கோவையில் சாதியப் பாகுபாடு மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் தொடர்பான துன்புறுத்தலால் 11ஆம் வகுப்பு மாணவர் அகிலன் (16) தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும், தனது மகனின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த பட்டியலின மாணவர் அகிலன், சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவரால் சாதி ரீதியாகவும், மாட்டிறைச்சி உண்ணும் உணவுப் பழக்கத்தை முன்வைத்தும் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில், கடந்த அக்டோபர் 21, 2026 அன்று தனது வீட்டில் மாணவர் உயிரை மாய்த்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீளமேடு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின்படி, சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு வகுப்பாசிரியர் விஜயகுமார், வகுப்பறையில் மாணவர்களிடம் “யாரெல்லாம் மாட்டிறைச்சி சாப்பிடுவீர்கள்?” என்று கேட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது அகிலன் உட்பட ஐந்து மாணவர்கள் கையை உயர்த்தியுள்ளனர். அதன்பிறகு, சில சக மாணவர்கள் அகிலனைச் சாதி ரீதியாகவும், அவரது உணவுப் பழக்கத்தை இழிவுபடுத்தியும் பேசியதுடன், வகுப்பறையில் உடல் ரீதியாகத் தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தத் துன்புறுத்தல் குறித்து அகிலனின் பெற்றோர் பள்ளித் தலைமை ஆசிரியர் அருண்குமாரிடம் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், இதனால் மாணவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். பள்ளிக்குச் செல்ல அஞ்சிய அகிலன், கடந்த மாதம் வீட்டைவிட்டு வெளியேறி ஆலந்துறையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாகவும், பின்னர் கோவைக்குத் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் அகிலனின் தந்தை அசோக்குமார், மூணாறில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சலவைத் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். அவரது தாயார் கௌசல்யாதேவி கோவையில் உள்ள குடியிருப்புகளில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். மகனை இழந்த பெற்றோர், சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து உரிய நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
மாணவரின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், பீளமேடு காவல்துறையினர் பள்ளித் தலைமை ஆசிரியர் அருண்குமார், வகுப்பாசிரியர் விஜயகுமார் மற்றும் இரு மாணவர்கள் என நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பட்டியலின மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வகுப்பாசிரியர் விஜயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமை ஆசிரியர் மற்றும் மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, விரிவான விசாரணை நடத்தி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோவை மாநகரக் காவல் ஆணையருக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கோவை மாவட்டக் கல்வி அலுவலர் கோமதியும் பள்ளியில் நேரடியாக விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மாணவரின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் கைது செய்யும் வரை மாணவரின் உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று அவரது தந்தை அசோக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, பீளமேடு காவல் நிலையம் முன்பு மாணவரின் தந்தை, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்ந்து திரண்டிருந்தனர்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அசோக்குமார், தனது மகனின் மரணம் தொடர்பாக முந்தைய நாள் மதியத்திலிருந்தே காவல்துறையினரிடம் காத்திருந்ததாகவும், பிற்பகல் 1.30 மணிக்குத்தான் முதல் தகவல் அறிக்கையின் நகல் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். விசாரணையில் சில தகவல்கள் தவறாகப் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மாட்டிறைச்சி தொடர்பான பிரச்சினை குறித்து மாணவர்களிடம் விசாரித்தபோது, அத்தகைய சம்பவம் நடைபெறவில்லை என்று அவர்கள் கூறியதாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக அசோக்குமார் தெரிவித்தார். ஆனால், அந்தத் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து முறையாக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், பள்ளி நூலகத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து தலைமை ஆசிரியருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தால், அப்போதே உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்திருக்கலாமே என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதுகுறித்து தங்களுக்குத் திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.
விசாரணை அதிகாரியின் செயல்பாடுகள் மீது நம்பிக்கை குறைந்துள்ளதாகத் தெரிவித்த அசோக்குமார், காவல்துறையினர் தெரிவிக்கும் தகவல்களைத் தன்னிடம் ஒப்புக்கொள்ள வைக்க முயற்சி நடைபெறுவதாக உணர்வதாகவும் கூறினார்.
“அவர்கள் எதிர்பார்க்கும் வார்த்தைகளை நான் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், எனது மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். விசாரணை நடைபெறும் விதத்தைப் பார்க்கும்போது, விசாரணை அதிகாரியை மாற்றினால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது” என அவர் தெரிவித்தார்.
வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அனைவரும் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் அசோக்குமார் கேள்வி எழுப்பினார். கைது நடவடிக்கை குறித்து விசாரணையின் முடிவில் முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததாகவும், சட்ட நடைமுறைகள் குறித்து முழுமையாகத் தெரியாவிட்டாலும், தற்போது விசாரணை நடைபெறும் விதத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் கூறினார்.
தனது மகனை இழந்த துயரத்திலும், இனி வேறு எந்தக் குழந்தைக்கும் இதுபோன்ற நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகவே போராடுவதாக அசோக்குமார் உருக்கமாகத் தெரிவித்தார். “என் மகன் மீண்டும் உயிருடன் திரும்பி வருவான் என்பதற்காக நான் போராடவில்லை. அவன் திரும்பி வரமாட்டான் என்பது எனக்குத் தெரியும். ஆனால், இனி எந்த அகிலனும் உயிரிழக்கக் கூடாது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சாதியின் பெயரால் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதுதான் எனது எதிர்பார்ப்பு” என்று அவர் கூறினார்.
இதற்கிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக கோவை மாநகரக் காவல்துறை துணை ஆணையர் தங்கதுரை கூறுகையில், மாணவரின் மரணம் தொடர்பாக விசாரணை ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட குழுவினர் தொடர்ந்து விரிவான விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
விசாரணை அதிகாரிகள் மீது மாணவரின் குடும்பத்தினர் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியுள்ள நிலையில், காவல் ஆணையர் தலைமையிலான உயர் அதிகாரிகள் மட்டத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.
இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாணவரின் பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணையின் அடுத்தடுத்த முன்னேற்றங்கள் குறித்துத் தொடர்ந்து தகவல் அளிக்கப்படும் என்றும் தங்கதுரை தெரிவித்தார்.
மாணவர் அகிலனின் மரணம் தொடர்பாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கைது செய்யப்படும் வரை மாணவரின் உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்பதில் அவரது குடும்பத்தினர் உறுதியாக உள்ளனர். இந்தச் சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பள்ளிகளில் சாதிப் பாகுபாடு மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
