அரசியல் பூகம்பம் கட்சியின் அடித்தளத்தையே அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் கனிமொழி இடையே பல நாட்களாக திரைமறைவில் ஓடிக்கொண்டிருந்த பனிப்போர் தற்போது அரசியல் திருப்பங்களுடன் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இதனால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உதயநிதி அணி என்றும் கனிமொழி அணி என்றும் இரு துருவங்களாக பிரிந்து நின்று களமாட தொடங்கி இருக்கிறார்களாம்.
கலைஞர் இருந்தவரை திமுகவில் அசைக்க முடியாத சக்தியாகவும் தனது ஆதரவாளர்களுக்கு சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் சீட்டு பெற்று தருபவராகவும் வலம் வந்த கனிமொழியின் செல்வாக்கு மு.க.ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்றதும் சற்று சரிய தொடங்கியது. இதனால் கனிமொழியின் ஆதரவாளர்களாக அறியப்பட்ட பல சீனியர்கள் அணிமாறினர். ஆனால் கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் கட்சி சந்தித்த தோல்விக்கு பிறகு உதயநிதியை தொடர்ந்து முன்னிலைப்படுத்த காய் நகர்த்தப்பட்டு வரும் முயற்சிகளுக்கு கனிமொழி மிக தீவிரமாக முட்டுக்கட்டை போட்டு வருகிறாராம்.

குறிப்பாக திமுகவில் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 77லிருந்து 110ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் அதில் தனது இளைஞரணி ஆதரவாளர்களை குவித்து ஒட்டுமொத்த கட்சியையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நினைக்கிறாராம் உதயநிதி. ஆனால் அதற்கு செக் வைக்கும் விதமாக எந்த காரணத்தை கொண்டும் நேரடி நியமனங்கள் கூடாது. முறையான உட்கட்சி தேர்தல் நடத்தி ஜனநாயக ரீதியாகத்தான் மாவட்ட செயலாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என கனிமொழி தரப்பு தலைமைக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருகிறதாம்.
இந்த உட்கட்சி சண்டையை மேலும் பற்றவைக்கும் விதமாக அமைந்ததுதான் சமீபத்தில் நடந்து முடிந்த மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் கடந்த சட்டமன்ற தேர்தலில் எழும்பூர் தொகுதியில் பரந்தாமனுக்கு சீட்டு கொடுக்காமல் தமிழன் பிரசன்னாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் தற்போது உதயநிதியோ பரந்தாமனை மதுராந்தகம் தொகுதியில் வேட்பாளராக களமிறக்கினார்.

அதேபோல் தாராபுரம் தொகுதியில் உதயநிதியின் நம்பிக்கைக்கு உரிய இளைஞரணி அமைப்பாளர் மாணிக்கவாசகத்தின் மனைவி சுகன்யாவுக்கு சீட்டு வழங்கப்பட்டது. ஆனால் உதயநிதியின் தன்னிச்சையான இந்த முடிவுகளும் உட்கட்சியில் நிலவிய கடும் முரண்பாடுகளும் கைகோர்த்ததால் இந்த இரண்டு தொகுதிகளிலும் திமுக படு தோல்வியை சந்தித்தது. உதயநிதியின் நேரடி ஆதரவாளர்களாக களமிறக்கப்பட்ட இவர்கள் இருவரும் படு தோல்வி அடைந்தது உதயநிதி தரப்பு கூறிய பலத்தை தகர்த்திருப்பதுடன் கனிமொழி தரப்புக்கு மிகப்பெரிய பலமாக மாறியிருக்கிறது.
இதற்கிடையில் உதயநிதியால் ஓரம் கட்டப்பட்ட சீனியர்கள் பலரும் வேறு வழியின்றி கனிமொழியின் பக்கம் தஞ்சம் புக தொடங்கி இருக்கிறார்களாம். குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோல்விக்கு காரணம் சேகர் பாபு தான் என்று கருதிய உதயநிதி அவரை முற்றிலுமாக ஒதுக்கி வைத்துள்ளாராம். இதனால் கடும் அப்செட்டில் இருந்த முன்னாள் அமைச்சர் சேகர் பாபு சற்றும் தாமதிக்காமல் கனிமொழியின் பக்கம் சாய்ந்திருப்பதாக கட்சியின் உள்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் வெளிப்பாடாக சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி மகளிர், தொண்டரணி சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவை முன்னின்று பிரம்மாண்டமாக நடத்தியவரே சேகர் பாபுதான். உதயநிதியால் புறக்கணிக்கப்பட்ட சேகர் பாபு கனிமொழியின் தோளோடு தோளாய் நின்று இந்த விழாவை வெற்றிகரமாக நடத்தி திமுக மேலிடத்திற்கு ஒரு அரசியல் மெசேஜை பாஸ் செய்துள்ளார்.
திமுகவின் உட்கட்டமைப்பில் உதயநிதி மற்றும் கனிமொழி அணிகளுக்கு இடையே உருவாகியுள்ள அதிகார போட்டி சாதாரண ஒரு பனிப்போரை தாண்டி எதிர்கால அரசியல் திசையை தீர்மானிக்கும் பெரும் திருப்பமாக மாறியிருக்கிறது. தேர்தல் பின்னடைவுகள் மேடைகளிலேயே வெளிப்பட்ட அதிருப்தி பேச்சுகள் உள்ளிட்டவை தலைமைக்கு மிகப்பெரிய சவாலை உருவாக்கி உள்ள நிலையில் இந்த உட்கட்சி மோதல்கள் மற்றும் புதிய அணி சேர்க்கைகள் திமுகவின் அடுத்த கட்ட அரசியலில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்த போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
