கிருஷ்ணகிரி தொகுதி மக்களே… உங்கள் எம்.எல்.ஏ-வைச் சந்திக்க வேண்டுமா? இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று, கலெக்டர் அலுவலக மேடையில் தேடுங்கள்; இல்லையெனில் வீட்டுக்கே செல்லுங்கள். காரணம், அவரது சொந்த எம்.எல்.ஏ அலுவலகமும், அரசு கட்டிக் கொடுத்த அலுவலகமும் இன்றுவரை பூட்டியே கிடக்கின்றன.
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் களமிறங்கிய வழக்கறிஞர் பி. முகுந்தன் (முகுந்த் ஆர். பாண்டியன்), 89,374 வாக்குகள் பெற்று, அதிமுகவின் கே. அசோக்குமாரை 17,801 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சட்டமன்றத்துக்குள் நுழைந்தார்.

வெற்றி பெற்ற ஒரே மாதத்தில், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் எதிரில் 60 பேர் அமரும் வசதி, கணினிகள் சகிதம் நவீன எம்.எல்.ஏ அலுவலகத்தை அவர் தயார் செய்தார். அதேபோல், தாலுகா அலுவலக வளாகத்தில் அரசு சார்பில் கட்டப்பட்டு, கடந்த 15 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்த அலுவலகமும் புதுப்பிக்கப்பட்டது. ஆனால், இரண்டு அலுவலகங்களையும் அவர் இதுவரை திறக்கவே இல்லை.
இதனால் ஊருக்குள் சட்டமன்ற அலுவலகத்தில் அமர்ந்தவர்கள் தொடர்ந்து வெற்றி பெற்றதில்லை . அவர்கள் அரசியல் வாழ்க்கையும் அஸ்தமனமானது இதற்கு காரணம் அந்த அலுவலகத்தின் “வாஸ்து சரியில்லையாம்!” என்ற பேச்சு பரவியது.

இதைக் கேள்விப்பட்ட சமூக ஆர்வலர் சந்திரமோகன் (நுகர்வோர் நலச் சங்க மாநிலத் தலைவர்), பூட்டிய அலுவலக வாசலில் மாட்டைக் கட்டி, மாட்டிடமே மனு கொடுப்பது போல நூதனப் போராட்டம் நடத்தினார்.
“மனிதன் இல்லையென்றால் மாடாவது கேட்கட்டும்” என்பதே அவரது கோஷம். நீண்ட காலமாக அலுவலகம் பூட்டிக்கிடப்பதால், பொதுமக்கள் மனு கொடுக்க முடியாமல் தவிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து த.வெ.க-வினரிடம் கேட்டபோது, “பொறுப்பு அமைச்சர் கீர்த்தனா உள்ளிட்ட அமைச்சர்கள் முன்னிலையில் அலுவலகத்தைத் திறக்க தேதி கேட்டுள்ளோம் அதனால் தாமதமாகிறது” பொறுப்பு அமைச்சர் கீர்த்தனா விரைவில் வரவிருக்கிறார் அவரை வைத்து திறப்போம் என்றனர்.

ஆனால், உள்விவகாரம் இன்னும் சுவாரஸ்யமானது. “விஜய் ரசிகர் மன்றத்திலிருந்து வந்து மாவட்டச் செயலாளர்களாகிப் போட்டியிட்டவர்கள் தோல்வியைத் தழுவிய நிலையில், வெற்றி பெற்ற முகுந்தனின் அலுவலகத் திறப்புக்கு மாவட்டச் செயலாளர்களே பல இடையூறுகளை ஏற்படுத்தி மறைமுகமாக முட்டுக்கட்டை போடுகின்றனர்” எனக் கட்சிக்காரர்களே தெரிவித்துள்ளனர்.
அடேங்கப்பா… மக்கள் மனு கொடுக்க அமைச்சரின் முகூர்த்தம் பார்க்க வேண்டுமா? வாஸ்து சாஸ்திரத்தைவிடப் பெரிய சாஸ்திரம் ‘மந்திரி சாஸ்திரம்’ போலும்!
வழக்கறிஞர் ஐயா, நீதிமன்றத்தில் வாய்தா வாங்குவதுபோல மக்கள் பிரச்சினைக்கும் வாய்தா வாங்கினால் எப்படி? பூட்டு உங்கள் அலுவலகத்துக்கு மட்டுமல்ல; மக்கள் நம்பிக்கைக்கும் பூட்டு போட்டதுபோல ஆகிவிடும்!
மக்கள் கேட்கும் ஒரே கேள்வி: “வக்கீல் சார்… நீங்கள் வாதாடுவது நீதிமன்றத்தில் அல்ல; மக்கள் மன்றத்தில். பூட்டைத் திறங்கள்… இல்லையென்றால் மக்கள் உங்கள் அரசியல் கதவைப் பூட்டிவிடுவார்கள்!”
முகுந்தன் தரப்பு இதற்குப் பதில் சொல்லுமா? அடுத்த வார அலுவலகத் திறப்பு விழாவில் அமைச்சர்களோடு பார்ப்போம்… மாடு சாட்சியாக!
