சி. ஜோசப் விஜய் நடித்த GOAT ( The Greatest of All Time) திரைப்படத்தின் படப்பிடிப்பு காலத்தில் இடம்பெற்ற ஒரு சுவாரஸ்யமான சம்பவம் தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தபோது, விஜய் தனது அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார். குறிப்பாக, கட்சியின் பெயரை அறிவித்த அதே நாளின் மாலையே அவர் வழக்கம்போல் படப்பிடிப்பில் கலந்து கொண்டு தனது பணியை தொடர்ந்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு பல பேட்டிகளில் பகிர்ந்துள்ளார்.
அந்த சமயத்தில், விஜய்க்கு மரியாதை செலுத்தும் வகையில், படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் பயன்படுத்தப்பட்ட காரின் பதிவு எண்ணை “TN 07 CM 2026” என வடிவமைத்திருந்ததாக கூறப்படுகிறது.
விஜய் எதிர்காலத்தில் வெற்றி பெற்று முதலமைச்சராக வருவார் என்ற நம்பிக்கையை பிரதிபலிக்கும் விதமாகவே அந்த எண்ணை பயன்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனிடையே, தற்போது தமிழக முதலமைச்சராக உள்ள சி. ஜோசப் விஜய், திரைப்படத் துறையைச் சேர்ந்த பலரையும் நேரில் சந்தித்து வருகிறார். அந்த வகையில், இயக்குனர் வெங்கட் பிரபு அந்த காரின் பதிவு எண்ணை நினைவுப் பரிசாக வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விஜய் தெரிவித்ததாக கூறப்படும் தகவலில், “முதல்வராக ஆன பிறகு இயக்குனரை சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது. என் திரைப்படத்தில் இடம்பெற்ற அந்த கார் எண்ணை நினைவாக வழங்கியது மிகவும் கிரியேட்டிவான மற்றும் மனதில் நிற்கும் செயல்” என்று பாராட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
