவுட், டோலிவுட் ஆகிய இரு புறங்களிலும் பல புதிய கதவுகளைத் திறந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.
