கோவை மாவட்டம் பல்லபாளையம் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பல்லபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த வியாழக்கிழமை காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று மாலை கண்ணம்பாளையம் பகுதியில் இருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சிறுமி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு, அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் விடிய விடிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மாற்று வழிகளில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை கைது செய்துள்ளனர்.
சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
