வயது முதிர்ந்து தளர்ந்த நிலையில் இருக்கும் திமுகவின் பொதுச்செயலாளர் ஐயா துரைமுருகன் அவர்களை, திமுகவில் இருக்கும் போலி முற்போக்குவாதிகள் இவ்வளவு வன்மத்தோடு குறிவைத்து தாக்குவது ஏன் என்று புரியவில்லை.
தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் துணைவியார் துர்கா அவர்கள், திமுக ஆட்சிக் காலத்திலேயே பல்வேறு கோவில்களில் அட்சர சுத்தமாக பார்ப்பனீய வைதீக சடங்குகளில் பயபக்தியோடு நின்ற காட்சிகள் உலகறிந்தவை.
அதற்கு தலைவர் என்ன சொன்னார்?
தனிமனித வழிபாட்டு உரிமைகளில், குடும்பமாக இருந்தாலும் நான் தலையிடுவதில்லை. அது அவரவர் விருப்பம் சார்ந்தது” என்றுதானே மேடைதோறும் தெளிவாகச் சொன்னார்.
அதே போலத்தான் திருமணம் என்பது ஒருவரால் மட்டுமே தீர்மானிக்கப்பட்டு நடக்கும் சடங்கல்ல. வயது முதிர்ந்த ஐயாவை குடும்பத்தினர் ‘பைபாஸ்’ செய்து, இந்த சடங்குகளை நிறைவேற்றியிருக்கவே வாய்ப்பு அதிகம். அல்லது மாப்பிள்ளை வீட்டாரின் விருப்பமாக இருந்திருக்கலாம்.
அந்த மணவிழாவில் தலைமையே கலந்துகொண்டு வாழ்த்தி உரையாற்றியது. திமுகவின் முக்கியத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு அட்சதை தூவி மகிழ்ந்தது என எல்லாம் நடந்தேறியது.
உண்மையிலேயே இதில் புரட்சிகர எதிர்ப்புணர்வு இருந்திருந்தால், விழாவிலேயே எதிர்த்து வெளிநடப்பு செய்திருக்க வேண்டும். யாரும் அப்படி செய்யவில்லையே?
ஊடகங்களில் இதை ஊதிப் பெரிதாக்கியது ஐயா சுப.வீ என்று நினைக்கிறேன். சுப.வீ ஒன்றும் படுபயங்கரமான முற்போக்குவாதி என்றெல்லாம் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அவருக்கும் மனதின் ஓரத்தில் சுயசாதிப் பற்றும், பெருமிதமும் உண்டு என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
இது ஏதோ துரைமுருகன் மீது சுப.வீ-க்கு இருந்த தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் வழியாக ஊதிப் பெரிதாக்கப்பட்டதோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. அழைப்பிதழ் வைக்கவில்லையா என்னவோ? என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை என்றாலும், ஓரளவு உணர முடிகிறது.
நான் திருமணங்களில் நடக்கும் பார்ப்பனீய சடங்குகளை ஆதரிக்கிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். நெருங்கிய உறவினர் திருமணமாக இருந்தாலும், சடங்குகள் சம்பிரதாயங்கள் நடந்தால் உடனடியாக அங்கிருந்து நடையைக் கட்டிவிடும் ஆள் நான்.
கலைஞரின் மனசாட்சியான முரசொலி மாறன் அவர்களின் குடும்பமே இன்று ஏறத்தாழ பார்ப்பனியக் குடும்பங்களோடு ஒன்று கலந்து, அவர்களில் ஒன்றாகவே மாறியிருப்பதை உலகறியும். குழந்தை காவ்யாவுக்கு கூட சாட்சாத் அனிருத் ஐயர்தானே மாப்பிள்ளை.
இந்து பார்த்தசாரதி குடும்பத்தினர் ஏறத்தாழ மாறன் குடும்பத்தோடு ஒன்றறக் கலந்துவிட்டார்கள். அதில் தவறொன்றும் இல்லை. காதல் திருமணங்கள் வழியாக பார்ப்பனிய சமூக உறுப்பினர்கள் பிற சமூகங்களோடு கலப்பது, போலி திமுகவினர் பேசும் முற்போக்கை விட முற்போக்கானது தான்.
இதையெல்லாம் தாண்டி, சாதி சனாதனம் போன்ற விஷயங்களில் பார்ப்பனர்கள் பலர் மிக இயல்பாக மனிதத்தன்மைக்கு மாறிவரும் சூழல் தமிழகத்தில் விரைவாக நிகழ்ந்து வருகிறது. அங்கே வர்க்கம் பெரிதாகிவிடுகிறது. ‘தலித் பணக்காரர் வீடு என்றால் பார்ப்பனர்களுக்கு ஓகே’ என்ற மனநிலை.
திமுக மற்றும் திகவில் இருக்கும் பல இரண்டாம் கட்டத் தலைவர்கள் எவ்வளவு அப்பட்டமான சாதிவெறி கொண்டவர்கள் என்பதை பொதுவெளியில் பேசினால், திராவிடர் கழகத்தில் பலர் தப்பிக்க முடியாது.
வழிபாடும் சடங்குகளும் என்னைப் பொறுத்தவரை தனிமனித விருப்பம் சார்ந்தவைதான். நீங்களாக மறுத்து உங்களை உயர்ந்த மனிதர்களாக உணரும் வரை, சடங்குகளும் பிற்போக்கு வழிபாட்டு முறைகளும் அழியாது.
சக மனிதர்களை வேறுபாடின்றி தோழமையோடும் பேரன்போடும் நடத்தும் பார்ப்பனர்கள் உண்டு. அதிலும் இளம் தலைமுறையில் அப்படியானவர்கள் நிறையவே வருவதை கண்கூடாகப் பார்க்கிறேன். வரவேற்கத்தக்க மாற்றம் அது.
சாதி, சனாதனம் எல்லாம் மனநிலை, அது கோட்பாடு கூட இல்லை. இனவாதம் எந்த வடிவில் பேசப்பட்டாலும் அது சனாதனம்தான். ‘தமிழே உயர்ந்தது, தமிழர்களே உலகின் மூத்தகுடிகள்’ என்று மேடையில் பேசினால் அதுவும் இனவாதம்தான்.

திமுகவின் பல தலைவர்கள் பேசுவது, சீமான் போன்றவர்கள் பேசுவது, விடுதலைச் சிறுத்தைகளில் பலர் இப்போது துரைமுருகனை குறிவைப்பது எல்லாம் போலி முற்போக்குவாதம். அவர்களில் பெரும்பான்மையானோர் இன்னும் சனாதன சடங்குகளில் இருந்தும், இந்துத்துவ மூடத்தனங்களில் இருந்தும் மாறாதவர்கள்.
குன்றக்குடி ஆதீனத்திற்கு பெரியார் வந்தபோது திருநீறு பூசிக்கொண்டார் என்றொரு செய்தி உண்டு. “உங்கள் அன்பிற்காகவும், விருந்தினர் என்ற வகையில் உங்களை காயப்படுத்த விரும்பவில்லை” என்று அடிகளாரிடம் அப்போது பெரியார் சொன்னதாக அப்பா என்னிடம் சொல்லியிருக்கிறார்.
அது எந்த அளவு உண்மை என்று தெரியாது, ஆனால் அதுதான் முற்போக்கு. சக மனிதர்களை எந்த வகையிலும் காயப்படுத்தாமல் அவர்களது வழிபாட்டு உரிமைகளைக் காக்கத்தானே வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்தினார் பெரியார்.
திமுகவின் ஆண்டைகளில் பலர் இப்போதும் சாதிய வன்மமும், சனாதனக் காதலும் கொண்டவர்கள். என்னால் பட்டியலே கொடுக்க முடியும். முன்னாள் அமைச்சர் மூர்த்தி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தலித் இளைஞர்களை அவமதித்தபோது எங்கே போனார்கள் இந்த முற்போக்குவாதிகள்?
வை.கோ கலைஞரை ‘நாயனக்காரர்’ என்று சாதிவன்மம் கக்கியபோது எங்கே போனீர்கள்? உங்கள் ஊர்களில் சக மனிதர்களை அவமானப்படுத்தும் சாதிய வன்மங்கள் நிகழும்போதெல்லாம் எங்கே போகிறீர்கள் போலி முற்போக்குவாதிகளே?
நேரடியாக சாதிப் பெருமை பேசும் மனிதர்களைக் கூட நான் ஏற்றுக்கொள்வேன். ‘கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள் நாங்கள், எங்கள் பிள்ளைக்கு மாற்று சாதியில் மணம் செய்து வைத்தோம், பொதுத்தொகுதியில் இடம் கொடுத்தோம்’ என்று பொதுவெளியில் பீற்றும் எவரையும் ஏற்க முடியாது.
அவர்கள்தான் சனாதனத்தைக் காப்பவர்கள்.
அவர்களின் ஆழ்மனதில் இருந்து சாதியும் சனாதனமும் கரைவதில்லை. மாறாக அது ஒரு கவசம், ஒருவகை விளம்பரம். மனிதர்களுக்குள் திருமணம் செய்துவைப்பதை ‘கலப்புத் திருமணம்’ என்று சொன்னால் அது ஒருவகையான மனநோய்.
ஒருவேளை பிற விலங்குகளுக்கு தங்கள் குழந்தைகளை மணம் செய்து வைத்திருக்கிறோம் என்று யாரேனும் சொன்னால் அதை முற்போக்கு என்று ஏற்றுக்கொள்ளலாமோ என்னவோ?
ஆகவே, அன்புக்குரியவர்களே, திமுக, திக போன்ற இயக்கங்களில் இருந்துகொண்டு முற்போக்கு என்ற பெயரில் எதையாவது உளறிக் கொட்ட வேண்டாம்.
கலைஞர் இறுதிவரை முற்போக்காக வாழ்ந்து காட்டினார். “ராமர் எந்தக் கல்லூரியில் பொறியியல் படித்தார்?” என்று கேட்பதற்கெல்லாம் அசாத்திய துணிச்சலும், முற்போக்கு சிந்தனையும் வேண்டும்.
விசிகவினர் எல்லாம் சனாதன எதிர்ப்பிலும், துரைமுருகன் எதிர்ப்பிலும் துடிப்பாக இயங்குவது பெரிய நகைச்சுவை. ஏனெனில் வர்க்க ரீதியில் முன்னேறிய தலித்துகள் முதலில் செய்வது சனாதன வழிபாடும், சக மனிதக் காழ்ப்பும்தான்.
பார்ப்பனீயத்தின் வழியாக மிகப்பெரிய ஒடுக்குமுறைக்கு ஆளான முக்குலத்தோர், நாடார், வன்னியர் போன்ற சாதிகள் இன்று என்ன செய்கின்றன? எளிய உழைக்கும் மக்களை ஒடுக்கவும், அவமதிக்கவும் தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கின்றன.
கொஞ்சமாக முன்னேறிய பறையர், பள்ளர் எல்லாம் என்ன செய்கிறார்கள்? சங்கிலியர் மற்றும் பன்றிக் குறவர்களை தீண்டத்தகாதவர்கள் என்று தங்கள் வீடுகளுக்குள் பேசிக்கொண்டு ஒடுக்குமுறை வகுப்பெடுக்கிறார்கள். அவர்கள் எல்லாம் துரைமுருகன் இல்லத் திருமணம் குறித்து விமர்சிக்க எந்தத் தகுதியும் அற்றவர்கள்.
சாதி, சனாதனம் போன்றவை எல்லாம் இனவாதங்களே. மதவழிபாடுகள் அனைத்தும் இனவாதம்தான். எல்லைகளற்ற, மதங்களற்ற வழிபாடு இங்கு சாத்தியமில்லை. நிறுவனமயப்படுத்தப்பட்ட வர்க்கச் சுரண்டலுக்காகவே வர்ணாசிரம தர்மம் தீவிரமாக இயங்குகிறது.
சக மனிதர்களை நேசிப்பதை அடிப்படையாகக் கொண்ட, எந்த இனபேதங்களும் இல்லாத வழிபாடு சாத்தியம் என்றால், அது தனிமனித விருப்பம் என்று நான் ஆதரிப்பேன். பிற வழிபாட்டு முறைகளை இனவாதம் என்று மறுதலிப்பேன்.
தமிழ் சமூகம் சனாதன சாதிய இனவாதத்தில் பார்ப்பனீயத்தை முந்திச் சென்று நீண்ட நாட்களாகிறது. இதில் திமுக, அதிமுக, திக, கம்யூனிஸ்டுகள், விசிக என்று எந்த வேறுபாடும் இல்லை.
ஆகவே, திமுகவின் பொதுச்செயலாளர் மீது மட்டும் குறிவைக்கப்படும் இந்த போலி முற்போக்குவாதத்தை நான் புறந்தள்ளுகிறேன். உங்களில் பலர் செய்யாத அதிசயமான பிற்போக்குத்தனத்தையா அவர் செய்துவிட்டார்?
சக மானுடர்களையும், சக உயிர்களையும் எந்த நிபந்தனைகளும் இல்லாமல் நேசிக்கும் பேரண்ட இயக்கமே உண்மையான முற்போக்கு. அதில் கிடைக்கிற அற்புதமான மனநிலை, எல்லா வழிபாடுகளையும் விட அழகானது. – கை.அறிவழகன்
