Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Udhayakumar

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் மீண்டும் முதல்வராகவும் முடியாது, எதிர்க்கட்சித் தலைவராகவும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்று கூறப்படுவதைச் சாடியுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தவர்களைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

தாராபுரத்தில் நிலவும் குடிநீர்ப் பஞ்சம், ஆளுங்கட்சியின் அதிகாரப் பயன்பாடு, இடைத்தேர்தல் வெற்றிகள், அதிமுகவிலிருந்து விலகியவர்களின் அரசியல் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் தனது பேட்டியில் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

குடிநீருக்குக்கூட அரசியல் செய்யப்படுகிறதா?

தாராபுரத்தில் குடிநீர்ப் பஞ்சம் கடுமையாக நிலவி வருவதாகக் குறிப்பிட்ட உதயகுமார், மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதில்கூட அரசியல் பார்க்கப்படுவதாகக் குற்றம்சாட்டினார்.

“அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு வாக்களித்தால்தான் தண்ணீர் கிடைக்கும் என்ற நிலை உருவாகிறதா? தாராபுரத்தில் குடிநீர்ப் பஞ்சம் பயங்கரமாக இருக்கிறது. இத்தகைய சூழலில் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுதான் அரசாங்கத்தின் கடமை. கடந்த பல கட்சிகள் இணைந்த கூட்டணியாகவும், ஆளுங்கட்சியின் அதிகார பலத்துடனும் தேர்தலைச் சந்திப்பதற்கும் தனித்துப் போட்டியிடுவதற்கும் இடையே வேறுபாடு இருக்கிறது.

இதையும் படியுங்க  கைவிரித்த முக்குலத்தோர்..! சாத்தூரில் நயினார் சவுக்கடி..? குதூகலத்தில் அண்ணாமலை அடிப்பொடிகள்
EPS

“கடந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக போட்டியிட்டபோது அவர்களுடன் இத்தனை கட்சிகள் கூட்டணியில் இல்லை. ஆனால் தற்போது விசிக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இத்தனை கட்சிகள் சேர்ந்துள்ளதுடன், ஒட்டுமொத்த அமைச்சரவையையும் களத்தில் இறக்கி, முதலமைச்சரும் இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சாலை வழியாகச் சென்று, மாட்டு வண்டி ஓட்டி, முருங்கைக்காய் பறித்தெல்லாம் வாக்குகளைப் பெற வேண்டிய சூழல் இருக்கிறது.

ஆளுங்கட்சியின் பலத்தையும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவையும் பயன்படுத்திய பின்னரே இத்தகைய தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் இருந்தபோதே, விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றது. விக்கிரவாண்டி திமுகவின் தொகுதியாக இருந்தது. நாங்குநேரி காங்கிரஸ் கட்சியின் தொகுதியாக இருந்தது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், அதிமுக ஆளுங்கட்சியாகவும் இருந்தபோது, அந்த இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றது. அதுவும் எடப்பாடியார் தலைமையில்தான் வெற்றி பெற்றோம்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் தோல்வி மட்டுமே கிடைத்ததாக விமர்சிப்பவர்கள், கடந்த கால தேர்தல் முடிவுகளையும் நினைவில் கொள்ள வேண்டும். அதிமுகவில் இருந்து விலகிச் சென்றவர்கள் தெரிவிக்கும் விமர்சனங்களுக்குப் பின்னால் தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்கிறது.

இதையும் படியுங்க  'ஏன் இத்தனை நாளா வாய் திறக்கல?' - மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலை துளைத்தடுத்த மக்கள் கேள்விகள்!"

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தவர்களுக்கு அரசியல் அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் வழங்கியது அதிமுகதான். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட உரிமை இருக்கிறது. தங்களுக்குப் பிடித்த தலைவரையும், கட்சியையும் தேர்வு செய்து செயல்படுவதற்கு ஜனநாயகத்தில் உரிமை உண்டு. அதில் யாரும் தலையிட முடியாது.

ஆனால், உங்களுக்கு அடையாளம் கொடுத்து, அங்கீகாரம் கொடுத்து, அரசியல் ரீதியாக வளர்த்து, அதிகாரத்தையும் வழங்கிய அதிமுகவிலேயே இருந்துகொண்டு, பின்னர் அந்தக் கட்சியை அவதூறாகப் பேசுவதும், அதன் வாக்கு வங்கியைச் சிதைக்க முயற்சிப்பதும் எந்த வகையில் நியாயம்?

அதிமுக உங்களுக்கு அடையாளம் கொடுத்து அங்கீகாரம் வழங்கியதால்தான் இன்று விஜய்க்கு அருகில் நிற்க முடிகிறது. இல்லையென்றால் விஜய் உங்களைத் திரும்பிப் பார்த்திருப்பாரா? தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுகவினர், தங்களுக்குக் கிடைத்த புதிய அரசியல் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் அதற்காகத் தங்களை வளர்த்த கட்சியை இழிவுபடுத்த வேண்டிய அவசியமில்லை.

eps

அதிமுகவிலிருந்து விலகியவர்களே அந்தக் கட்சியின் வாக்கு வங்கியைப் பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள். மற்ற கட்சியினரைவிட, அதிமுகவிலிருந்து சென்றவர்களே அதிமுகவின் வாக்கு வங்கியைச் சிதைக்க வேண்டும் என்று முயற்சிப்பதைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது. இங்கு சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி, தாங்கள் முன்பு இருந்த கட்சிக்கே பின்னடைவை ஏற்படுத்த முயற்சிப்பதாகத் தோன்றுகிறது.

இதையும் படியுங்க  திமுகவை அழிப்பது.. அதிமுகவை அரவணைப்பது.. விஜய்யின் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன? கே.சி.பழனிசாமி!

அரசியல் மாற்றம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட முடிவு என்றாலும், ஒரு கட்சியில் இருந்து விலகிய பிறகு அந்தக் கட்சியைத் திட்டமிட்டுத் தாக்குவதும், அதன் ஆதரவாளர்களின் நம்பிக்கையைச் சிதைக்க முயற்சிப்பதும் ஏற்புடையதல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 days ago at 6 days ago