Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Parandhaman

மதுராந்தகம் இடைத்தேர்தல் களம் தற்போது தமிழக அரசியலில் மிகுந்த விறுவிறுப்பான விவாதப் பொருளாக மாறியுள்ளது. தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ப. பரந்தாமன், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனாவுக்கு நேரடி சவால் விடுத்துள்ளார்.

மதுராந்தகம் தொகுதி மக்கள் தன்னிடம், “அக்டோபர் 9-ஆம் தேதி ஆதவ் அர்ஜுனாவை ரெடியா இருக்கச் சொல்லுங்க” என்று கூறியதாக பரந்தாமன் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியாகும் அக்டோபர் 9-ஆம் தேதி, ஆதவ் அர்ஜுனா தனது ராஜினாமா கடிதத்துடன் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.

தவெக-வின் சாதனைகளைக் கூறி நான்கு நிமிடங்கள் கூட வாக்குச் சேகரிக்கத் தகுதியில்லாத நிலையில் ஆதவ் அர்ஜுனா இருப்பதாகவும் பரந்தாமன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த விவகாரம், ஆதவ் அர்ஜுனா முன்வைத்த சவாலில் இருந்தே தொடங்கியதாக கூறப்படுகிறது. மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெகவை விட திமுக ஒரு வாக்கு கூடுதலாகப் பெற்றால், தான் வகித்து வரும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று ஆதவ் அர்ஜுனா முன்னதாக சவால் விடுத்திருந்தார்.

இதையும் படியுங்க  விஜயை வீழ்த்தும் வியூக வகுப்பாளர்..! நண்பர்களை இறக்கி ஜான் ஆட்டம்..! குமுறும் நிர்வாகிகள்..!

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பரந்தாமன், “தவெக-வின் ரகசிய குதிரை பேரங்களை நாங்கள் வெட்டவெளிச்சமாக்கியதால் ஆதவ் அர்ஜுனா பதற்றமடைந்துள்ளார். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அக்டோபர் 9-ஆம் தேதி அவர் தனது ராஜினாமா கடிதத்துடன் தயாராக இருக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தவெக பக்கம் இழுப்பதற்காக ஆதவ் அர்ஜுனா குதிரை பேர முயற்சியில் ஈடுபட்டதாகவும் பரந்தாமன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த ரகசிய பேரத்தை திமுக அம்பலப்படுத்தியதாலேயே ஆதவ் அர்ஜுனா பதற்றமடைந்து சவால் விடுத்து வருகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, “ஆமாங்க… நாங்க சோபா அனுப்பி வச்சோம்… அவங்களை ஒண்ணும் விலைக்கு வாங்க முடியாதுல” என்று ஆதவ் அர்ஜுனா ஆவேசமாகப் பேசியதாகக் கூறப்படும் கருத்து, சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Aadhav Arjuna

தேர்தல் பிரசாரத்தின்போது திமுக தங்களைத் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதாகவும் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார். மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னை ஏதோ “சூப்பர் ஸ்டார்” என்று நினைத்துக்கொண்டு பிறரைக் கேலி செய்வதாகவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதையும் படியுங்க  கரூர் விவகாரம்... விஜய் மீது வழக்குப் போடச் சொன்னேன்... திருமா பகீர்! அலறும் தவெக!

அதேநேரத்தில், “ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்; ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வோம்” என்றும் ஆதவ் அர்ஜுனா சவால் விடுத்துள்ளார். தவெக இந்தத் தேர்தலில் மக்களுக்கு ஒரு ரூபாய் கூட பணமாக வழங்காமல் நேர்மையாகப் போட்டியிடும் என்றும், மக்களின் ஆதரவுடன் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சவால் விவகாரம் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் தவெகவை விமர்சித்துள்ளார். “நுணலும் தன் வாயால் கெடும்” என்ற பழமொழிக்கு ஏற்ப ஆதவ் அர்ஜுனா தேவையற்ற சவால்களை விடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Premalatha

மக்கள் துரோகிகளுக்குத் துணை நிற்க மாட்டார்கள் என்றும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆதவ் அர்ஜுனா எங்கு முகத்தை வைத்துக்கொள்வார் என்று பார்ப்போம் என்றும் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

இதற்கிடையே, திமுக வேட்பாளர் பரந்தாமன் மீது தவெக தரப்பில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயகிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி, வாக்குப்பதிவு நாளன்று ஊடகங்கள் வாயிலாக நேரடியாக வாக்குச் சேகரிக்கும் நோக்கில் பரந்தாமன் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியதாக தவெக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  "ட்வீட்டை டெலிட் செய்தாலும் தப்ப முடியாது!" நீதிமன்றப் படியேறிய அரசியல் யுத்தம்! ஸ்டாலினுக்கு சென்னை உயர் நீதிமன்றம் போட்ட கிடுக்கிப்பிடி உத்தரவு!

அரசியல் சவால்களுக்கு இடையே, தொகுதி மக்களின் உள்ளூர் பிரச்னைகளையும் பரந்தாமன் முன்வைத்துள்ளார். மதுராந்தகம் தொகுதி முழுவதும் போக்குவரத்துப் பாதுகாப்பு மிகவும் சீர்கேடாக இருப்பதாகவும், தான் வெற்றி பெற்றவுடன் மேற்கொள்ளும் முதல் நடவடிக்கையாக தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துப் பாதுகாப்பை பலப்படுத்துவேன் என்றும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இரு தரப்பினரும் முன்வைத்துள்ள சவால்கள் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இரு தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் அக்டோபர் 9-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான இந்த அரசியல் மோதலில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதுடன், முன்வைக்கப்பட்ட சவால்களில் யார் நிலைநிறுத்தப்படுவார்கள் என்பதையும் அரசியல் வட்டாரங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

50 minutes ago at 50 minutes ago