இஸ்லாம் மதத்தைத் தழுவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, அவர்கள் ஏற்கெனவே சார்ந்திருந்த சமூகத்தின் அடிப்படையில் இடஒதுக்கீட்டு உரிமையைத் தொடர முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, சமூக நீதிக்கு ஏற்பட்ட பின்னடைவு என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக சீராய்வு மனுவைத் தாக்கல் செய்து, மதம் மாறிய பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?
தமிழகத்தில் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள், தாங்கள் முன்பு சார்ந்திருந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லது பட்டியலினச் சமூகத்தின் அடிப்படையில் இடஒதுக்கீட்டுச் சலுகைகளைத் தொடர்ந்து பெற முடியுமா என்ற கேள்வி நீண்டகாலமாக விவாதத்தில் இருந்து வந்தது.
இந்த விவகாரத்தில், மதம் மாறியவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கு மதமாற்றம் மட்டுமே தகுதியாக இருக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் ஸ்ரீ சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
இந்து சமூக அமைப்பிலிருந்து பிற மதத்தைச் சார்ந்த சமூக அமைப்பிற்கு மாறிய ஒருவர், மதமாற்றத்திற்கு முன்பு கொண்டிருந்த சமூகப் பின்தங்கிய நிலையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் 16(4)-வது பிரிவின் கீழ் இடஒதுக்கீட்டைக் கோர முடியாது என்பதே உச்சநீதிமன்றத்தின் முக்கியக் கருத்தாகும். அதாவது, முந்தைய சமூகப் பின்னடைவு மட்டும் புதிய மதத்தில் அறிவிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்ற சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்காது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சர்ச்சையான தமிழக அரசின் அரசாணை
இந்த விவகாரத்தின் பின்னணியில், தமிழக அரசு கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி வெளியிட்ட அரசாணை உள்ளது. அந்த அரசாணையின்படி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC), சீர்மரபினர் (DNC) மற்றும் பட்டியலினச் சமூகத்தினர் (SC) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறினால், அவர்களைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள் பிரிவின் கீழ் கருதி, அதற்குரிய இடஒதுக்கீட்டுச் சலுகைகளைப் பெறுவதற்கான சமூகச் சான்றிதழ் வழங்க வழிவகை செய்யப்பட்டிருந்தது.
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் அரசுப் பணிகளில் 3.5 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. மதம் மாறியதால் ஏற்கெனவே சமூக ரீதியாகப் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள் இடஒதுக்கீட்டுப் பலன்களை இழக்கக் கூடாது என்பதே இந்த அரசாணையின் நோக்கமாகத் தமிழக அரசு தரப்பில் விளக்கப்பட்டது.
ஆனால், மதமாற்றம் செய்துகொள்வதன் மூலம், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகங்களில் ஒருவரைச் சேர்த்துக் கொள்ள முடியாது எனக் கூறி, தமிழக அரசின் அரசாணையைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவையும் தற்போது உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சமீர் அகமது வழக்கு: எப்படி உருவானது இந்தப் பிரச்சினை?
இந்த வழக்கு சமீர் அகமது என்பவர் தாக்கல் செய்த மனுவின் பின்னணியில் உருவானது. இந்து மதத்தில் பிறந்த அவர், 2015-ம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறிய பின்னர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்களுக்கான சமூகச் சான்றிதழைப் பெற முயன்றார். தமிழக அரசின் 2024-ம் ஆண்டு அரசாணையை அடிப்படையாகக் கொண்டு அவர் விண்ணப்பித்த நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சான்றிதழ் வழங்க மறுத்தனர். இதையடுத்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஒருவர் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதால் மட்டுமே தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சமூகங்களில் ஒருவராகிவிட முடியாது என்று தீர்ப்பளித்தது. மேலும், அரசின் அரசாணை அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றும் கூறியது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்தே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தது. தற்போது உச்சநீதிமன்றமும் உயர் நீதிமன்றத்தின் முடிவில் தலையிட வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்து அரசின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
இந்தத் தீர்ப்பில், பட்டியலினச் சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு தொடர்பான அரசியலமைப்புச் சட்ட விதிகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் பட்டியலினச் சாதிகள் ஆணை, 1950-ன் மூன்றாவது பத்தி, இந்து, சீக்கிய மற்றும் புத்த மதங்களைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே பட்டியலினச் சாதி அந்தஸ்தை வழங்குகிறது. இஸ்லாம் அல்லது பிற குறிப்பிடப்பட்ட மதங்களைச் சார்ந்தவர்களுக்கு அந்த அந்தஸ்து தானாகத் தொடராது என்ற சட்டநிலையையும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
எனினும், தற்போதைய வழக்கின் மையப்பொருள், மதம் மாறிய ஒருவர் தனது முந்தைய சமூகப் பின்னடைவை மட்டுமே காரணமாகக் கொண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டைப் பெற முடியுமா என்பதாகும். மதமாற்றம் மட்டுமே தகுதியாக இருக்க முடியாது என்பதே தீர்ப்பின் முக்கிய அம்சமாகும்.
கனிமொழி கடும் எதிர்ப்பு
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு எதிராக திமுக எம்.பி. கனிமொழி தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்லாம் சமயத்தைத் தழுவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீடு உரிமையைப் பெற முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது, சமூக நீதிக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு பின்னடைவாகும். சாதிய ஒடுக்குமுறைகளால் உருவான சமூகப் பின்தங்கிய நிலையை மதத்தின் அடிப்படையில் மட்டும் மதிப்பிடக் கூடாது. ஒருவர் மதம் மாறுவதால், அவர் இதுவரை எதிர்கொண்ட சமூக மற்றும் கல்வி சார்ந்த பின்தங்கிய நிலைகள் உடனடியாக மறைந்துவிடாது என்பதே இந்த விவகாரத்தில் எழுப்பப்படும் முக்கியமான கேள்வியாக உள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். மதம் மாறிய பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாக்கத் தேவையான சட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். தவெக அரசு இந்த விவகாரத்தில் திராவிட மாடல் அரசு மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளை உறுதியாகத் தொடர வேண்டும். மதம் மாறிய மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையை நிலைநிறுத்த வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
