Nanban

நிலக்கோட்டையில் ரத்த வெறியாட்டம்… கொலை செய்துவிட்டு ரத்தக் கத்தியோடு பாரில் மது அருந்திய கும்பல்…

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, கீழே கிடந்த பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு, கடைசியில் ஒரு நட்பையே ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டது. கொலை செய்துவிட்டு, ரத்தம் சொட்டும் கத்தியோடு பாரில் உட்கார்ந்து சரக்கு அடித்த கும்பலைப் பார்த்து, அந்த ஊரே உறைந்து போய் நிற்கிறது!

நண்பர்கள்… ஒரே ஊர்… ஒரே போதை! நிலக்கோட்டைக்கு அருகே உள்ள நாகையகவுண்டன்பட்டி. அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் தான் அஜித்குமாரும், லட்சுமணனும். இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஒன்றாகச் சுற்றுவது, ஒன்றாகக் குடிப்பது என்று இருந்த அந்த நட்புக்குள், ஒரு இரவு புகுந்தது தான் எமன்!

கடந்த திங்கட்கிழமை இரவு. மது அருந்திவிட்டு, டோல்கேட் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்திருக்கிறார்கள் இருவரும். அப்போது தான் அந்தச் சம்பவம். கீழே ஒரு பணப் பண்டல் கிடந்திருக்கிறது.

போதை அதிகமாக இருந்த அஜித்குமார், அந்தப் பண்டலை எடுத்து லட்சுமணனிடம் கொடுத்திருக்கிறார். “இதுல 25,000 ரூபாய் இருக்கு” என்று சொன்ன லட்சுமணன், அதிலிருந்து அஜித்குமாருக்கு 10,000 ரூபாயைக் கொடுத்திருக்கிறார். அத்தோடு அந்த இரவு முடிந்தது என்று நினைத்தார்கள். ஆனால், அது தான் முடிவின் ஆரம்பம் என்று அப்போது அவர்களுக்குத் தெரியவில்லை!

இதையும் படியுங்க  செஞ்சி - மாயமான  சிறுமி...! விசாரணை வளையத்தில் தாய் ?  போனை ஆஃப் செய்த சாமியார்! - செஞ்சியில் தொடரும் திகில்!

“50 ஆயிரம் பணம் எங்கே?” மறுநாள் காலை. பள்ளப்பட்டியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர், அதே ஹோட்டலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது தான் அதிர்ச்சி காத்திருந்தது. தன்னுடைய 50,000 ரூபாய் பணத்தைக் காணவில்லை என்று அம்மையநாயக்கனூர் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார்.

உடனே களத்தில் இறங்கிய போலீஸார், ஹோட்டல் சிசிடிவியை ஆய்வு செய்திருக்கிறார்கள். அதில் இரண்டு பேர் போதையில் நடந்து செல்வதும், பணப் பண்டலை எடுத்துச் செல்வதும் பதிவாகியிருந்தது. அவர்கள் தான் அஜித்குமாரும், லட்சுமணனும் என்பது உறுதியானது.

போலீஸ் அஜித்குமாரைப் பிடித்து, “50 ஆயிரம் பணம் எங்கே?” என்று கேட்க, “பணத்தை லட்சுமணனிடம் கொடுத்துவிட்டேன்” என்று சொல்லியிருக்கிறார். லட்சுமணனிடம் கேட்டாலோ, “25,000 தான் இருந்தது. அதில் 10,000-ஐ அஜித்துக்கு கொடுத்துவிட்டேன்” என்று சொல்லியிருக்கிறார்.

“என்ன செய்வீங்களோ தெரியாது. 50 ஆயிரத்தையும் கொண்டு வந்து போலீஸில் ஒப்படைத்துவிடுங்கள்” என்று எச்சரித்துவிட்டு போலீஸார் சென்றுவிட்டார்கள். அந்த ஒரு எச்சரிக்கை தான், பகையை இன்னும் பெரிதாக்கி விட்டது!

“எடுத்துக் கொடுத்தது நான்… பொய் சொல்லியிருக்கியா?” இதைக் கேள்விப்பட்ட அஜித்குமார், தன் மருமகன் பிச்சமுத்துவுடன் லட்சுமணன் வீட்டுக்குப் போயிருக்கிறார்.

இதையும் படியுங்க  ஏலகிரி கோடை விழாவில் சொதப்பல்... மேடையிலேயே கலெக்டரை வெளுத்து வாங்கிய கே.சி.வீரமணி...!

“எடுத்துக் கொடுத்தது நான். அதுல இருந்தது 50 ஆயிரம் ரூபாய். ஆனா என்கிட்ட 25 ஆயிரம் தான் இருந்ததுன்னு பொய் சொல்லியிருக்கியா?” என்று சண்டை போட்டிருக்கிறார்.

இரு தரப்பும் மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, லட்சுமணனின் மகன் உதயகுமார், ஊர் மக்கள் முன்னிலையில் அஜித்குமாரையும், பிச்சமுத்துவையும் செருப்பால் அடித்திருக்கிறார். ஊர் மக்கள் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

ஆனால், போகும்போது பிச்சமுத்து சொன்ன ஒரு வார்த்தை, அந்த ஊரையே நடுங்க வைத்தது. “உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன்!” புதன்கிழமை: காத்திருந்த கொலைவெறி!

அந்த மிரட்டல் வெறும் வார்த்தை இல்லை என்பது மறுநாளே தெரிந்தது. புதன்கிழமை அதிகாலை, கொழிஞ்சிப்பட்டி அருகே அஜித்குமார், பிச்சமுத்து உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட கும்பல், லட்சுமணனைக் கொல்லக் காத்திருந்திருக்கிறது.

மதியம் 2 மணி அளவில், பூ கட்டும் வேலைக்குச் செல்வதற்காக உதயகுமார் அந்த வழியாக வந்திருக்கிறார். பட்டாக்கத்திகளுடன் நின்றிருந்த கும்பல், உதயகுமாரை கொலைவெறியோடு துரத்தியிருக்கிறது.

உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடிய உதயகுமார், அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்திருக்கிறார். உடனே அப்பாவுக்கு போன் போட்டு, “என்னைக் கொல்ல வந்தாங்க… தப்பிச்சு ஸ்டேஷன்ல இருக்கேன்” என்று சொல்லியிருக்கிறார்.

இதையும் படியுங்க  அலட்சியமாக முயல் வேட்டை.. அள்ளிக்கொண்டு போன லட்சங்கள்! ஆலங்குளத்தில் சிக்கிய 12 பேருக்கு நேர்ந்த கதி!

ஸ்டேஷன் போன அப்பாவுக்கு காத்திருந்த எமன்! மகனைப் பார்க்க பதற்றத்துடன் மாலை 4 மணியளவில் காவல் நிலையத்துக்குப் போன லட்சுமணனை, அஜித்குமாரும் அவரது கூட்டாளிகளும் வழிமறித்து வெட்டிப் படுகொலை செய்திருக்கிறார்கள். பின்னர் அவரது உடலை அருகிலிருந்த காட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்று வீசியிருக்கிறார்கள்.

இதோடு முடிந்தது என்று நினைத்தால், அதற்கு அடுத்த காட்சி தான் மிகக் கொடூரம்!

கொலை செய்துவிட்டு தப்பிச் செல்லாமல், ரத்தக்கறை படிந்த கத்தியைக் கையில் வைத்துக் கொண்டே, கொடை ரோடு பகுதியில் உள்ள தனியார் பாருக்குச் சென்று அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்திருக்கிறார்கள் அந்த நான்கு பேரும்!

தகவல் கிடைத்து போலீஸார் அங்கு சென்று நான்கு பேரையும் பிடித்திருக்கிறார்கள். , போலீஸ் முன்னாடியே நடவடிக்கை எடுத்திருந்தா இந்த கொலை விழுந்திருக்காது !

கீழே கிடந்த பணத்தை எடுத்தவர்கள், அதை உரியவரிடம் ஒப்படைத்திருந்தால், இன்று ஒரு உயிர் போயிருக்குமா? 25,000-ஆ? 50,000-ஆ? என்ற கணக்கில் ஆரம்பித்த சண்டை, செருப்படியில் வெடித்து, கடைசியில் பட்டாக்கத்தியில் முடிந்திருக்கிறது.

பணத்தால் பிரிந்த நட்பு… ரத்தத்தில் முடிந்தது.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *