
அரசியல் பதவியின் நிழலில் பெண்கள் பாதுகாப்பு எங்கே? – புகார்களின் பின்னணியில் ஒரு புலனாய்வுப் பார்வை!
”மாற்றம்… ஒழுக்கம்…” என்று மேடைதோறும் முழங்கிக்கொண்டு தமிழக அரசியலில் கால்பதித்த தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர், இன்று காவல் நிலைய FIR கோப்புகளில் அடிபடுகிறது என்றால், அதைக் கடந்து போக முடியவில்லை.
இது ஒன்றோ இரண்டோ அல்ல… வெவ்வேறு மாவட்டங்கள், வெவ்வேறு கட்சி பதவிகளில் இருப்பவர்கள் மீது எழுந்திருக்கும் அடுக்கடுக்கான பாலியல் புகார்கள். ஆனால், எல்லாவற்றிலும் ஒரே பேட்டர்ன் என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். பதவி ஆசை காட்டி நெருங்குவது, அந்தரங்கத்தைப் படம்பிடித்து பலவீனமாக்குவது, பிறகு மிரட்டி வளைப்பது!
குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும்வரை இவை அனைத்தும் குற்றச்சாட்டுகளே, புகார்களே. ஆனால், ஒரு புகார் வந்துவிட்டால் அதை மூடிமறைக்காமல் வெளிச்சம் போட்டுக் காட்டுவதுதானே பத்திரிகை தர்மம்?
முதல் வரிசை: FIR, கைது என ஆதாரம் உறுதியானதாகச் சொல்லப்படும் வழக்குகள்!
1. சேலம் மணிகண்டன் வழக்கு – ஜூன் 2026: சேலம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (39), பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாகக் கைது செய்யப்பட்டார் என்பது போலீஸ் தரப்பு குற்றச்சாட்டு. பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணின் ஆடியோ வைரலானதை அடுத்து, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில் விசாரணை நடந்தது. அவரது செல்போன், பென்-டிரைவ் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததாகப் போலீஸார் தெரிவித்தனர். BNS பிரிவுகள் 74, 75, 76, 77 உட்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு. ”சுமார் 50 வீடியோக்களை அழித்தேன்” என்று பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் சொன்னது தமிழகத்தையே உலுக்கியது. த.வெ.க தரப்போ, ”அவர் கட்சி உறுப்பினரே இல்லை” என்று மறுக்கிறது.
2. தூத்துக்குடி பாலமுருகன் – ஜெயபால் கூட்டு பாலியல் வன்கொடுமை புகார்: வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணைத் தனியார் லாட்ஜுக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக, தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் என்று சொல்லப்படும் பாலமுருகன் (32), ராமநாதபுரம் நிர்வாகி என்று சொல்லப்படும் ஜெயபால் (34) ஆகியோரை ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்து ரிமாண்ட் செய்ததாகத் தகவல் வெளியானது. இதில் த.வெ.க மகளிர் அணி நிர்வாகி ஒருவரும் பாதிக்கப்பட்டதாகப் பரவிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.
3. கன்னியாகுமரி கிறிஸ்டோபர் புகார் – அக்டோபர் 24, 2026: குலசேகரம் பகுதியில் பேருந்துக்காகக் காத்திருந்த கல்லூரி மாணவிக்கு லிப்ட் தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக, கன்னியாகுமரி மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்று சொல்லப்படும் கிறிஸ்டோபர் மீது தக்கலை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மறுநாள் ”புகாரை வாபஸ் பெறுகிறேன்” என்று மாணவி தரப்பில் மனு கொடுக்கப்பட்டதாக வெளியான தகவல், ”இது மிரட்டலின் அழுத்தமா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்த மூன்று சம்பவங்களிலும் FIR, கைது, பறிமுதல் எனக் காவல்துறை நடவடிக்கை ஆவணமாகியுள்ளதாகப் சொல்லப்படுகிறது.
இரண்டாம் வரிசை: விசாரணை கோரி வெளியாகியிருக்கும் புகார் பட்டியல்! பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் சமூக வலைதளங்களில் பகிரப்படும் பட்டியலில் இடம் பெற்றிருப்பவை இவை.
4. த.வெ.க எம்.எல்.ஏ விஜி சரவணன் என்பவர், பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக இருந்து பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகப் புகார் கூறப்பட்டுள்ளது.
5. வேம்புலி (ஆலந்தூர் த.வெ.க வடக்கு) என்பவர், அங்குள்ள மகளிர் உடற்பயிற்சி மையப் பொறுப்பாளருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார்.
6. விஜய் மோகன் (ராணிப்பேட்டை மேற்கு) – கட்சியில் பதவி வழங்குவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார்.
7. ‘பாம்பு’ தினேஷ் (ஆர்.கே.நகர் 43-வது வார்டு) – 11 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை எனப் புகார்.
8. பிரைட்டர், ரூஸ்வெல்ட் (திருச்செந்தூர் நிர்வாகி) – பெண் நிர்வாகியிடம் ஆபாசப் பேச்சு, பாலியல் தொல்லை, கொலை மிரட்டல் எனப் புகார்.
9. பிரகாஷ் @ குட்டி (திருவள்ளூர் தெற்கு) – பெண் நிர்வாகிக்குப் பாலியல் தொல்லை எனப் புகார்.
10. மகாராஜா, ராபின், ஹரிஸ் (சிவகங்கை) – பெண் நிர்வாகிக்குப் பாலியல் தொல்லை எனப் புகார்.
11. ரமேஷ் (குளித்தலை ஒன்றிய செயலாளர்) – மாற்றுத்திறனாளி பெண்ணுக்குப் பாலியல் தொல்லை எனப் புகார்.
12. கண்ணன் (மதுரை கீழமாத்தூர்) – 10-ம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை எனப் புகார்.
13. மதன் ராஜ் (வில்லிவாக்கம்) – பெண் காவலரிடம் அத்துமீறல், பாலியல் தொல்லை எனப் புகார்.
14. ஆனந்த் (அசோக் நகர்) – 65 வயது மூதாட்டிக்குப் பாலியல் தொல்லை எனப் புகார்.
15. சசிகுமார் (அரக்கோணம்) – கட்சியில் பொறுப்பு வாங்கித் தருவதாகக் கூறி திருமணமான பெண்ணைக் கர்ப்பமாக்கியதாகப் புகார்.

பதில் சொல்லுமா தலைமை? புகார் வந்தால் உள் விசாரணை வெளிப்படையாக நடக்கிறதா? காவல்துறை விசாரணை எந்த அரசியல் செல்வாக்கும் இன்றி நடக்கிறதா? புகார் கொடுத்த பெண்களின் அடையாளம் பாதுகாக்கப்படுகிறதா? புகார் வேறு, FIR வேறு, கைது வேறு, குற்றப்பத்திரிகை வேறு என்பதைப் பிரித்துப் பார்க்கத் தலைமை தயாரா?
பதவி யாருக்கும் சட்டத்திற்கு அப்பாற்பட்ட பாதுகாப்பைத் தராது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும்வரை அது குற்றச்சாட்டுதான். அதேநேரம், பாதிக்கப்பட்டதாகச் சொல்லும் பெண்கள் அச்சமின்றிப் புகாரளிக்கும் சூழல் உருவாக வேண்டும்.
முதல்வர் விஜய் அவர்களே, முதலில் உங்கள் கட்சியினரை ஒழுங்குபடுத்துங்கள்; ஒழுக்கத்தைக் கற்பியுங்கள். இல்லையேல், ‘மக்கள் இயக்கம்’ என்ற பெயர் மகளிர் அச்சத்தின் முகவரியாக மாறிவிடும்!
