சென்னைக்கு வரும் ரஜினி ரசிகர்கள் தவறாமல் காலடி எடுத்து வைக்கும் புனிதத் தலங்களில் ஒன்றான கோடம்பாக்கம் ‘ஸ்ரீ ராகவேந்திரா கல்யாண மண்டபம்’ விரைவில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட உள்ளது.
எம்.ஜி.ஆர் காலத்தில் இடம் வாங்கி, தன் கனவுத் திட்டமாக ரஜினிகாந்த் பார்த்துப் பார்த்துக் கட்டிய இந்த மண்டபத்தை ஒட்டுமொத்தமாக இடிப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
அடையாளத்தை இழக்கிறதா கோடம்பாக்கம்?
சென்னைக்கு வரும் ரசிகர்கள் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தைப் பார்ப்பது ஒருபுறம் என்றால், அவரது அரசியல், தனிப்பட்ட வாழ்க்கையின் பல வரலாற்று நிகழ்வுகளுக்குச் சாட்சியாக அமைந்த ராகவேந்திரா மண்டபத்தைப் பார்வையிடுவது மறுபுறம்.
தன் அரசியல் பிரவேசம் பற்றிய முக்கியமான முடிவுகள், ரசிகர்களுடனான சந்திப்புகள் என அனைத்து வரலாற்று தருணங்களுக்கும் இந்த மண்டபத்தையே ரஜினி பயன்படுத்தினார். அதுமட்டுமின்றி, தன் ஆரம்பகால நண்பர்களின் வாழ்வாதாரத்திற்காக இந்த மண்டபத்தின் நிர்வாகப் பொறுப்புகளையும் அவர்களிடமே ஒப்படைத்திருந்தார். சென்னையில் எத்தனையோ நவீன கல்யாண மண்டபங்கள் உருவானபோதும், தன் மண்டபத்தின் பழமை மாறக் கூடாது என்பதில் ரஜினி உறுதியாக இருந்தார்.

திடீர் இடிப்பு முடிவு- பின்னணியில் என்ன?
அப்படிப்பட்ட தன் கனவு மண்டபத்தை ஒட்டுமொத்தமாக இடித்துவிட்டு, அந்த இடத்தில் ஒரு பிரம்மாண்டமான ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் அல்லது ‘த்ரீ ஸ்டார் ஹோட்டல்’ கட்ட ரஜினி முடிவெடுத்துள்ளாராம். இதன் பின்னணியில் சில சொந்தக் காரணங்கள் இருந்தாலும், ‘வெளியில் இருந்து வரப்போகும் சட்ட சிக்கல்களும், சர்ச்சைகளுமே’ முதன்மை காரணம் என்று கூறப்படுகிறது.
மண்டபத்தின் ஒரு சில பகுதிகள் அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தை மீறி கட்டப்பட்டிருப்பதாகவும், இதன் மீது அதிகாரிகள் தரப்பில் இருந்து விரைவில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் பாயக்கூடும் என்றும் ரஜினியின் நெருங்கிய நலம் விரும்பிகள் எச்சரித்துள்ளனராம்.
சிக்கல்களைத் தவிர்க்கும் ரஜினி
சமீபத்தில் ‘ஜெய்லர் 2’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை தவிர்த்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது போல, மண்டப விவகாரத்திலும் தேவையில்லாத அரசியல், சட்டச் சிக்கல்கள் தன் பெயருக்குக் களங்கம் விளைவித்துவிடக் கூடாது என்பதில் ரஜினி மிகத் தெளிவாக இருக்கிறார்.
பிரச்சனை பெரிதாகி வீண் சர்ச்சைகளில் சிக்குவதை விட, ஒட்டுமொத்தமாக மண்டபத்தை இடித்துவிட்டு அதை முறையான வணிக வளாகமாக மாற்றுவதே பாதுகாப்பானது என ரஜினி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தன் அரை நூற்றாண்டு கால சினிமா பயணத்தில் எத்தனையோ மைல்கற்களைப் பார்த்த ரஜினியின் மிக முக்கிய அடையாளமாக இருந்த ராகவேந்திரா மண்டபம், இப்போது வணிக நோக்கத்திற்காகவும், சட்ட சிக்கல்களுக்குப் பயந்தும் இடிக்கப்பட இருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
