தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சகாப்தத்தை படைத்து முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய், தற்போது மேற்கொண்டு வரும் அதிரடி நகர்வுகள் திமுக மற்றும் அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகளையும் ஒருசேர திணறடித்துள்ளதாக கூறப்படுகிறது.
“அடுத்தவன் ஆயுதத்தை பறித்து அவனையே வீழ்த்துவது” என்ற போர் தந்திரத்தை விஜய் இப்போது மிகக் கட்சிதமாக கையாள்ந்து வருகிறார்.
பொதுவாக ஆட்சி மாற்றம் ஏற்படும் போது முந்தைய அரசு கொண்டு வந்த திட்டங்களை புதிய அரசு முடக்குவது தமிழக அரசியலில் வழக்கமாக இருந்தது. ஆனால் முதலமைச்சர் விஜய் அந்த மரபை உடைத்து, முந்தைய திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதிமுகவின் அடையாளமாக விளங்கிய அம்மா உணவகம் திட்டத்திற்கும் உயிர் கொடுத்துள்ளார்.
இதன் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு பேச எந்த ஒரு அரசியல் ஆயுதத்தையும் கொடுக்காமல், அவர்களை மௌனமாக்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகளிர் உரிமைத் தொகை, விடியல் பேருந்து பயணம், நான் முதல்வன் போன்ற திட்டங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. இந்த திட்டங்களை விஜய் அப்படியே தொடர்வதுடன், மகளிர் உரிமைத் தொகையை தனது தேர்தல் வாக்குறுதியின்படி 2500 ரூபாயாக உயர்த்தவும் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் திமுகவுக்கு இந்த திட்டங்களை வைத்து அரசியல் ரீதியாக போராட்டம் நடத்தவோ அல்லது மக்கள் மத்தியில் குறை சொல்லவோ முடியாத ஒரு தர்மசங்கடமான சூழல் உருவாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒருவேளை இந்த திட்டங்களை விஜய் நிறுத்தி இருந்தால், திமுக அதனை மிகப்பெரிய அரசியல் போராட்டமாக மாற்றியிருக்கும். ஆனால் அந்த வாய்ப்பையே முதல்வர் விஜய் தற்போது தவிடுபொடியாக்கியுள்ளார்.
மறுபுறம், அதிமுக கோட்டைக்குள் புகுந்து விஜய் ஒரு மிகப்பெரிய அரசியல் அதிர்வையும் ஏற்படுத்தியுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா உணவகம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் உணர்வுப்பூர்வமான திட்டமாகும்.
கடந்த திமுக ஆட்சியில் இந்த திட்டம் போதிய கவனிப்பின்றி சிதலமடைந்ததாக புகார்கள் எழுந்த நிலையில், தற்போது அம்மா உணவகங்களை முழுமையாக புதுப்பித்து, உணவின் தரத்தை உயர்த்த வேண்டும் என விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் அதிமுகவின் பாரம்பரிய ஆதரவாளர்கள்கூட விஜயின் பக்கம் திரும்புவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 25 அதிமுக எம்எல்ஏக்கள் விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்களின் கோரிக்கைகளை ஏற்று இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதன் மூலம், அதிமுக அடிமட்ட தொண்டர்களின் மனங்களையும் முதல்வர் விஜய் வென்று வருகிறார்.
நிர்வாக ரீதியாக திறம்பட செயல்படுவது ஒருபுறம் இருந்தாலும், அரசியல் ரீதியாக தனது எதிரிகளை வீழ்த்த முதல்வர் விஜய் கையாளும் இந்த சாணக்கியத்தனம் தற்போது அரசியல் வட்டாரங்களில் ஹாட் டாபிக்காக உள்ளது.
சாதாரண மக்களின் அன்றாட தேவைகளான உணவு, போக்குவரத்து மற்றும் கல்வி தொடர்பான முந்தைய அரசுகளின் திட்டங்களை மேம்படுத்துவதன் மூலம் விஜய் ஒரு முதிர்ச்சியான தலைவராக மக்கள் மத்தியில் உருவெடுத்து வருகிறார்.
இதுவரை இது வெறும் நிர்வாக நடவடிக்கை மட்டுமல்ல; அதிமுக மற்றும் திமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கிகளை தன் வசமாக்கும் ஒரு பலமான அரசியல் வலையாகவும் பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள கூட வாய்ப்பு தராமல் மக்களின் ஆதரவை தனது பக்கம் குவிக்கும் முதலமைச்சரின் இந்த வேகம், 2026 தமிழக அரசியலில் ஒரு புதிய திசையை காட்டியுள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
