Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

TVK

கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் விலை உயர்ந்த போதைப்பொருளான ‘மெத்தபெட்டமைன்’ மிகப் பெரிய அளவில் கைப்பற்றப்பட்டது. இச்சம்பவம் அரசியல் வட்டாரங்களிலும் காவல்துறையிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்த விவகாரத்தில் நாகை மாவட்ட தவெக செயலாளராக இருந்த பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளது இந்தச் சம்பவத்தை ஒரு அரசியல் பூதாகரமாக மாற்றி உள்ளது. பூபாலன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விசாரணை தீவிரமாக நடந்துவரும் நிலையில், இந்த ஆபரேஷன் எப்படி அரங்கேறியது?, போதைப்பொருள் எங்கிருந்து வந்தது?, எங்கு செல்கிறது? என்பது குறித்து விரிவான தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘மெத்’ தயாரிப்பு- ஆந்திரா – மகாராஷ்டிரா ரூட்
மெத்தபெட்டமைன் என்பது ஒரு செயற்கையான போதைப்பொருள். மருந்து கம்பெனிகளில் பயன்படும் மூலப்பொருட்களைக் கொண்டே இது தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலும் மகாராஷ்டிரா, ஆந்திரா மாநிலங்களில்தான் இந்த போதைப்பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது.

TVK

இந்த மாநிலங்களில் பார்மசி லைசென்ஸ் பெற்று, மருந்து தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்களைப் பெருமளவில் கொள்முதல் செய்துவிட்டு, பின்னர் “தொழில் நஷ்டம்” என்று கூறி அந்த நிறுவனங்களை மூடிவிடுகின்றனர். அதன் பிறகு, அந்த மூலப்பொருட்களை வைத்தே இந்த மெத்தபெட்டமைனைத் தயாரிக்கின்றனர். மகாராஷ்டிரா, ஆந்திராவில் பார்மசி கம்பெனி ஆரம்பிக்க லைசென்ஸ் வாங்குவது, அதை மூடுவது, மீண்டும் வேறு பெயரில் லைசென்ஸ் பெறுவது போன்ற செயல்களை இவர்கள் தொடர்கதையாகச் செய்து வருகின்றனர்.

நேர்மையான அதிகாரியின் அதிரடி ஆபரேஷன்
நாகை மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட இந்த மெத் போதைப்பொருள் எங்கிருந்து வந்தது? மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையின் திருச்சி மண்டல இயக்குநராக உள்ள கனக சுப்பிரமணியன் மிகவும் நேர்மையான, திறமையான அதிகாரி. ஆந்திராவில் இருந்து இந்த விலை உயர்ந்த போதைப்பொருள் நாகை கடலோரப் பகுதிக்கு வருகிறது என்ற ரகசியத் தகவல் சில மாதங்களுக்கு முன்பே அவருக்குக் கிடைத்தது.

இதையும் படியுங்க  ''பறிபோகும் இடங்கள்..! உரிமையை விட்டுக் கொடுக்காதே..!'' முதல்வர் விஜய்க்கு உதயநிதி அதிரடி எச்சரிக்கை!"

ஆந்திராவில் இருந்து போதைப்பொருள் லோடு எங்கு கிளம்பி, எங்கு செல்கிறது என்பதைக் கண்டறிந்தால்தான் முழு நெட்வொர்க்கையும் ஒடுக்க முடியும் என்று களமிறங்கிய அவர், ஆந்திராவில் போதைப்பொருள் கிளம்பிய இடத்தைக் கண்டுபிடித்தார். ஆந்திராவுக்குச் சென்று அங்கிருந்து இந்தத் தொகையை நாகைக்குக் கொண்டுவந்தது நாகையைச் சேர்ந்த ஒரு காராகும்.

அக்டோபர் 17-க்கு சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன், சுகநாதன் ஆகியோர் ஒரு எர்டிகா காரில் ஆந்திராவுக்குச் சென்றுள்ளனர். அக்டோபர் 16 அன்று மாலை அங்கிருந்து புறப்பட்ட அந்த காரில் விலை உயர்ந்த போதைப்பொருள் இருப்பதை அறிந்த வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், அந்த காரை விடாமல் பின்தொடருமாறு உத்தரவிட்டனர்.

அக்டோபர் 17 அன்று அதிகாலை 5:45 மணிக்கு, வேளாங்கண்ணி அடுத்த பிரதாமபுரம் செட்டித் தெருவில் உள்ள சுகன் என்பவரின் வீட்டுக்கு முன்னாடி அந்த கார் நின்றது. உடனடியாக காரைச் சுற்றி வளைத்த அதிகாரிகள், மணிகண்டன் மற்றும் சுகநாதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அடுத்த சில நிமிடங்களில் அவர்களின் செல்போன்களைப் பறிமுதல் செய்து, வேளாங்கண்ணிக்கு வருவதற்கு முன்பு அவர்கள் யாருக்கெல்லாம் பேசினார்கள் என்பதை ஆராய்ந்தனர்.

இதையும் படியுங்க  "சாப்பாட்டுல விஷமா? நீங்க ஆசையா வாங்குற கலர் அப்பளத்துல கலந்திருக்கும் ஆபத்து! தமிழக அரசின் அதிரடி தடை!

இதன் தொடர்ச்சியாக, திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த பூபாலனை அதிகாரிகள் கைது செய்தனர். பூபாலனின் வீட்டில் விசாரணை நடத்தியபோது, அவரது மனைவி கழுத்து முழுக்க நகைகளை அணிந்திருந்ததைக் கவனித்தனர். ஆந்திராவில் இருந்து நாகைக்கு மெத் போதைப்பொருளைக் கொண்டுவந்து, அதைக் கடத்துவதற்கான ‘மெயின் ஸ்விட்ச்’ இந்தப் பூபாலன் தான் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

கடல் வழி கடத்தல்- கோல்டன் எக்ஸ்சேஞ்ச்
ஆந்திராவில் இருந்து வேளாங்கண்ணிக்கு வந்த இந்த போதைப்பொருள் இலங்கைக்கு எப்படிச் செல்கிறது என்பது குறித்துக் கைதானவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

போதைப்பொருளுடன் படகில் நடுக்கடலுக்குச் செல்வது. அங்கு இலங்கையில் இருந்து எங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் மற்றொரு படகிற்கு போதைப்பொருளை மாற்றுவது. அதற்குப் பதிலாக இலங்கைப் படகிலிருந்து தங்கக் கட்டிகளைப் பெற்றுக்கொள்வது. அந்தத் தங்கக் கட்டிகளை இங்கு கொண்டுவந்து மார்வாடிகளிடம் விற்று, கைமேல் ரொக்கப் பணத்தைப் பெறுவது.

இதுபோன்ற முறைகளில்தான் இந்தத் கடத்தல் நடந்துள்ளது. மேலும், இந்தியா மற்றும் இலங்கையின் ரேடார்கள் கடல் பாதையைக் கண்காணித்து வரும் நிலையில், அந்த ரேடார் கண்காணிப்பு வளையத்திற்கு அப்பாற்பட்ட, கண்காணிக்கப்படாத கடல் பகுதி வழியே இந்த அதிவேகப் படகுகள் இயக்கப்படுவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னணியில் பெரிய தலைகள்? உளவுத்துறையின் நோட்
இந்தப் பூபாலனுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதுதான் தற்போது எழுந்துள்ள மிக முக்கியமான கேள்வி. தென்னிந்தியாவில் மெத்தபெட்டமைன் போன்ற விலை உயர்ந்த போதைப்பொருட்களைக் கடத்துவதில் கேரளாவைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ என்பவர்தான் மூளையாகச் செயல்படுவதாகப் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் மத்தியில் பரவலான பேச்சு உள்ளது. ஆனாலும், ஜான் பிரிட்டோவை விசாரிக்க இலங்கை வரை செல்ல வேண்டி இருப்பதால், அதிகாரிகள் அதைக் பெரிதாக எடுப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  விஜயை நெருக்கும் 'கிறிஸ்தவ லாபி'..! 'ரூட்' போடும் டேவிட்சன்.! 'தி.மு.க பார்ட்-2' ஆக மாறுகிறதா த.வெ.க..?

இதற்கிடையில், சிபிஐ, ஐபி, என்சிபி உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகள் தங்களையும் இந்த விசாரணையில் இணைத்துக் கொள்ள வலியுறுத்தினாலும், திருச்சி மண்டல வருவாய் புலனாய்வு இயக்குநர் கனக சுப்பிரமணியன் அவர்களை உள்ளே சேர்க்கவில்லை.

மேலும், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களுமே பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலங்கள் என்பதால், அங்கே இவர்களைப் பிடிப்பதைக் காட்டிலும், தமிழ்நாட்டில் பிடித்து மாநில அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலான திட்டங்கள் உள்ளதா என்பது குறித்து உளவுத்துறை சமீபத்தில் மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பூபாலன் மற்றும் பிறரிடம் விசாரணை முடிந்ததும் மத்திய விசாரணை அமைப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் தகவல்கள் தமிழக அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியைத் தரக்கூடும். ஆனால், பிடிபட்ட நபர்களைக் கைது செய்த அதிகாரிகள், இந்த மெத்தபெட்டமைனைத் தயாரித்த கம்பெனிகள், விற்பனை செய்தவர்கள் மற்றும் பூபாலனுக்கு மேலே உள்ள முக்கியப் புள்ளிகள் குறித்தும் முழுமையாக விசாரிப்பார்களா என்ற சந்தேகம் தொடர்ந்து எழுந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago