Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Anbil Mahesh

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம் எனக் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பைச் சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசி, பப்ளிக் அப்ரூவல் மற்றும் சிஎம்டிஏ அனுமதி உள்ளிட்ட சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்ததாக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.

இதையும் படியுங்க  “எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப்படை..? 25 கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் – உதயநிதி சரமாரி கேள்வி!”
Madras High Court

அப்போது, அன்பில் மகேஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், காவல்துறையின் சம்மனை ஏற்று, செப்டம்பர் 18-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜரானதாகத் தெரிவித்தார். அன்றைய தினம் காவல்துறையினர் 240 கேள்விகளைக் கேட்டு, எட்டு மணி நேரம் விசாரணை நடத்தியதாகவும், அந்த விசாரணைக்கு அன்பில் மகேஷ் முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், திருச்சி மற்றும் சென்னையில் உள்ள அன்பில் மகேஷுக்குச் சொந்தமான இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த பத்து ஆண்டுகளுக்கான வருமான வரிக் கணக்குகளைச் சமர்ப்பிக்கக் காவல்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், அதனை ஏற்று ஏழு ஆண்டுகளுக்கான வருமான வரிக் கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அன்பில் மகேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அன்பில் மகேஷ் எங்கும் தப்பிச் செல்ல மாட்டார் என்றும், சாட்சிகளைக் கலைக்க மாட்டார் என்றும், காவல்துறை விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் ஆஜராகத் தயாராக இருப்பதாகவும் அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். எனவே, அவரைக் கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் வலியுறுத்தினார். இந்த வழக்கில் ஏற்கெனவே மூன்று பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டிய அவர், வழக்குக்குத் தேவையான ஆவணங்கள் அனைத்தும் அரசுத் தரப்பிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படியுங்க  உள்ளாட்சியிலும் 'மைனாரிட்டி' ஆகக் கூடாது..! விசிக-விற்கு விஜய் கொடுத்த ‘பம்பர் ஆஃபர்’… அதிரும் அறிவாலயம்!

இதற்குப் பதிலளித்த அரசுத் தரப்பில் ஆஜரான குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஜான் சத்தியன், இந்த வழக்கின் முக்கியக் குற்றஞ்சாட்டப்பட்டவரான முத்துக்குமார் தலைமறைவாக இருப்பதாகத் தெரிவித்தார். குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்றும், இது பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான வழக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இதுவரை சுமார் ரூ.400 கோடி வரை வசூலிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரியவருவதாகவும், அன்பில் மகேஷுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டால், இந்தப் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான விவரங்கள் முழுமையாக வெளிவராமல் போகலாம் என்றும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முத்துக்குமாரை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்தான் பாதுகாத்து வருவதாகவும், முத்துக்குமார் அன்பில் மகேஷுடன் படித்தவர் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக விரிவாக விசாரிக்க வேண்டியிருப்பதால், அன்பில் மகேஷைக் காவலில் வைத்து விசாரிப்பது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அன்பில் மகேஷ் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இதையும் படியுங்க  "பிரபாகரன் உயிரோடு தான் இருக்கிறார்!" – மீண்டும் அதிரடி கிளப்பிய பழ. நெடுமாறன்! அலறும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம்!

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 hours ago at 6 hours ago