தமிழ்நாட்டில் நவம்பர் 1 மற்றும் ஜூலை 18 ஆகிய தேதிகளில் எது உண்மையான தமிழ்நாடு நாள் என்ற விவாதம் மீண்டும் அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளது. நவம்பர் 1-ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடும் தமிழக வெற்றிக் கழகத் தலைமையிலான அரசின் முடிவுக்கு திமுக அதிகாரப்பூர்வமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
ஜூலை 18 மட்டுமே உண்மையான தமிழ்நாடு நாள் என்றும், நவம்பர் 1-ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது மாநிலத்தின் தனித்துவமான வரலாற்றை மழுங்கடிக்கும் செயல் என்றும் திமுக தெரிவித்துள்ளது.
தற்போது தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள தவெக அரசு, நவம்பர் 1 மற்றும் ஜூலை 18 ஆகிய இரண்டு நாட்களையும் தமிழ்நாடு நாளாகக் கொண்டாட முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் சி. ஜோசப் விஜய் வெளியிட்ட அறிவிப்பில், மொழிவாரியாக மெட்ராஸ் மாநிலம் பிரிக்கப்பட்ட நவம்பர் 1-ஆம் தேதியையும், ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் தேதியையும் அரசு சார்பில் கொண்டாடப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று (நவம்பர் 1) சென்னை அருங்காட்சியக அரங்கில் அரசு சார்பில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படுகிறது.
இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 1969-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி முதல் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, நவம்பர் 1-ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது வரலாற்று உண்மைகளை மாற்றுவதாக அமையும் எனத் திமுக விமர்சித்துள்ளது.
மேலும், ‘தமிழ்நாடு’ என்ற பெயர் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களுக்கும் சொந்தமானது என்பதால், அதன் வரலாற்றுத் தனித்துவத்தைக் குறைக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் இருக்கக் கூடாது என்றும் திமுக தெரிவித்துள்ளது. நவம்பர் 1-ஆம் தேதியை எல்லைப் போராட்டங்களில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாகிகளை நினைவுகூரும் நாளாக மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
ஜூலை 18 ஏன் முக்கியம்?
மெட்ராஸ் மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, பேரறிஞர் அண்ணா தலைமையில் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பாக, 1967-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி அண்ணா தலைமையிலான திமுக அரசு, மெட்ராஸ் மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் செய்வதற்கான தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் கொண்டுவந்தது. இதுவே தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையே, தமிழ்நாட்டின் பெயர் மாற்றத்திற்காகப் போராடி உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் தியாகத்தையும் திமுக தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. 1956-ஆம் ஆண்டு மெட்ராஸ் மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 76 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து அவர் உயிர்நீத்தார். அவரது தியாகத்தைப் போற்றும் வகையில் ஜூலை 18-ஆம் தேதியே தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்பட வேண்டும் என்றும் திமுக தெரிவித்துள்ளது.
நவம்பர் 1-ஆம் தேதிக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு!
மறுபுறம், இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், 2019-ஆம் ஆண்டு தனது தலைமையிலான அதிமுக ஆட்சியில்தான் நவம்பர் 1-ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் நின்று உழைக்க இந்த நாளில் உறுதியேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நாள் அறிவிப்பில் முந்தைய அரசுகளின் முடிவுகள்!
2019-ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு நவம்பர் 1-ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாக அறிவித்தது. இதையடுத்து, 2021-ஆம் ஆண்டு மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அந்த அறிவிப்பை மாற்றி, ஜூலை 18-ஆம் தேதியை அதிகாரப்பூர்வ தமிழ்நாடு நாளாக அறிவித்துக் கொண்டாடியது.
தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசு, இரு தேதிகளின் வரலாற்று முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, நவம்பர் 1 மற்றும் ஜூலை 18 ஆகிய இரண்டு நாட்களையுமே தமிழ்நாடு நாளாகக் கொண்டாட முடிவு செய்துள்ளது.
இரு தேதிகளின் வரலாற்றுப் பின்னணி என்ன?
- நவம்பர் 1, 1956: மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களிலிருந்து தமிழ்ப் பகுதிகள் பிரிக்கப்பட்டு, மெட்ராஸ் மாநிலத்தின் தற்போதைய புவியியல் எல்லை உருவான நாள்.
- ஜூலை 18, 1967: மெட்ராஸ் மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் செய்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை அண்ணா தலைமையிலான அரசு சட்டமன்றத்தில் கொண்டுவந்த நாள்.
இதற்கிடையே, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1-ஆம் தேதியையே தமிழ்நாடு நாளாகக் கருதி, ஆண்டுதோறும் தனது கட்சி சார்பில் கொண்டாடி வருகிறார்.
இவ்வாறு திமுக, அதிமுக, தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை தமிழ்நாடு நாள் தொடர்பாக வெவ்வேறு நிலைப்பாடுகளை முன்வைத்துள்ள நிலையில், ‘எது உண்மையான தமிழ்நாடு நாள்?’ என்ற விவாதம் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
