திமுக, அதிமுகவுக்கு மாற்றாக உருவெடுத்த தவெக அரசு இலவச மின்சாரம், மகளிர் பாதுகாப்பு படை, போதை பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகள் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது. ஆனால் ஆறு மாதங்கள் நிறைவடையும் இந்த நேரத்தில் நிர்வாக அனுபவமின்மை, சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு, விலைவாசி உயர்வு, அமைச்சர்கள் மற்றும் தவெக எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் ஆகியவை கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றன.
தவெகவின் ரீல்ஸ்களுக்கு 100 மதிப்பெண்கள் ஆனால் ஆட்சி நிர்வாகத்திற்கு பூஜ்ஜியம் என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் அரசியல் அனுபவம் இல்லாமல் சமூக ஊட்டகங்களில் அதிகமாக ஈடுபடுவதாகவும் நிர்வாக பணிகளில் கவனம் குறைவாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. சில அமைச்சர்கள் முழுக்கை சட்டை அணிந்தால் டெங்குவை தவிர்க்கலாம். சோப்பு, ஷாம்பு போட்டு குளிப்பதன் மூலமே ஆற்றில் நுரை வருகிறது போன்ற கருத்துக்களை வெளியிட்டதும் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க சட்டவிரோத செயல்களிலும் தவெக எம்எல்ஏக்கள் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. தீபாவளியன்று என்று துறையூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவும் துணை சபாநாயகருமான ரவிசங்கர் குடிநீர் பிரச்சனை குறித்து முறையிட வந்த கார்த்திக்குமார் என்பவரிடம் அராஜக போக்கில் நடந்து கொண்டார். பின்னர் அதெல்லாம் ஒன்றுமில்லை என்று பாதிக்கப்பட்ட கார்த்திக்குமாரை மிரட்டி வீடியோ வெளியிட செய்தது அம்பலமானது. இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியரிடமே அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படும் விவகாரம் தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது சமூகவலைதள பக்கத்தில் இந்த விவகாரம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் அருன் விக்னேஷ் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் மதுபோதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும் இதை தொடர்ந்து ஆட்சியருக்கு தனி பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும் சமூக வலைதலங்களில் செய்திகள் வருகின்றன. இந்த திறனற்ற தவெக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை என அடுத்தடுத்து நடக்கும் குற்ற சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது.
இப்போது தவெக எம்எல்ஏ ஒருவரால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி இருக்க தனி பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம் மட்டும் தலைமை செயலாளர் அந்த ஆட்சியருக்கு என்ன பாதுகாப்பை கொடுத்து விட போகிறார்? முதலமைச்சர் விஜய் அவர்களே இதற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்” என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
பெண்களின் வாக்குகளை பெருமான்மையாக பெற்று ஆட்சிக்கு வந்திருக்கும் முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியில் பெண் மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலை என்றால் சாமானிய பெண்களுக்கு என்னதான் பாதுகாப்பு இருக்கும் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
